வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

Demons in paradise ,,,, 800 க்கு மேற்பட்ட டெலோ போராளிகளை நாம் கொன்றோம் .... ஒப்புதல் வாக்குமூலம்

soodram.com :  நினைவில் தடதடக்கும் நிழல் – கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழரின் படம்!” – ஷோபா சக்தி.

2017 கான்ஸ் திரைப்படவிழாவில் இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணம்
இயக்கிய ‘Demons in Paradise’ ஆவணப்படம் திரையிடப்பட்டு Golden Camera, Golden Eye விருதுகளிற்குப் பரிந்துரையானது. வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசத் திரையரங்குகளில் படம் மக்களிடம் வருகிறது.
‘எங்களது குழந்தைகள் குண்டுவீச்சு விமானத்தின் சத்தத்தை வைத்தே அது என்ன ரகப் போர் விமானம் எனச் சொல்லிவிடுவார்கள், ஆனால், அவர்கள் இதுவரை ஒரு ரயிலைக்கூடப் பார்த்ததில்லை’ என்பது யுத்தகாலத்தில் தமிழ்க் கவிஞர் ஒருவரால் எழுதப்பட்ட வரிகள்.
இலங்கையில் 1867 ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதலாவது ரயிலை பிரித்தானிய காலனிய அரசு ஓடவிட்டது. மத்திய நாட்டின் மலைகளிலிருந்து தேயிலையும் ரப்பரையும் கரைநாட்டுத் துறைமுகங்களிற்கு கொண்டுவந்து சேர்ப்பதே இலங்கையில் பிரிட்டிஷாரின் ரயில் ஆர்வத்திற்கான காரணம்.
அடுத்த 50 வருடங்களிலேயே நாட்டின் முக்கிய நகரங்கள் எல்லாமே ரயில் பாதைகளால் இணைக்கப்பட்டன.
1980-களின் நடுப்பகுதியில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்தபோது நாட்டின் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்கள் கெரில்லாப் போராளிகளால் துண்டாடப்பட்டு பதுங்குக் குழிகளுக்கும் பாதுகாப்பு அரண்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. இந்த வரலாற்றுப் பின்னணியோடு ஜூட் ரட்ணத்தின் ஆவணப்படம் தொடங்குகிறது.
ஜூட் ரட்ணம் கொழும்பின் புறநகரில் பிறந்துவளர்ந்த தமிழர். 1983 ஜூலையில் நாடு முழுவதும் தமிழர்கள்மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஓர் இனப்படுகொலையே நடந்தபோது ஜூட்டுக்கு ஐந்து வயது. இந்தப் படுகொலைகளிலிருந்து ஜூட்டின் குடும்பம் தப்பிவிட்டது. ஆனாலும், அந்த நாள்களின் கொடூர ஞாபகங்கள் அந்த ஐந்து வயதுச் சிறுவனில் உறைந்துவிட்டன. உறைந்த நெருப்பினதும் இரத்தத்தினதும் சலனமே இந்த ஆவணப்படம்.
1983 ஜூலைப் படுகொலைகளை ஆவணப்படுத்தும் ஜூட், இலங்கை அரசினதும், சிங்களக் காடையர்களதும் கோர முகங்களை ஆவணப்படுத்தும் அதே வேளையில் எளிய சிங்கள மக்கள் அந்த வன்செயல்களின் போது எப்படித் தமிழர்களைச் சிங்களக் காடையர்களிடமிருந்து காப்பாற்றினார்கள் என்பதையும் சொல்லத் தவறவில்லை. ஜூட் ரட்ணத்தின் குடும்பமும் அப்படித்தான் காப்பாற்றப்பட்டது.
இந்த ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி ஜூட்டின் மாமா யோகா. அவரது நேரடிச் சாட்சியத்தின் வழியே படத்தின் பெரும்பகுதி நகர்த்தப்படுகிறது. இப்போது கனடாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் யோகா, யுத்தம் முடிந்ததன் பின்னாக நாடு திரும்புவதிலிருந்து அவரது சாட்சியம் ஆரம்பிக்கிறது.
1983-ம் ஆண்டு படுகொலைகளைத் தொடர்ந்து யோகா ஒரு தமிழ்ப் போராளிக் குழுவில் இணைந்து சிங்கள இனவாத அரசிற்கு எதிராகப் போராட முடிவெடுக்கிறார். கொழும்புத் தமிழரான அவர் தன்னுடைய இலட்சியத்தைத் தேடி யாழ்ப்பாணம் செல்லும் ரயிலில் புறப்படுகிறார். அவரது முடிவிற்கு அவரது குடும்பத்தில் சிலர் வாழ்த்தும் தெரிவித்து வழியனுப்புகிறார்கள்.
யோகா, வெறும் ஆயுத அரசியலை நம்பியவரல்ல. இடதுசாரிக் கோட்பாடுகள் வழியே இலங்கை அரசுக்கு எதிராகப் போராடும் ஓர் ஆயுதப் போராட்ட இயக்கத்திலேயே அவர் இணைய விரும்புகிறார். மிகச் சிறியதும் இடதுசாரி அரசியலைத் தனது செல்நெறியாகப் பிரகடனப்படுத்தியதுமான என்.எல்.எஃப்.ரி. இயக்கத்தில் யோகா இணைந்துகொள்கிறார்.
சில வருடங்களிற்குப் பின்பு யோகாவின் இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகளால் தடை செய்யப்படுகிறது. தங்களைத் தவிர வேறு எந்த அரசியல் அமைப்புகளும் தமிழ்ப் பகுதிகளில் இயங்கக் கூடாது என்பதில் புலிகள் மூர்க்கமாயிருக்கிறார்கள். யோகாவின் தோழர்கள் புலிகளால் தேடித் தேடிக் கொல்லப்படுகிறார்கள். யோகா ஒரு விவசாயிபோல வேடம் புனைந்து, புலிகளின் காவலரண்களைக் கடக்கும்போது அவரைத் தடுக்கும் புலிகள் அவருக்கு ஒரு வேலையைக் கொடுத்து அதைச் செய்துவிட்டுப் போகும்படி பணிக்கிறார்கள். அந்த வேலை, ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தெடுத்துத் துண்டுபோடும் வேலை.
30 வருடங்களிற்குப் பிறகு, கனடாவிலிருந்து நாடு திரும்பிய யோகா, தான் சிறுவயதில் வளர்ந்த சிங்களக் கிராமத்திற்குச் சென்று கிராமவாசிகளைச் சந்திப்பதோடும் கண்ணீரோடு உரையாடுவதோடும் யாழ்ப்பாணத்திற்குச் சென்று உயிரோடு எஞ்சியிருக்கும் தனது இயக்கத் தோழர்களைச் சந்தித்து நினைவுகளை மீட்டுவதுடனும் இந்த ஆவணப்படம் இப்போதைக்கு முடிகிறது.
இந்த ஆவணப்படத்தின் இன்னொரு சாட்சியம் ரயில். ரயில் பயணங்களின் போது, தமிழர்கள் ரயிலிலிருந்து இறக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை நீண்டகால ரயில்வே ஊழியரான சிங்கள முதியவர் சாட்சியமளிக்கிறார். நாட்டின் சிங்களப் பகுதிகளையும் தமிழ்ப் பகுதிகளையும் இணைத்த ரயில், போரின் அத்தனை வடுக்களையும் சுமந்து சவம் காவும் தொடர்வண்டியாகிப் போன கதை. இந்த ஆவணப் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் அந்தச் சாவு ரயிலின் நிழல் கவிந்துள்ளது. இந்தப் படத்தில் தமிழும் சிங்களமும் உரையாடல் மொழியாக இருப்பினும் அந்தச் சாவு ரயிலின் அச்சமூட்டும் தடதடக்கும் ஓசையே இந்தப் படத்தின் மைய மொழி.
ஆவணப்படத்தின் எண்ணற்ற சாட்சியங்களில் இரு சாட்சியங்கள் மிகக் குறிப்பானவை. 1983 வன்செயல்களின் போது, ஒரு தமிழ் இளைஞரை முழுதாக நிர்வாணப்படுத்தி வீதியில் உட்காரவைத்துவிட்டுச் சுற்றிவர நின்று சிங்களக் காடையர்கள் எக்களிக்கும் அந்தக் கறுப்பு வெள்ளை நிழற்படத்தை எந்தத் தமிழராலும் மறந்துவிட முடியாது. நடந்த மொத்த அவலங்களின் சாட்சியம் அந்தப் படம். அந்த நிழற்படத்தை எடுத்தவர் ஒரு சிங்களவர். அந்தச் சிங்களவர் இன்றுவரை கண்களிலிருந்து அகலாத மிரட்சியோடு இந்த ஆவணப்படத்தில் அளிக்கும் சாட்சியம் வழியே தன்னுடைய கையாலாகத்தனத்தை அறிக்கையிடும் சொற்கள் சாதாரண சிங்கள மக்களின் மனசாட்சியம்.
அடுத்த சாட்சியம் லண்டன் தமிழ் நாடக உலகில் பிரபலமான வாசுதேவனுடையது. வாசுதேவனும் நானும் புலிகள் இயக்கத்தில் ஒரே காலப்பகுதியில் இயங்கியவர்கள். புலிகள் டெலோ இயக்கத்தைத் தாக்கி அழித்தபோது அவரும் நானும் வேறு வேறு இடங்களில் இயங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் இருவரும் ஒரே வேலையைத்தான் செய்தோம்.
இந்த ஆவணப்படத்தில் வாசுதேவன் தோன்றி அந்தக் கொடூரமான சகோதரப் படுகொலை நாள்கள் குறித்துச் சாட்சியம் அழிக்கிறார். ஆயுதங்களை ஏந்தியவாறு எங்கள் சக போராளிகளைத் தேடிதேடி எவ்வாறு அழித்தோம் என்பதையும் அப்போது எம் மக்கள் வாய் மூடியிருந்ததையும் குற்றவுணர்வு மேலிடச் சாட்சியம் சொல்கிறார். அது ஒருவகையில் எனது சாட்சியமும் கூட.
இலங்கை போன்ற ஊடகச் சுதந்திரம் குறைவான நாட்டில் ஒருவர் – அதுவுமொரு தமிழர் – இத்தகைய அரசியல் ஆவணப்படத்தை இயக்கி வெளியிடுவதென்பது மிகச் சவாலானதும் ஆபத்தானதும். முப்பது வருட யுத்தத்தின் ஒருபகுதியை, பாதிக்கப்பட்ட ஓர் இலங்கைத் தமிழர் முழுநீள ஆவணப்படமாக்கி சர்வதேச அரங்குகளுக்குக் கொண்டு சேர்த்திருப்பது இதுவே முதற்தடவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக