ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

அதிமுக அட்டை இருந்தால்தான் அரசு உதவி! தெர்மாகோல் ராஜூ அருள்வாக்கு

மின்னம்பலம் : அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் இனி அரசின் உதவி கிடைக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுவரும் நிலையில், கட்சிக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கை, பழைய உறுப்பினர்களின் பெயர்களைப் புதுப்பித்தல் ஆகிய பணிகளைக் கடந்த ஜனவரி 29ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துவருகின்றனர். அந்த வகையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று(பிப்ரவரி 4) உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுக உறுப்பினர் அட்டை என்பது உயிர் போன்றது. உறுப்பினர் அட்டைதான் நமதுஅங்கீகாரம். இந்த அட்டையை அதிமுகவினர் அனைவரும் பெற்றிருக்க வேண்டும்” என குறிப்பிட்டதோடு, “அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசாங்கத்திலோ வேறு வகையிலோ உதவி பெற்றுத்தர முடியும்” என்றும் தெரிவித்தார்.
அரசின் நலத்திட்டங்களாக இருந்தாலும் வேறெந்த உதவியாக இருந்தாலும் அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே பெற முடியும் என்று நிர்வாகிகளிடையே அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “பிறக்கும்போதே வெற்றி என்ற கவச குண்டலத்தோடு பிறந்த இயக்கம் அதிமுக. எனவே எந்தத் தேர்தலைப் பார்த்தும் பயமில்லை. எந்தத் தேர்தலையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். நடிகர்கள் ட்விட்டரிலும் ஊடகத்திலும் பேசுவதை விடுத்து மக்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரியும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக