சனி, 3 மார்ச், 2018

காவிரி மேலாண்மை வாரியம்... ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் விவசாயிகள்!

tamilthehindu :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் மார்ச் 6ஆம் தேதியன்று சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் விவசாயிகள்!சென்னை தலைமைச்செயலகத்தில், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சியினரும் பிரதமரைச் சந்திப்பதென்று முடிவானது.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரையும் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி மறுப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து, இன்று (மார்ச் 3) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், அப்போது, வரும் மார்ச் 6ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடவுள்ளதாகத் தெரிவித்தார்.

“தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளைச் சந்திக்காமல், தமிழர்களை அவமானப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. இதனைக் கண்டித்து, மார்ச் 6ஆம் தேதியன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை ஆளுநர் மாளிகை முன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பிரதமர் வரும் வரையிலும், இந்த முற்றுகைப் போராட்டம் தொடரும்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று (மார்ச் 2) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பி.ஆர்.பாண்டியன். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று கூறியிருந்தார்.
“காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் அடிப்படையில், தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்களைச் சந்திக்க பிரதமர் மறுப்பு தெரிவிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசுதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்துகிறது. மத்திய அரசுதான் கர்நாடகாவுக்குத் துணை போகிறது. தமிழக உரிமைகள் பறிபோவதற்குத் துணைபோகிற மோடி அரசாங்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அவமதிக்குமேயானால், பிரதமர் மோடி மீது உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடருவோம்” என்று தெரிவித்திருந்தார் பி.ஆர்.பாண்டியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக