சனி, 24 மார்ச், 2018

திமுகவின் மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்க மண்டல மாநாடு இன்று துவக்கம்!.. 100 ஏக்கரில்

100 ஏக்கரில் திமுக மண்டல மாநாடு இன்று துவக்கம்!மின்னம்பலம்: மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஈரோடு மண்டல திமுக மாநாடு இன்று (மார்ச் 24) தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட எல்லையில் பெருந்துறை விஜயமங்கலம் என்ற ஊர் அருக்கில்
தேசிய நெடுஞ்சாலையின் வலது பக்கத்தில் பயன்பாடில்லாத 500 ஏக்கர் இடத்தைத் தேர்வு செய்து 100 ஏக்கரில் மாநாட்டு விழாவும், 400 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டுப் பந்தல் அருக்கில் தலைவர்கள் ஓய்வு எடுக்கும் அளவில் குளு குளு வசதியுள்ள அறையும், தொண்டர்கள் நிர்வாகிகள் வசதிகளுக்கு ஏற்ப மெடிக்கல்

கேம்ப், கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், தீ அணைப்பு வாகனங்கள் என அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கின்றன.
மாநாட்டில் தொண்டர்கள் சோர்வடையாமல் உற்சாகத்துடன் இருக்க திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றமும், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டத்திலிருந்து வரக்கூடிய நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவும், மாநாட்டுக்கு வந்துவிட்டுபோக வாகன வசதிகள் தங்குவதற்கு இடம்வசதிகள் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடுகள் செய்து கொடுக்கவேண்டும் என்று செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களும் வீடுகளும் விடுதிகளும் நான்கு நாட்களுக்கு ஃபுல்லாகிவிட்டது என்று கூறுகின்றனர் உள்ளூர் மக்கள்.
மண்டல மாநாடாகவிருந்தாலும் தமிழகம் முழுவதிலிருந்தும் நிர்வாகிகள் வருவதால் மாநில மாநாடு போல் காட்சியளிப்பதாக திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
துர்கா ஸ்டாலின், உதயநிதி உட்பட பலரும் ஈரோட்டுக்கு நேற்றே வந்துவிட்டனர். முன்னதாக, இந்த மாநாட்டில் கருணாநிதி கலந்துகொள்ள வாய்ப்பில்லை என ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக