வியாழன், 1 மார்ச், 2018

சமூக நீதி காத்த ரத்தினவேல் பாண்டியன்!-.. இறுதி நிகழ்வில் நெகிழும் வழக்கறிஞர்கள்...

நீதிபதிவிகடன் பிரதீப்.த.ரே : உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் தனது 89-வது வயதில் இன்று மறைந்துவிட்டார். இவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர் எனும் ஊரில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரத்திலும் கல்லூரி கல்வியைத் திருநெல்வேலி தூய சேவியர் கல்லூரியிலும் முடித்தார். 1954-ம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். திருநெல்வேலியில் கிரிமனல் வழக்குகளை நடத்தும் பிரபல வழக்கறிஞராக விளங்கினார். அவருடனான நினைவுகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார், தி.மு.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
1. அக்காலத்தில் வெளிவந்த பிரபல திரைப்படமான 'சீவலப்பேரி பாண்டி' யின் அசல் வழக்கை திருநெல்வேலியில் நடத்தியவர் ரத்தினவேல் பாண்டியனே ஆவார்.

2. இவரோடு ஜூனியர் வழக்கறிஞராக இருந்தவரே ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. ’

3. ரத்தினவேல் பாண்டியன் 1960-களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சீனியர் வழக்கறிஞராக மட்டுமல்லாமல் நெல்லை மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளராகவும் விளங்கினார். அப்போது இவருடைய வழக்கறிஞர் அலுவலகம் திருநெல்வேலி முருகன்குறிச்சியில் இருந்தது. வைகோ மீது இவருக்குத் தனிப்பற்று உண்டு. தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களுக்குச் செல்வதானால் வைகோவை அழைத்துக் கொண்டுதான் செல்வார்.


4. சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோற்றபின் 1971-ம் ஆண்டில் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்ந்தார். பின்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்தார். பின் 1988-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்று டெல்லிக்கும் சென்றார். மண்டல் கமிஷன் வழக்கிலும், கர்நாடக அரசை பிரிவு 356ஐ கொண்டு கலைத்த எஸ். ஆர். பொம்மை வழக்கிலும் விசாரித்து முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர்.

5. ரத்தினவேல் பாண்டியன் 6-வது ஊதியக்குழுத் தலைவராக இருந்தார். இவருடைய பரிந்துரைகளை ஏற்று அவற்றை கவலேகர் நடைமுறைப்படுத்தினார்.
KS
6. சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்து வெளியிட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த 11 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வில் இவர் இடம் பெற்றதால் 6-5 என்று வந்த தீர்ப்பு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. அந்தவகையில் சமூக நீதி காத்தவர் இவர்.

7. ரத்தினவேல் பாண்டியனின் மறைவு பேரிழப்பாகும். தன் உயரிய பணிகளுக்காக நீண்ட காலம் நினைவுகூரப்படுவார் ரத்தினவேல் பாண்டியன்... என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக