வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ஹைதரபாத் .குழந்தையை நரபலி கொடுத்த தம்பதி கைது!

குழந்தையை  நரபலி கொடுத்த தம்பதி கைது!தன்னுடைய மனைவியின் நோயைக் குணப்படுத்த மூன்று மாத குழந்தையைச் சந்திரகிரணத்தன்று நரபலி கொடுத்த தம்பதியைப் போலீசார் கைது செய்தனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஹைதராபாத்தில் உப்பல் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் டாக்ஸி ஓட்டுநர் ராஜசேகர், அவர் மனைவி ஸ்ரீலதா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் மகேஷ் பகவத் கூறுகையில், தன் மனைவிக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோயைக் குணப்படுத்த ஒரு பெண் குழந்தையைச் சந்திரகிரணத்தன்று நரபலி கொடுக்க வேண்டும் என டாக்ஸி ஓட்டுநரான ராஜசேகருக்கு மந்திரவாதி ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.

இதையடுத்து, 31ஆம் தேதி இரவு, சந்திரகிரகணத்தன்று, போயகூடா பகுதியில் பிளாட்பாரத்தில் தன்னுடைய தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தையைக் கடத்திக்கொண்டுவந்த ராஜசேகர், நடுராத்திரியில் அந்தக் குழந்தையின் தலையை வெட்டி, உடலை அங்கேயுள்ள ஒரு ஆற்றில் எறிந்துவிட்டு, தலையை மட்டும் எடுத்துவந்துள்ளார்.
பின்பு, குழந்தையின் தலையை வைத்து தம்பதியினர் பூஜை செய்தனர். ராஜசேகர் அந்தத் தலையைத் தனது வீட்டின் மேற்கூரையில், சந்திரனின் வெளிச்சம் விழும்படி வைத்துள்ளார். பின்பு, வீட்டில் ரத்தக் கறைகளை ரசாயனங்களால் கழுவியுள்ளனர்.
மறுநாள் வழக்கம்போல் ராஜசேகர் வேலைக்குச் சென்றுவிட்டார். அவரது மாமியார் மொட்டை மாடியிலுள்ள குழந்தையின் தலையைப் பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் 122 செல்போன்களில் பதிவான விவரங்களை ஆய்வு செய்தனர். கடந்த 15 நாட்களாக சந்தேகத்துக்குரிய 45 நபர்களிடம் விசாரணை செய்தனர். அந்தப் பகுதியிலுள்ள 100 சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
குழந்தையின் ரத்தத்தையும், வீட்டில் இருந்த சில ரத்தக் கறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இரண்டுமே ஒன்றாகத்தான் இருந்தது. இதையடுத்து, ராஜசேகர்தான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவரையும் அவர் மனைவியும் கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை, கடத்தல் மற்றும் தொடர்புடைய பிற குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்தக் குழந்தை யாருடையது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக