திங்கள், 12 மார்ச், 2018

2ஜி குறித்து மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை! ... சிதம்பரம் ஞானோதயம் ...

2ஜி குறித்து மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை!
மின்னம்பலம் :‘2ஜி விவகாரத்தில் தொலைத்தொடர்பு துறை மீதான இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் அறிக்கை மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று’ என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதியுள்ள Speaking Truth to Power என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன்ஸ் ஆண்கள் பள்ளி அரங்கத்தில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிதம்பரம் பேசுகையில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவை தொலைத்தொடர்பு மற்றும் மின் துறை. இந்தத் துறைகளுக்கு வகுக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பாக முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன.
தொலைத்தொடர்பு துறை குறித்து இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கை அலுவலக அதிகாரியின் அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை குறித்து மிகைப்படுத்தப்பட்டு அறிக்கை தரப்பட்டது. தொழில்முறை பிரச்சினைகளை தொழில்முறை பிரச்சினையாகவே அணுக நாங்கள் தவறிவிட்டோம்.
ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் ரீதியான திருப்பங்கள் தருவது மிகவும் வசதியானது. அதற்கான விலையை மொத்த நாடும் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
இந்த விவகாரத்தில் இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றின” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் தேசிய வங்கி மோடி தொடர்பாக பேசுகையில், “பஞ்சாப் தேசிய வங்கியில் சமீபத்தில் ரூ.12,500 கோடி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி அனைத்தும் ஒரே துறையான நகைகள் தயாரிக்கும், விற்பனை செய்யும் துறையில் நடந்துள்ளது. இந்த மோசடியின் பிரதான குற்றவாளிகள் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மாநிலம் குஜராத். நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த மோசடி நடக்கவில்லை.
ஆனால், பல்வேறு தரப்பட்ட அதிகாரிகள், மக்கள் அவர்களுக்கு உதவி இருக்கலாம். நீரவ் மோடிக்கு குஜராத்தில் இருந்து யார் உதவி இருக்கலாம், எப்படி உதவி இருக்கலாம். அது குறித்து எனக்கு ஏதும் தெரியாது” என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து இருக்கிறது, வேலையின்மை அதிகமாக இருக்கிறது என்று பிரதமர் மோடிக்குத் தெரியும். அதைத் தெரிந்துகொண்டே இளைஞர்களைப் பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று கூறுவது காயத்தின் மீது உப்பைத் தடவி வேதனையை அதிகப்படுத்துவது போல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் குறித்துப் பேசும்போது, “குஜராத் தேர்தலின்போது மக்கள் சில கடினமான கேள்விகளைக் கேட்டனர். தற்போது அந்த வாய்ப்பு கர்நாடக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நீங்கள் கேள்வி கேட்க தொடங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக