திங்கள், 26 பிப்ரவரி, 2018

சண்டிகார் மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவர் மர்ம மரணம்

tamilthehindu :சண்டிகரில் உள்ள பட்டமேற்படிப்பிற்கான மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்(பிஜிஐஎம்இஆர்) எனும் மருத்துவக் கல்லூரியின் தமிழக மாணவர் இன்று காலை மர்ம மரணம் அடைந்துள்ளார்.
.ராமேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் டாக்டர்.கிருஷ்ணபிரசாத். இவரது தந்தை பெயர் ராமு, ராமேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் குருக்களாகப் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணபிரசாத் பிஜிஐஎம்இஆர்-ல் முதலாம் ஆண்டு ஊடுகதிர் துறையின் பட்டமேற்படிப்பு மாணவராக உள்ளார். துவக்கக்கட்டமாக கிடைத்த தகவலின்படி, இவரது அறை இன்று காலை திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது. வகுப்பிற்கு செல்லாமல் கிருஷ்ண பிரசாத் இருப்பதை அறிய கதவு தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகத்தின் பேரில் அவரது அறை உடைத்து பார்க்கப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணபிரசாத் தூக்கில் தொங்கியபடி உயிர் பிரிந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரியில் புதிதாக இணைந்த கிருஷ்ணபிரசாத்திற்கு அங்குள்ள வழக்காடு மொழியான இந்தியை சமாளிப்பது கடினமாக இருந்துள்ளது. இதை தாம் வகுப்பில் இணைந்த முதல் நாளிலேயே உணர்ந்தவர் தம் சகமாணவர்களிடமும் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக தனது படிப்பில் இருந்து விலகி தமிழகம் சென்று விடவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக ஒருமுறை, விமானநிலையம் வரை சென்று விட்டவரை சகமாணவர்கள் சென்று சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை அந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிஜிஐஎம்இஆர் தரப்பில் இது தற்கொலை எனக் கூறப்பட்டாலும் அது மர்ம மரணமாகவும் சந்தேகிக்கப்படுகிறது. கிருஷ்ண பிரசாத்தின் மரணம், அதில் பயிலும் பல தமிழக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ண பிரசாத் மீதான அஞ்சலிக் கூட்டம் நாளை பிஜிஐஎம்இஆர்-ன் நலத்துறை சார்பில் அதன் நேரு மருத்துவமனை அரங்கத்தில் நண்பகல் 12.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யுனியன் பிரதேசமான சண்டிகரில் அமைந்துள்ள பிஜிஐஎம்இஆர், டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை போல் தலைசிறந்தது ஆகும். எய்ம்ஸ் கல்லூரியை போல் இதில் சேரவும், மருத்து மாணவர்கள் இடையே கடும்போட்டி நிகழ்வது உண்டு.
இந்நிலையில் கிருஷ்ணபிரசாத்தின் உடற்கூறு ஆய்வு நாளை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக