திங்கள், 26 மார்ச், 2018

BBC :கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது,,,, முன்னாள் தலைவர்


ஸ்பெயினின் கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ்
பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வழங்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் ஸ்பெயினால் தேடப்பட்டு வரும் பூஜ்டிமோன், டென்மார்க்கில் இருந்து பெல்ஜியத்திற்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜயுமே அலன்சோ-குயவில்லா கூறியுள்ளார்.
கேட்டலோனியா பிரிந்து தனிநாடு ஆவதற்கு ஆதரவளித்த, தடை செய்யப்பட்ட மக்கள் கருத்து கணிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தியதில் இருந்து, பெல்ஜியத்திற்கு நாடு கடந்து பூஜ்டிமோன் வாழ்ந்து வருகிறார்.
ஐரோப்பிய கைது வாரண்ட் ஒன்று சமீபத்தில் அவருக்கு எதிராக வழங்கப்பட்டது.
ஸ்பெயினில் பூஜ்டிமோன் எதிர்கொண்டு வருகின்ற தேச துரோகம் மற்றும் கலக குற்றச்சாட்டுக்கள் 30 ஆண்டுகால சிறை தண்டனையை அவருக்கு பெற்று தரலாம். 

சமீபத்திய தலைவர் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, புதிய தலைவரை தேர்தெடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக வெள்ளிக்கிழமை பிரிவினைவாத தலைவர்கள் அறிவித்துள்ளதால், கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கலகம், மோசடி அல்லது நாட்டுக்கு கீழ்படியாமை போன்ற குற்றங்களுக்காக 25 கேட்டலோனிய தலைவர்கள் விசாரிக்கப்பட்ட வேண்டும் என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, வெள்ளிக்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருங்கூட்டமாக போலீஸோடு மோதியுள்ளனர்.
இந்த நீதிமன்ற தீர்ப்புக்கள் கேட்டலோனிய விடுதலை இயக்கத்திற்கு கடுமையான சவால் என்று கருதப்படுகிறது.
பெரும்பாலான தலைவர்கள் அனைவரும் பெரிய சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
பிரிவினையை ஆதரித்து நடத்திய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து, கேட்டலோனிய பிரதேச அரசை கலைத்த ஸ்பெயின் மத்திய அரசு, நேரடி ஆட்சியை அமல்படுத்தியது.
பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கேட்டலோனிய விடுதலைக்கு ஆதரவான கட்சிகள் பெரும்பான்மைக்கு சற்று அதிக இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக