செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

தருமபுரி பஸ் எரிப்பு வழக்குக் குற்றவாளிகள் விடுதலை?

மாணவிகள் நினைவிடம்எம்.வடிவேல்

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் மூன்று பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்திலும் கலவரம் நடைபெற்றது. அப்போது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி பையூரில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையத்துக்குச் சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேருந்தை எரித்ததில் பேருந்தில் சிக்கிய மாணவிகள் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகியோர் உடல் கருகி பலியாயினர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பேருந்தை எரித்த மாது, ரவீந்திரன், முனியப்பனுக்கு தூக்குதண்டனையை உறுதி செய்தது.


இறுதியாகக் குற்றவாளிகள் மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பி வைத்தனர். கருணை மனுவை ஆய்வுசெய்த குடியரசுத் தலைவர், தூக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள் தண்டனையாக மாற்றினார். பஸ் எரிப்பு வழக்கில் 10 வருடங்களுக்கு மேலாகச் சிறைதண்டனை அனுபவித்து வருவதால், மூவரையும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளைச் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் எடுத்து வருவதாகவும் தெரிகிறது.
இதனிடையே, கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள இந்தக் குற்றவாளிகளைத் தமிழக அரசு விடுதலை செய்யக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக