ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

காப்பீட்டு திட்டங்கள் ... உங்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறதா? பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ...

Alwar Narayanan : மரண வியாபாரிகள் !!
சற்றேறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன்பு நான் துவங்கிய பயணம் போனமாதம் நிறைவுக்கு வந்தது. ஒவ்வொன்றாக கையில் இருந்த ஆயுள் காப்பீட்டு திட்டங்களை (LIC) ரத்துசெய்து முழுக்கு போட்டாயிற்று.
ஆயிற்று !. ஆறுவருடம் கட்டிய "ஜீவன் சரள்" என்ற என்னுடைய கடைசி பாலிசியையும் விட்டு கொடுத்து காசு வாங்கியாயிற்று. பெருநஷ்டம்தான். இரண்டு வருடம் முன்பு, "ஜீவன் தரங்" பாலிசியையும் இப்படித்தான் நட்டத்தில் முழுக்கு போட்டேன். அதற்க்கு மூன்று வருடம் முன்பு சின்ன சின்ன பாலிசிகளை கரைத்தேன். வெகுநாட்கள் முன்பு என் அக கண்ணை திறந்த ஒரு அவார்டு வாங்கிய முன்னிலைப்படுத்துகைதான் இதற்கு காரணம். (அதன் வலைதள முகவரி முதல் கமெண்டில்)
இதை படித்துவிட்டு முட்டாளே ! காப்பீடு இல்லாமல் எதிர்காலமா ? என்று மனதிற்குள் திட்டினால் நீங்கள் LIC ஏஜெண்டாகத்தான் இருக்கவேண்டும். அடடா ! என்ன விஷயமோ ? என்று ஆர்வம் காட்டினால் நீங்களும் என்னைப்போல முட்டாளாகத்தான் இருக்கவேண்டும். எது வசதி ?

நல்ல பிள்ளையாக சந்தாவை தொடர்ந்தால் இருபது வருடத்தில் சொர்க்கம் நிச்சயம் என்று சொல்லப்படும். இல்லையேல் பிணி, மூப்பு சாக்காடு ஆகிய மூன்றிலிருந்து புத்த பெம்மானாலும் உங்களை காப்பாற்ற முடியாது என்பது அவர்கள் வாதம். !
மரணம் என்பதை வாயால் கூட சொல்ல நாக்கூசும் உங்களின் இங்கிதம் தான் இந்த தரகர்களின் ஆயுதம். குசுகுசு எனப்பேசி கச்சிதமாக காரியத்தை முடித்துவிடுவார்கள். நல்ல திடகாத்திரமாக இருக்கவேண்டும். குறைந்த வயதுடன், நன்றாக சம்பாதிக்கவேண்டும். இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் இவர்களின் இலக்கு. வயதானவர்களுக்கு, சம்பாதிக்காதவர்களுக்கு, சிறுவர்களுக்கு இவர்களை பொறுத்தவரையில் உயிர் உத்தரவாதம் கிடையாது. தெரிந்தவர்கள் மூலம், வாய்ச்சவடால் செய்து சொந்த காசில் நோட்டீசு அடித்து விற்கவேண்டும். சோபா நுனியில் உற்கார்ந்து உங்களை விலைபேசி விடுவார்கள். பணம் மட்டும்தான் பிரதானம்.
உங்களை துரத்தி துரத்தி பிறந்தநாள் வாழ்த்து சொல்வார்கள். நீங்களே கண்டுகொள்ளாத நினைவுதினங்களில் குறுஞ்செய்தி மூலம் குடும்பத்தில் குழப்பத்தை செய்வார்கள். என்னே அக்கறை ! பாவம் நல்ல மனிதன் என்று நீங்கள் நினைக்கலாம்.? ஒன்று செய்யுங்கள். ஓரிரு சந்தாவை காட்டாமல் விட்டுத்தான் பாருங்களேன் என்ன நடக்கிறதென்று ! அவர் யார் என்று உங்களுக்கு புரிய வைப்பார். அதைவிட பாலிசியை முன்கூட்டியே நிறுத்த போகிறேன் என்று சொல்லி பாருங்கள். அண்ட சராசரமே ஆடிவிடும். அலைபேசி, மின்னஞ்சல் கணைகளால் வீழ்த்தப்படுவீர்கள். மிரட்டப்படுவீர்கள். இருண்ட எதிர்காலம் கண்ணில் காட்டப்படும்.
இன்சூரன்ஸ் போடும்போது நீங்கள் பயில்வானைப்போல இருக்கவேண்டும். இதற்கென்றே மருத்துவர்கள் சல்லடைபோட்டு உடம்பை பரிசோதனை செய்வார்கள். LIC தரகர் ஓசியில் செய்கிறோம் என்பார். ரிப்போர்ட்டை கையில் கொடுக்க மாட்டார்கள். மெடிக்கல் ரிப்போர்ட்டை ரகசியமாக மேலிடத்துக்கு அனுப்பிவிடுவார்கள். "FIT" ஆக இருந்தால்தான் காப்பீடு. நீங்கள் அதிகநாள் வாழ்ந்தால்தான் அவர்களுக்கு லாபம். பிறகு எப்படி அவர்கள் உங்கள் வாழ்க்கைக்கு "உத்தரவாதம்" அளிப்பதுபோல விளம்பரம் செய்கிறார்கள் ?
உங்கள் மரணத்துக்கு ஒரு விலை உண்டு.
தெரிந்தவனுக்கு வாய்பந்தல் கட்டி "ஏர்வா மார்டினை" விற்பதற்கும், அசரும்போது அடுத்தவன் காசை ஆட்டையை போடும் "ஷேர்" மார்க்கெட்டுக்கும், தெரியாத ஒன்றை சொல்லி கையை முறுக்கி சம்பாதிக்கும் கார்ப்பரேட் மருத்துவனுக்கும், எதிர்காலத்தை காட்டி பயமுறுத்தி காசுபார்க்கும் இன்சூரன்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. மாறாக ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டது.
ஆயுள் காப்பீடு மட்டும் அல்ல. உங்கள் வாழ்க்கையை உங்களைவிட அவர்கள் கூறாக அறிந்துவைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காப்பீடு. மருத்துவ காப்பீட்டை எடுத்துக்கொண்டால் வியாதி என தெரிந்தாலும் அதன் எதிர்கால விளைவு குறித்த உங்கள் மயக்கம்தான் மருத்துவரின் ஆயுதம்.
உங்கள் வியாதிக்கும் நீங்கள்தான் பணம் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு பணம் கொடுக்கும் இன்சூரன்சுக்கும் நீங்கள்தான் பணம் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு கொடுக்க போதிய பணம் உங்களிடம் இல்லாததால் அரசாங்கம் தலையிட்டு மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் தீட்டுகிறது. அது உங்களுக்கு அல்ல. இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கானது. ஏனென்றால் இன்சூரன்ஸ் தலையீட்டால் மருத்துவ செலவு உச்சத்துக்கு கூடும். இன்சூரன்சுக்கு அரசாங்கம் கொடுக்கும். இதுதானே பயிர் காப்பீட்டில் நடக்கிறது ?
மழை பெய்யுமோ, வெயில் உறைக்குமோ, தண்ணீர் காயுமோ, நோய்க்கொண்டு போகுமோ, விமானம் நொருங்குமோ, விபத்து நேருமோ, பணம் கொள்ளை போகுமோ, பை தொலையுமோ, வேலை போகுமோ என்றெல்லாம் உங்களது எண்ணற்ற கவலைகள் காசாக்கப்படுவதுதான் "காப்பீடு". வயல்வெளிகள் கருகுவதுபோல.... வாழை மரங்கள் சாய்வதுபோல.....பூட்டிய வீடு தீ பற்றி எறிவதுபோல....திருடன் பீரோவை .காலிசெய்வதுபோல..... என்ன சார் பயமாக இருக்கிறதா ? அமங்கலமாக தெரிகிறதா. வாழ்க வளமுடன். இதுதான் உங்கள் வீக்னஸ். ஆளுக்கேத்த பொய். மொத்த பணமாக வரும், ஆயுசுக்கும் பென்ஷன், பணி ஓய்வு நேரத்தில் பெருந்தொகை கைக்கு வருமென்பார்கள்....... அவர்கள் சொல்லும் பட்டியல் மிக நீளமானது......
உண்மை என்னவென்றால் செட்டில்மென்ட் காலம் வரும்போது உங்கள் பாலிசியில் என்ன எழுதியிருக்கிறதோ அதுமட்டும்தான் கிடைக்கும். பீரோவில் வைத்துள்ள படிவத்தைத்தான் நீங்கள் இன்னமும் சரியாக படிக்கவேயில்லையே ? "என்ன சார். நல்லதுதானே செய்கிறார்கள். உங்களுக்கு ஒரு நஷ்டம் ஏற்பட்டு நிர்கதியாக இருக்கும்போது பெரும்பணம் வருமே, ஓசியில் யாராவது பணம் தருவார்களா, கொஞ்சம் அவர்களுக்கு அட்வான்ஸாக கொடுப்பது சரிதானே" என்பதுதானே உங்கள் கேள்வி ?
உண்மைதான். நீங்கள் சிறுக சிறுக காட்டும் பாலிசி சந்தாவை சேர்த்து LIC இன்றைக்கு 15.6 லட்சம் கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளது. 35 கோடி பாலிசிகளை கொண்டுள்ளது. 13 லட்சம் ஏஜெண்டுகளை கொண்டுள்ளது. சரி.இவ்வளவு பணத்தைக்கொண்டு எத்தனைபேருக்கு இதுவரை செட்டில் செய்துள்ளது ?. 7 கோடி பேர் இன்சூரன்ஸ் கேட்டால் அதன் மொத்த செட்டில்மென்ட் தொகை வெறும் 9.6 கோடி ரூபாய்தான். மிச்ச பணத்தை தாறுமாறாக செலவழிப்பார்கள்.
கிட்டத்தட்ட அரசாங்கத்தின் எல்லா கொண்டாட்டங்களுக்கும், கேளிக்கை செலவுகளுக்கும் பணம் கொடுப்பது LIC தான். இதனால்தான் அரசியல்வாதிகளுக்கு, பெரும் நிறுவனங்களுக்கு, அரசாங்கத்துக்கு இது ஒரு செல்லப்பிள்ளை. இப்போது மருத்துவம், கல்வி, விவசாய துறைகளையும் கோர்த்து விட்டிருக்கிறார்கள். காப்பீடு இல்லாமல் நீங்கள் உயிர்வாழவே முடியாது என்ற நிலைக்கு நெட்டி தள்ளிக்கொண்டிருக்கிறது அரசாங்கம். இது தற்போதைய பாஜக அல்லது முந்தய காங்கிரஸ் செய்கிறது என்று அல்ல. உலகமே இதைத்தான் மக்களுக்கெதிராக செய்கிறது. இது அமெரிக்காவின் கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
பணக்காரனிடம் உன் பணம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு அவன் பார்த்துக்கொள்வான் என்கிறது பாசிசம். தொழிற்சங்கத்துக்கு கப்பம் கட்டு, அது பாத்துக்கொள்ளும் என்கிறது கம்யூனிசம். இரண்டும் ஒன்றுதான். ஏரியா அரசியல் ரவுடியிடம் பணம் கொடுத்தால் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பான் - இதுதானே குப்பத்து நீதி ? உங்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ?
இதோ இப்போதுகூட பயணச்சீட்டு பதியும்போது இன்சூரன்ஸை வலுக்கட்டாயமாக திணிக்க பார்க்கிறார்கள். கவனமாக அதை விலக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் நானூறு ரூபாயை பிடுங்கி விடுவார்கள். இப்படியே கோடிக்கணக்கில் பணம் பார்த்துவிடுவார்கள். உங்கள் பயணம் விபத்தில் முடியுமென்று கற்பனை வருகிறதா ? சூட்கேஸ் தொலைந்து போவதுபோல கனவு வருகிறதா? நல்லது. அது அவர்கள் விளம்பரத்தின் வெற்றி.
வண்டி இன்சூரன்ஸை எடுத்துக்கொள்வோம். ஏன் என்று தெரியாமலே வருடா வருடம் தண்டம் அழவேண்டும் என்று அரசாங்கமே நிர்பந்திக்கிறது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. தப்பித்தவறி சர்வீஸ் செய்யும்போது செலவை காப்புரிமையிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டால் போதும். தனியார் ஆஸ்பத்திரியைப்போல பில்லு எகிறிவிடும். பிறகு அடுத்த வருடம் முதல் நீங்கள் இரண்டு மடங்கு அதிகமாக பிரிமியம் கட்டவேண்டி வரும். பிறகு எதற்கு இன்சூரன்ஸ் புண்ணாக்கு என்று நீங்கள் என்றைக்கும் கேட்கப்போவதில்லை. ஏனென்றால் ஒரு போலியான பாதுகாப்புக்கு சுகப்பட்டுவிட்டீர்கள்.
பாதுகாப்பு என்றால் என்ன ? ஒரு உதாரணம் பார்ப்போம்.
மோகன் என்று ஒரு இளைஞன் எனக்கு அலுவலக உதவியாக இருந்தான். துரதிஷ்டவசமாக பிள்ளையாரை கரைப்பதற்கு ஊர்வலத்தில் நடனமாடி செல்லும்போது பின்னால் வந்த வண்டி மோதி விபத்துக்குள்ளானான். பிரபல அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர முதலுதவி என்று பெயரளவில் கிடக்க போட்டார்கள். அவனுக்கு மருத்துவ காப்பீடு இருக்கும் ESI ஆஸ்பத்திரி இருப்பது வெகு தூரத்தில். அதற்குள் இறந்துவிட்டான். அடுத்து நடந்ததுதான் கவனிக்கவேண்டியது.
மறுநாள் பிணவறைக்கு வெளியே வெள்ளை சட்டை ஏஜெண்டுகள் வட்டமடித்தனர். எல்லாவற்றுக்கும் பணம் கேட்டார்கள். கணவனை இழந்தவள் விதவையாவதற்குள் கையெழுத்து வாங்கப்பட்டது. பாடி கிடைக்க சாயந்திரமானது. வெட்டியானுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சுற்றத்தார் குடித்து காலிசெய்தனர். நண்பர்கள்தான் மண்ணெண்ணெய் வாங்கியதாக பிறகு அறிந்தேன். சொற்பமாக இன்சூரன்ஸ் கொஞ்சம் கிடைத்தது. நாங்கள் அலுவலக நண்பர்களிடம் சுயமாக திரட்டிய 2.7 லட்சம் உதவித்தொகையை போஸ்ட் ஆபீசில் போட்டு வட்டி வரும்படி செய்தோம்.
ஒரே வருடத்தில் அந்த பணத்தை எடுத்துவிட்டார் அவன் மனைவி. இரண்டு பெண் குழந்தைகள்வேறு. பெருகி வரும் விலைவாசி, குறைந்து வரும் வட்டி விகிதம், சுற்றி வரும் குடிகாரர்கள் மத்தியில் சேமிப்பு பாதுகாப்பானது அல்ல என்று நினைத்தார் போலும். சின்ன நிலம் வாங்கினார். ரூம் கட்டினார். வேலை செய்கிறார். தன் அம்மாவோடு நன்றாக இருக்கிறார்.
நலிந்த குடும்பங்கள் என்று இல்லை. இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் பிரபல ஆஸ்பத்திரியில் பல லட்சங்கள் கோட்டைவிட்ட கதைகள் ஏராளம். தேவையற்ற மருந்துகள், அறுவை சிகிச்சைகள். விலையுயர்ந்த மருத்துவ சோதனைகள். சின்ன காயத்துக்குக்கூட எக்ஸ் ரே, ஸ்கானிங், MRI பிறகு அறுவை சிகிச்சை என்று ஒரு பார்முலாவை வைத்திருக்கிறார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு பணத்தில் இல்லை. பணத்தின் மதிப்பு வீழ்ந்து வருகிறது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசாங்கம் தனியார் மாயம் செய்து மருத்துவ செலவையும், காப்பீட்டையும் பெருக்குகிறது. போஸ்ட் ஆபீஸ், வங்கி வட்டி விகிதங்கள் நாளும் குறைந்து வருகின்றன. இன்றைக்கு போடும் பிரிமியம் தொகை 15 அல்லது 20 வருடம் கழித்து அசல் கூட கிடைக்காது. வட்டி மொத்தமும் நஷ்டம். போனால் போகிறதென்று போனஸ் கொடுப்பார்கள். அதுகூட பாலிசிக்கு வேறுபடும். அது உங்கள் வட்டியின் ஒரு பகுதிதான். கிடைக்கப்பெறும் பணத்தின் மதிப்பு அப்போது எவ்வளவு இருக்கும்? 15 வருடம் முன்பு ஒரு கோப்பை தேநீர் விலை 1 ருபாய். இன்றைக்கு 10 ரூபாய். இன்னும் பத்துவருடத்தில் 5 லட்சம் ரூபாயின் மதிப்பு எவ்வளவு இருக்கும் ?
LIC போன்ற காப்பீடு சேமிப்பு அல்ல. அது அவசரகால நிதி மட்டுமே. ஆகவே காப்பீடு எடுப்பதால் பிரயோஜனம் இல்லையா ? இருக்கிறது. எந்த ஒரு சேமிப்பும் இல்லாமல் வாழ்க்கையை துவங்கும் இளைஞனுக்கு இது மிகவும் தேவை. ஆனால் அவன் விரைவில் பணம் சேர்த்து சேமிப்பு, பணம், வீடு, நகையில் முதலீடு செய்துகொள்ளவேண்டும். சுய பாதுகாப்பு இருக்கும் பட்சத்தில் காப்பீட்டுக்கு கட்டும் பிரிமியம் வீண். ஏனெனில் அது திரும்ப கிடைக்கப்போவதில்லை. கிடைக்கும் நேரம் அதற்கு மதிப்பு இல்லை.
இன்சூரன்ஸ் என்பது சேமிப்பு கணக்கு அல்ல. வேலையில் சேர்ந்து மண வாழ்க்கையை சேமிப்பு இல்லாமல் துவங்கும் ஒரு சிறுவனுக்கான பாதுகாப்பு. அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக