புதன், 21 மார்ச், 2018

திராவிட மொழி குடும்பம் 4500 ஆண்டுகள் பழைமையானது- புதிய ஆய்வில் தகவல்

திராவிட மொழி குடும்பம் 4500 ஆண்டுகள் பழைமையானது- புதிய ஆய்வில் தகவல்மாலைமலர் :இந்தியாவில் சுமார் 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழி குடும்பம் 4500 ஆண்டுகள் பழைமையானது. இந்நாட்டின் பூர்வகுடிகள் திராவிடர்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெர்லின்: ஜெர்மனியை சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் ப்லாங்க் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியாவின் டேராடூன் நகரில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவை சேர்ந்து உலக மொழிகளின் பழைமை தொடர்பான தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வு குழுவினர் திராவிட கிளை குடும்பங்களில் தங்களது தாய்மொழியை பேச்சுவழக்கில் கொண்டுள்ள ஏராளமான மக்களை நேர்காணல் செய்தனர்.
சமஸ்கிருதம் போல உலகின் தொன்மை மிக்க செம்மொழியாக தமிழ் விளங்கி வருவதாகவும், ஆனால், சமஸ்கிருதம்போல் காலப்போக்கில் வழக்கொழிந்துப் போகாமல் பண்டைக்காலத்துக்கும் நவீன யுகத்துக்கும் இடையில் இணைப்பு பாலமாக செய்யுள்கள், கவிதைகள், மதசார்பற்ற மற்றும் பக்திசார்ந்த உரைநடைகள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை தமிழ் மொழியில் எழுத்து வடிவில் இருந்து வருவதாகவும் இந்த ஆய்வு குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்தியா மற்றும் இந்தியாவின் மத்திய பகுதிகளிலும் அருகாமையிலும் உள்ள நாடுகளிலும் 80 மொழி வகைகளாக சுமார் 22 கோடி மக்களால் பேசப்பட்டுவரும் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழைமையானது என்பது தெரியவந்துள்ளது.

திராவிட மொழியின் தோற்றக்காலம், முதன்முதலில் அது பேசப்பட்ட பகுதி தொடர்பாக அறுதியிட்டு கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழைமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாசார மேம்பாடுகளில் ஆரம்பகாலகட்டமும் ஒத்துப்போவதாகவும் இக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்மூலம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-ஆரியர்கள் (இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியவர்கள்) எனப்படும் ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக