செவ்வாய், 13 மார்ச், 2018

உபியில் 11ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து வெடித்துச் சிதறிய மின்சாதன பொருட்கள்! - ஒருவர் பலி

நக்கீரன் :சாதாரண வீட்டு உபயோக மின்சாரத்திற்கு பதிலாக 11ஆயிரம் வோல்ட் பாய்ந்ததால் வீடுகளில் இருந்து மின்சாதன பொருட்கள் வெடித்துச் சிதறின. உத்தரப்பிரதேசம் மாநிலம் மீருட் மாவட்டம் இன்சோலி கிராமத்தில் உள்ளது குவான் பட்டி பகுதி. இந்தப் பகுதியில் நேற்று மாலை திடீரென்று வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனப் பொருட்கள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் முதலில் தெரியாமல் இருந்த நிலையில், குவான் பட்டி பகுதியில் மட்டும் வீடுகளுக்கு செல்லும் மின் கடத்திகளில் 11ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது. மின்கடத்திகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் இந்த விபத்துக்கு காரணம் எனவும் தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் செல்போனை சார்ஜரில் மாட்டியபடியே உபயோகித்த 20 வயது இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். நான்கு பெண்களுக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவித் தொகைகளை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக