திங்கள், 5 மார்ச், 2018

எம்ஜிஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்; இனிதான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள் ரஜினிகாந்த்


சென்னை, ரஜினிகாந்த் பேசுகையில் இது ஒரு பல்கலைக்கழக விழா என்று நினைத்தேன்.,
இது கட்சி மாநாடு போல உள்ளது. இதை நான் அரசியல் மேடையாக ஆக்கக்கூடாது, இங்கு அரசியல் பேசக்கூடாது என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பின் திரியை ஏ.சி.சண்முகம் பற்ற வைத்துவிட்டார் என சிரிப்புடன் கூறினார்.
அவருடைய அரசியல் பேச்சை கேட்க ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்கள். ரஜினிகாந்த் பேசுகையில், அரசியல் பேசக்கூடாது என்று அழுத்தமாக இருந்தேன். ஆனால் பேசும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளேன்.
சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறேன், மற்றவைகளை வேறு விழாக்களில் வைத்துகொள்வோம் என்றார். மேலும் அவர் பேசுகையில், எம்.ஜி.ஆரை போல சினிமா உலகில் இருந்து இன்னொருவர் அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள்.
பேண்ட்-சர்ட் போட்டு மேக்கப் போட்டு கதாநாயகிகளுடன் டூயட் பாட நாங்கள் வரவில்லை. நீங்கள் ஏன் கரைவேட்டி கட்டி எங்கள் வேலைக்கு வருகிறீர்கள்? என்கிறார்கள். அய்யா நான் மற்றவர்களை பற்றி பேசவில்லை. என்னை பற்றி மட்டும் சொல்கிறேன்.


என் வேலையை நான் சரியாக செய்துகொண்டிருக்கிறேன், நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவில்லையே? 1996-ல் இருந்து அரசியல் என்னும் நீர் என் மீதும் பட்டுவிட்டது. அதனால் அரசியல் நெளிவு சுளிவுகளை தெரிந்துகொள்ள ஆரம்பித்து வந்தேன். கருணாநிதி, மூப்பனார், சோ அவர்களுடன் பழகி நானும் கொஞ்சம் அரசியல் கற்று இருக்கிறேன்.

எங்கெங்கே தப்பு நடக்கிறது, அதை எப்படி தடுப்பது என்று எனக்கு தெரியும். எனக்கும் மக்களுக்கு செய்யவேண்டிய கடமை இருக்கிறது. எனவே தான் அரசியலுக்கு வருகிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதும் என்னை ரத்தின கம்பளியில் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் ஏளனம் செய்கிறார்கள். அரசியல் பாதையானது பூ மாதிரி கிடையாது என்பது எனக்கும் தெரியும், அரசியல் பாதையானது, முள்ளுகள், பாம்புகள், கற்கள் நிறைந்தது என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். இருந்தும் ஏன் ஏளனம் செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை.

இந்த வயதிலும் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால், ஏன் ஏளனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த திட்டும் அரசியல் வேண்டாம். இதனை இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என சொல்கிறார்கள். சினிமாவில் இருந்துவரும் யாரும் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது. சினிமாவில் இருந்து அவரை போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள்.

சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. எம்.ஜி.ஆர். யுக புருஷர், பொன்மனச் செல்வன், மக்கள் திலகம். இன்னும் நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரை போன்று யாராலும் வர முடியாது. அவரே மீண்டும் பிறந்து வந்தால் மட்டும்தான் உண்டு.

எம்.ஜி.ஆரை போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால் அவனை விட பைத்தியக்காரன் யாரும் இருக்கமுடியாது. ஆனால் எம்.ஜி.ஆர். கொடுத்தர் தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையானது உள்ளது. மக்களுடைய ஆசிர்வாதம், இளைஞர்கள் பங்களிப்பு, சிறந்த தொழில்நுட்பம், நல்ல சிந்தனையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் திறமைசாலிகளை வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். போன்ற ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.

ஆன்மிக அரசியல் என்று என்னிடம் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, சாதி-மத சார்பற்ற அறவழியில் நடப்பது தான் ஆன்மிக அரசியல் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தூய்மை தான் ஆன்மிகம். இறை நம்பிக்கைத்தான் ஆன்மீக அரசியல் என்றார். இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள், நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான் என்றும் ரஜினிகாந்த் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக