ஞாயிறு, 18 மார்ச், 2018

ஸ்டாலின் :நம்பிக்கையில்லா தீர்மானம்: நல்ல நேரத்தை நழுவவிடக் கூடாது!

நம்பிக்கையில்லா தீர்மானம்: நல்ல நேரத்தை நழுவவிடக் கூடாது!மின்னம்பலம :காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்று உண்மையிலேயே எண்ணமும் உறுதியும் முதலமைச்சருக்கு இருக்குமானால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்’ என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவுள்ளது. இதற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ள மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக அரசு ஆதரிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (மார்ச் 17) விடுத்துள்ள அறிக்கையில், ‘ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்திட மறுத்து விட்டது மத்திய பாஜக அரசு என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, ஆந்திர மாநில உரிமையை நிலைநாட்டுவதற்காக மத்திய அமைச்சரவையிலிருந்து தனது அமைச்சர்களை ராஜினாமா செய்யவைத்து, தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே விலகிவிட்டார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. மாநில அரசுகளின் உரிமைகளையும், அரசியல் சட்டத்தின்படி பொதுப் பட்டியலில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களையும்கூட ஆக்கிரமித்துக்கொள்ளும் மத்திய பாஜக அரசின், ‘பெரியண்ணன்’ போக்கைக் கண்டித்து சந்திரபாபு நாயுடு எடுத்திருக்கின்ற முடிவை மாநிலச் சுயாட்சிக்காகத் தொடர்ந்து போராடிவரும் திமுக வரவேற்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைத்து, மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப்போகச் செய்து, ‘நீட்’ தேர்வை அவசர அவசரமாகக் கொண்டுவந்து தமிழகத்தின் கல்வி உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல், சட்டமன்ற மாண்பையும் ஏழரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுகளையும் மத்திய பாஜக அரசு அவமதித்துள்ளது’ என்று குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், ‘தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், ஆறு வாரக் காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இந்தியாவின் மாட்சிமை மிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மத்திய அரசு மதிக்கத் தவறி, இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை, கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்து வேண்டுமென்றே தாமதித்து விடாப்பிடியாக மறுத்து வருகிறது’ என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடைசி வாய்ப்பாக, இப்போது தெலுங்கு தேசம் கட்சி, மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள  ஸ்டாலின், ‘மக்களவையில் திமுக இடம்பெற்றிருந்தால், தீர்மானத்துக்கு ஆதரவளிப்போம் என்று அடுத்த நொடியே அறிவித்திருப்போம். ஆனால், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பதாகக் கூறிவரும் அதிமுக, காவிரி மற்றும் நீட் பிரச்சினைகளில் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கு இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ‘மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிப்போம்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தைத் தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் ஆறு வார காலத்துக்குள் அமைய வேண்டும் என்ற எண்ணமும் உறுதியும் முதலமைச்சருக்கு இருக்குமானால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கத் துணிச்சலாக முடிவெடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும். நல்ல நேரம் இது. நழுவவிடக் கூடாது’ என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக