வியாழன், 29 மார்ச், 2018

ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடல் ... பராமரிப்பு பணிக்காகவாம்

ஸ்டெர்லைட் ஆலை மூடல்!
மின்னம்பலம்: பராமரிப்புப் பணி காரணமாக 15 நாட்கள் ஆலை மூடப்படுவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் இன்று (மார்ச் 29) அறிவித்துள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை நிறுவ நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது.

குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் இன்று 46ஆவது நாளாக நீடிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் தங்கள் எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர். நேற்று (மார்ச் 28) இங்கு பெண்கள் கொளுத்தும் வெயிலில் முட்டிபோட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த குஷி குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதோடு இனி குழந்தைகளை அந்த மையத்துக்கு அனுப்பமாட்டோம் என்று தெரிவித்ததுடன், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவர்களுக்கு வ.உசி கல்லூரி மாணவர்களும், பல்வேறு கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் முதலியார் பேட்டையைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறார். புதுச்சேரி கடற்கரை சாலை முதல் தூத்துக்குடி வரை 477 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றார்.
இதனிடையே, தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரசாந்த் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் போராட்டம் வலுவடைந்து வரும் தருவாயில், ஸ்டெர்லைட் ஆலை இன்று முதல் 15 நாட்களுக்கு வருடாந்தரப் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக