சனி, 17 மார்ச், 2018

2019க்குள் அனைத்து ரயில்களிலும் மலக்கழிவுகள் மறுசுழற்சி... பயோ டாய்லெட்!

2019க்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட்!மின்னம்பலம்: கடந்த மூன்றாண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயோ டாய்லெட்டுகளை அமைத்துள்ளதாகப் பாராளுமன்றத்தில் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயிலில் இருந்து வெளியேறும் மனித கழிவுகளால் சுற்றுப்புறச் சூழல் மாசுக்கேடு அடைகிறது என குற்றச்சாட்டு வந்தபோது அதற்கு மாற்றாக அரசு எடுத்த முடிவுதான் இந்த பயோ டாய்லெட் வசதி. இந்திய ரயில்வே அமைச்சகம் 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரையில் 87,000 பயோ டாய்லெட்டுகளை அமைக்க இலக்கு நிர்ணயித்து, இதுவரை 1,00,663 பயோ டாய்லெட்டுகளை அமைத்துள்ளதாக மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோஹய்ன் மாநிலங்களவையில் நேற்று தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்திற்காக 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரையில் ரூ.513.97 கோடி செலவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
ரயில்வே அமைச்சகம் 2015-2016ஆம் ஆண்டு 17,000 பயோ டாய்லெட்டுகளை அமைக்க இலக்கு நிர்ணயித்து, 15,442 மட்டுமே நிறுவியது.
2016-2017 காலகட்டத்தில் 30,000 பயோ டாய்லெட்டுகள் அமைக்க இலக்கு நிர்ணயித்து, 34,134 அமைத்தது. அதே போல 2017-2018ஆம் ஆண்டு பிப்ரவரி வரை 40,000 ஆக இருந்த இலக்கைக் கடந்து 51,087 பயோ டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டது.

ரயில் பெட்டிகளில் பொருத்தப்படும் பெட்டியில் சேரும் மனித கழிவுகள் பாக்டீரியா மூலம் நொதித்தல் செய்யப்பட்ட பிறகு சுற்றுச்சூழலுக்கு தீங்கு இளைக்காத வகையில் வெளியேற்றப்படும். இதன் மூலம் ரயில் நிலையங்களில் சுகாதாரம் மேம்படும். பயோ டாய்லெட் வசதி முழுமையாக எல்லா ரயில்களிலும் இன்னும் அமைக்கப்படவில்லை. ஆனால் 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்திய ரயில்வேயின் அனைத்து பயணிகள் ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக