வியாழன், 8 மார்ச், 2018

காலா வந்தாலும் திரையரங்குகள் திறக்கப்படாது!.. திரையரங்க உரிமையாளர்கள் ....

காலா வந்தாலும் திரையரங்குகள் திறக்கப்படாது!மின்னம்பலம்: திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கப் பொதுசெயலாளர் பன்னீர்செல்வம், திருப்பூர் சுப்பிரமணி மற்றும் அனைத்து மாவட்டங்களில் இருந்து 180க்கும் மேற்பட்ட திரையரங்க உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்கள் ரிலீஸ் செய்வதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவு அமுலில் உள்ளது. இது சம்பந்தமாக முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் திரையுலகினர் எதிர்பார்த்த நிலையில், மார்ச் 16 முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையறையின்றி தியேட்டர்களை மூடுவது என்று இன்றைய கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர்.

கடந்த முறை திரையரங்குகள் வேலை நிறுத்தம் செய்தபோது கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் ஒப்புதல் தரப்பட்டது. அதற்கான அரசு ஆணை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.
எனவே ஏற்கெனவே அரசு ஒப்புக்கொண்ட கீழ்காணும் எங்களது கோரிக்கைகளுக்கு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதற்காகத் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிப்பது என முடிவுசெய்யப்பட்டது.
கோரிக்கைகள்
8% கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்
பெரிய திரையரங்குகளில் சீட் குறைக்க உடனடியாக அனுமதி தர வேண்டும்.
தியேட்டர் லைசென்ஸ் 3 வருடத்துக்கு ஒரு முறை மட்டும் புதுப்பிக்க அனுமதி
திரையரங்கு பராமரிப்பு கட்டணமாக A/C க்கு திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுகு 5 ரூபாயும், Non A/C தியேட்டருக்கு 3 ரூபாயும் பிடித்தம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
மேற்கண்டகோரிக்கைகளுக்கு ஏற்கெனவே அரசு ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உடனடியாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்றும், தமிழக அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் ஒரு வார காலத்திற்குள் அரசாணைபிறப்பிக்காத பட்சத்தில் மார்ச் 16 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை திரையரங்குகளை மூடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நமது போராட்டம் தமிழக அரசுடன் தானே தவிர தயாரிப்பாளர்களுடன் இல்லை. நமக்கு இருக்கும் பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம். சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம் என எந்த பாரபட்சமும் பார்க்காமல், எந்தப்படம் ரிலீஸானாலும் தியேட்டர்களை மூடும் முடிவிலிருந்து பின்வாங்கக் கூடாது. ஒரு படத்தில் லாபம் கிடைக்கும் என்பதற்காக வருடம்தோறும் வெளியாகும் படங்களில் நாம் நஷ்டமடைய வேண்டாம். காலா வந்தாலும், கோரிக்கை நிறைவேறாமல் திரையரங்குகளைத் திறக்கக் கூடாது எனத் தீர்மானங்களை விளக்கிப் பேசிய திருப்பூர் சுப்பிரமணி கூறினார்.
- இராமானுஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக