வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

கனடா பிரதமர் மீது மத்திய அரசுக்கு என்ன காய்ச்சல் ? மக்களின் கதாநாயகன் ஜஸ்டின் ட்ருடோ


justin trudeauநக்கீரன் :சந்தோஷ் குமார் : ஜனவரியை "தமிழ் பாரம்பரிய மாதமாக" அறிவித்த முதல் நாடு என கனடா பெருமையுடன் கூறிக்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடா நாட்டில் இளைய வயதிலேயே பிரதமரான இரண்டாவது நபர் இவர்தான். தமிழ் மொழியின் மீது எப்போதும் நன்றி கொண்டவர். தற்போது இந்தியாவிற்கு ஏழு நாள் பயணமாக வந்த இவர் ஒரு பக்கம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மற்றொரு பக்கம் ஆக்கப்பூர்வமான உரைகளையும் இந்தியர்களோடு இந்தியராக செய்துகொண்டிருக்கிறார். ஆனால் இவர் இந்தியா வந்திறங்கியபோது இவருக்கு குறிப்பிடும்படியான வரவேற்புகள் வழங்கப்படவில்லை,
மேலும் ஒரு நாட்டின் பிரதமருக்கு அளிக்கவேண்டிய பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை (ஒருவேளை மோடியின் பயணத்திட்டத்தில் கனடா இல்லைபோலும்) ஆறடி டாம் க்ரூஸ் போன்ற உருவத்தில், மஞ்சள் நிற ராமராஜன் சட்டை, கீழே ஜரிகை வேஷ்டி இதெல்லாம் கலந்த கலவையாக நினைத்து பாருங்கள் ஹாலிவுட் ஹீரோ தமிழில் நடிக்க வந்தது போல் இருக்கும்.

அந்த கெட்டப்பில்தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த பொங்கலன்று கனடாவில் வலம் வந்தார் பொங்கல் கொண்டாட்டங்களுடன். உலகமுழுக்க உள்ள தமிழர்களுக்கு நன்கு தெரிந்த பிரதமர்கள் இரண்டு பேர் அதில் ஒருவர் இந்திய பிரதமர் மோடி, மற்றொருவர் கனடா பிரதமர் ஜஸ்டின் தான்.
ஜஸ்டின் ட்ரூடோ, டிசம்பர் 25, 1971ல் கனடா தலைநகர் ஒட்டாவாவில் பிறந்தவர். இவரது தந்தையும் கனடாவின் பிரதமராக இருந்தவர். அவர் பெயர் பியரே ட்ரூடோ. "என்னடா இது இந்தியாவுலதான் குடும்ப அரசியல்னு பார்த்தா கனடாவிலுமா" என்பவர்களுக்கு இன்னொரு செய்தி. ஜஸ்டின் 2007ம்  ஆண்டு கனடாவில் வெளிவந்த ஒரு டிவி சீரியலான 'தி கிரேட் வார்' இல் நடிகராகவும் நடித்துள்ளார். நடிகனாக இருப்பவர்கள் அரசியலுக்கு வர கூடாது தலைவரே. நடிக்கிற உங்களுக்கு நாட்டை பற்றி என்ன தெரியும் அப்படினு கேட்பவர்களுக்கு பதிலாக அவர் ஆசிரியர் அவதாரமும் எடுத்திருந்தார். அதன் பிறகு அரசியலில் நாட்டம் கொண்ட அவருக்கு 2008ல்  லிபெரல் கட்சியின் இளைஞரணி போஸ்ட் கிடைத்து. போகப் போக 2013ல் அக்கட்சியின் தலைவரானார். (ஓ... இவர் அந்த ஊரு செயல் தலைவரா அப்படினு கேக்காதீங்க) அதன்பின் 2015ல் கனடா தேர்தலில் பிரதமர் பதவிக்காக போட்டியிட்டு வென்றார்.


இவர் "இது கனடா, இங்கு எங்கள் நாட்டு கலாச்சாரம் மட்டுமே இருக்க வேண்டும் வேறு யாரும் இருக்கக் கூடாது" என்றெல்லாம் டிரம்ப் போல் எப்பொழுதும் பேசியதில்லை. இவர் உலக பேமஸ் ஆனதற்கு காரணமே கனடாவில் வாழும் அனைத்து மக்களையும், அவர்களது கலாச்சாரத்தையும் மதித்தார் என்பதற்காகத்தான். குறிப்பாக அங்கு இருக்கும் தமிழர்களின் மீது அதிக மதிப்பு கொண்டிருந்தார். அதனால்தான் இத்தனை சிறிய வயதில் அவ்வளவு பேமஸ் ஆனார். கனடாவில் 1,57,000 தமிழர்கள் இருக்கின்றனர் (சென்செஸ் படி). ஆனால் அங்கு வாழும் தமிழர்களோ 2,00,000ற்கும் அதிகமான தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றோம் என்கின்றனர்.

 உலகில் அதிக தமிழர்கள் வாழும் இந்தியாவில்கூட தமிழர்களை சிறப்பு செய்யும் விதமாக மத்திய அரசு எந்த திட்டங்களையும் அவ்வளவாக கொண்டுவரவில்லை. ஆனால், இவரோ ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டு வந்தார். அவர் தமிழர்களைப் பற்றி கூறுகையில், " கனடா வாழ் தமிழர்கள் இந்த நாட்டிற்காக நிறைய பங்காற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தமிழின் பெருமையை வருங்காலம் அறியவே ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவித்து சிறப்பித்துள்ளோம்" என்றார்.

தனது டிவிட்டர் பக்கத்திலும்கூட 'இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்' என தெரிவித்தார். இவருக்கு தமிழ் சிறப்பாக பேச தெரியாவிட்டாலும், தமிழை மதிக்க தெரிந்த மனிதர். இப்படி தமிழை மதித்தாலே போதும், தமிழ் வளமும், வாழ்வும் பெறும்.  தமிழனாய் இருந்தால் லைக் செய், மானத்தமிழனாய் இருந்தால் ஷேர் செய் என சமூக ஊடங்களில் பதிவிடுபவர்களுக்கு இந்த நிகழ்வுகள் ஒரு பாடமாக அமையும்.
Read More Only at Nakkheeran.in:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக