சனி, 17 பிப்ரவரி, 2018

பன்னீர்செல்வம் : பிரதமர் கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்தேன்!

மின்னம்பலம்: பிரதமர் மோடி கூறியதன் பேரில்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்தேன் என பன்னீர்செல்வம் கூறியுள்ள நிலையில், கட்சியிலோ ஆட்சியிலோ மத்திய அரசு தலையிடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று பிப்ரவரி (17 ) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காவிரி பங்கீட்டில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது மன வேதனையைத் தருகிறது. சட்ட வல்லுநர்களோடு தமிழக அரசு கலந்தாலோசித்து, நமக்கு வேண்டிய உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அளவு தண்ணீரை உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும்.
பிரதமரின் அறிவுரையின் பேரிலேயே அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் பதவியை ஏற்றதாகவும் பன்னீர்செல்வம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, “இதை பாஜக தலையீடு என்று சொல்ல முடியாது.
அலுவல் ரீதியாக சில கருத்துகளைப் பிரதமர் கூறியிருக்கலாம். அரசியலிலோ கட்சியிலோ நாங்கள் தலையிடுவதில்லை. இது தொடர்பாக பன்னீர்செல்வத்திடம்தான் கேட்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
மேலும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், “அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்கிறது என்று ஓபிஎஸ் கூறினாலும், இங்குதான் கேக்கை அரிவாள் வைத்து வெட்டும் நிலைமை உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறிவிடக் கூடாது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தமிழகத்தில் தமிழைப் பாதுகாப்பதற்கு பாஜகவால் மட்டுமே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பினாமி ஆட்சியை உறுதிப்படுத்திய ஓபிஎஸ்
இதற்கிடையே, ஓபிஎஸ்ஸின் பேச்சு தமிழக அரசு பாஜகவின் பினாமி அரசாங்கமாக இருந்துவருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மோடியின் பாஜகவினால்தான் அதிமுக பிளவுபட்டது. மோடி, அமித் ஷா இருவரது ஆசீர்வாதத்துடனும் வழிகாட்டுதலுடனும் இந்த அரசாங்கம் நடைபெற்றுவருகிறது; பாஜகவின் பினாமி அரசாங்கமாகவே இருந்துவருகிறது. ஆனால், அவர்கள் அதனை இவ்வளவு காலமாக மறுத்துவந்தனர். இப்போது, அதனை முழுமையாக ஒப்புக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்” என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் தீவிரவாதப் பயிற்சி முகாம்கள் அதிகரித்துவிட்டதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியது குறித்தும் பேசினார் திருநாவுக்கரசர். “தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகளின் பயிற்சி முகாம்கள் பெருகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அவர் ஆதாரம் இல்லாமல் பேசியதாகக் கருதவில்லை. மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம், அவருக்கு ஏதேனும் தகவல் கிடைத்திருக்கலாம். இது உதாசீனப்படுத்தக்கூடிய கருத்தல்ல.
ஆனால், இது குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது எனத் தெரிய வேண்டும். மாநில அரசுக்கு மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் கடமை மத்திய அரசுக்கும் இருக்கிறது. எந்தெந்தத் தீவிரவாத அமைப்புகள் பயிற்சி முகாம் நடத்துகிறார்கள்? எங்கு நடத்துகிறார்கள்? இந்த விவரங்கள் எல்லாமே மத்திய அரசுக்குத் தெரியும் இல்லையா? அவற்றைக் கட்டுப்படுத்த, அகற்ற மத்திய அரசின் சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்? இதனைப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றாரா? இந்த விஷயத்தில் டெல்லி என்ன தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதையும் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கினால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக