வெள்ளி, 23 மார்ச், 2018

கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிமன்ற விடுப்பு வழங்கி உள்ளது !

கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்!மின்னம்பலம் :ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி அன்னிய முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத்தருவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை டெல்லி அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 3 முறை அவரை காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தியது.
கடந்த 12ஆம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்தியை மார்ச் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிபதி சுனில் ராணா உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி திகார் சிறையில் கார்த்தி அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடவேண்டுமென்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அப்போது,கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தால் தனக்கு எதிரான ஆதாரங்களை அழித்துவிடுவார் என்று சிபிஐ தரப்பு கூறியது. கார்த்தியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கார்த்தி சிதம்பரம் ஆதாரங்களை அழித்துவிடுவார் என்று சொன்னதை சிபிஐ நிரூபித்தால், இந்த மனுவையே திரும்பப் பெற்றுக்கொள்வதாக வாதம் செய்தார். இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கில் இன்று(மார்ச் 23) தீர்ப்பு வழங்கப்பட்டது. கார்த்திக்கு ஜாமீன் வழங்குவதாக அறிவித்த நீதிபதி எஸ்.பி.கார்க், பிணைத்தொகையாக ரூ.10 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும், வங்கிக் கணக்குகளை மூடத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.
முன்னதாக, , ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை மத்திய அமலாக்கத் துறை கைது செய்ய மார்ச் 26ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக