ஞாயிறு, 18 மார்ச், 2018

நடராஜன் கவலைக்கிடம்: பரோல் கேட்கும் சசிகலா

நடராஜன் கவலைக்கிடம்: பரோல் கேட்கும்  சசிகலாமின்னம்பலம் : சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கணவரைப் பார்ப்பதற்காக சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய பார்வை ஆசிரியரும், சசிகலா கணவருமான நடராஜன் கல்லீரல் பிரச்சினை காரணமாகச் சென்னையை அடுத்த குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கடந்த அக்டோபர் மாதம் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடராஜன், வெளிநிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று நடராஜனுக்குத் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடராஜன் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று (மார்ச் 18) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் நேற்றிரவு நடராஜனைச் சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நலம் விசாரித்துள்ளனர். இதுகுறித்து வைகோ கூறுகையில், ‘நடராஜன் என்னுடைய 50 ஆண்டுகால நண்பர், நான் பார்க்கச் செல்லும்போது அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் விரைவில் உடல்நலம் பெற்று வர வேண்டும்’ என்று கூறினார். மேலும் இன்று மருத்துவமனைக்கு வருகை தந்த பழ.நெடுமாறன், நடராஜன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரைப் பார்ப்பதற்காக பெங்களூரு சிறையில் சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக