புதன், 21 பிப்ரவரி, 2018

அரும்பாக்கம் செயின் பறிப்பு: குற்றவாளி கைது!

அரும்பாக்கம் செயின் பறிப்பு: குற்றவாளி கைது!
மின்னம்பலம் :அரும்பாக்கத்தில் பெண்ணை நடுரோட்டில் இழுத்துச்சென்று செயினை பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மேனகா (55). கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி குடும்பத்தோடு அரும்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள மற்ற உறவினர்களைப் பார்த்து வருவதாகக் கூறி மேனகா, பாஞ்சாலி அம்மன் கோயில் தெருவில் நடந்து சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் மேனகாவின் கழுத்திலிருந்த 15 சவரன் தாலி செயினைப் பறித்துள்ளனர்
செயினுடன் மேனகாவையும் சேர்த்து 30 அடி தூரம் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். செயின் அறுந்ததால் அவர் கீழே விழுந்தார். பின்னர் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் மேனகா படுகாயமடைந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி ஒன்றில் பதிவாகியிருந்தது. சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியான இந்த வீடியோ காட்சி பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைத்தது.
இந்த நிலையில் பெண்ணை பைக்கில் இழுத்துச் சென்ற பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த அருண்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். செயின் பறித்ததை ஒப்புக்கொண்ட, அவரிடமிருந்து ஆறு சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவர் மீது வண்ணாரப்பேட்டை, துரைப்பாக்கம், செங்குன்றம் ஆகிய காவல் நிலையங்களில் 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
போலீஸார் பிடிக்கும்போது அவர் தப்பிக்க முயன்றதாகவும், இதனால் குற்றவாளிக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக