சனி, 3 பிப்ரவரி, 2018

பாஜக ஹிந்தி தாக்குதல் ஆரம்பம் : டெல்லி தமிழ்நாடு இல்லம் இனி வைகை , பொதிகை இல்லம் ... கர்நாடக இல்லம் இனி காவிரி இல்லம் ...

மின்னம்பலம் : டெல்லியில் இருக்கும் தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு இல்லத்துக்கு வைகை இல்லம், பொதிகை இல்லம் என்று புதிய பெயர் சூட்ட பட்டிக்கிறது. இதைவிட அதிர்ச்சியாக கர்நாடக அரசின் இல்லத்துக்கு காவிரி இல்லம் என்று பெயர் சூட்டப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் காவிரி என்ற பெயர்கூட தமிழகத்துக்குச் சொந்தம் இல்லை என்ற ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் டெல்லி செல்லும் அரசு பிரதிநிதிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கான செல்லும் மாணவர்கள், போட்டித் தேர்வுக்காகச் செல்லும் இளைஞர்கள் தங்குவதற்காக டெல்லி சாணக்யபுரியில் 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு இல்லம் முதன்முதலாக அமைக்கப்பட்டது. ஆண்டுகள் பல ஆன நிலையில் இன்னும் விரிவாக்கம் தேவை என்பதால் 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு இல்லம் புதிய கட்டடத்தைக் கட்டினார். இது புதிய தமிழ்நாடு இல்லம் எனப்படுகிறது.

இந்நிலையில், ‘பழைய, புதிய என்ற குழப்பமும் வேற்றுமை உணர்வும் ஏற்படுவதால் தமிழ்நாடு இல்லம் என்பதை அகற்றிவிட்டு வைகை இல்லம், பொதிகை இல்லம் என்று பெயர் சூட்டப்படுகிறது’ என்று ஜனவரி 29ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது நேற்று பரவி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கர்நாடகத்துக்கு காவிரி இல்லமா?
இதுபற்றி நம்மிடம் பேசிய விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், “தமிழ்நாடு இல்லம் என்பது இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் அமைந்திருக்கிற தமிழகத்தின் உரிமை. இதை யாருக்காக மாற்றுகிறார்கள்? டெல்லியில் இருக்கும் அனைத்து மாநில இல்லங்களுக்கும் அந்தந்த மாநிலம் சார்ந்த நதிகள் பெயரைச் சூட்டுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக டெல்லியில் என் அரசியல் நண்பர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு பொதிகை, வைகை என்று பெயரிட்டுவிட்டு, கர்நாடகா மாநிலத்தின் இல்லத்துக்கு காவிரி என்று பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இதன் அர்த்தம் என்னவென்றால்... காவிரி என்ற பெயர் இனி கர்நாடகத்துக்கே சொந்தம் என்பதுதான். தமிழக முதல்வர் காவிரி நதிநீர் பற்றிப் பேச கர்நாடக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றால், அது தமிழகத்தை மிகக் கொடூரமாக வஞ்சிக்கும் செயல். இதற்கு எடப்பாடி பதில் சொல்லியாக வேண்டும்.
டெல்லியில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகரங்கள் அந்தந்த நாட்டின் பெயரில்தானே இருக்கின்றன. அப்படி இருக்கையில், டெல்லியில் இருக்கும் தமிழ்நாட்டின் இல்லம், ‘தமிழ்நாடு இல்லம்’ என்று இருப்பதுதான் சரியாக இருக்கும். அந்தந்த மாநிலங்கள் அந்தந்த பெயரிலேயே இருப்பதுதான் மொழிவாரி மாநிலத்துக்கு மரியாதை செய்வதாக இருக்கும். இதுபற்றி ஒத்த அமைப்புகளோடு ஆலோசித்து போராட்டத்தை விடுதலை தமிழ் புலிகள் கட்சி முன்னெடுக்கும்” என்றார்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு என்ற பெயரைப் பறித்து இப்படி ஒரு பரிசைக் கொடுத்திருக்கிறது தமிழகத்தை ஆளும் ‘அண்ணா’ திராவிட முன்னேற்றக் கழக அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக