சனி, 10 பிப்ரவரி, 2018

நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராட்டம்!

மின்னம்பலம்: சமூக நீதிப் பாதுகாப்பிற்கான அனைத்து அமைப்பு
நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராட்டம்!பேரவை சார்பில், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி டெல்லியில் போராட்டம் நடைபெறுமென, இன்று (பிப்ரவரி 10) அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. குறைந்தபட்சம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வரை இந்த அறப்போராட்டம் தொடருமென்றும், அதன்பிறகு இந்தப்போராட்டம் அகில இந்திய அளவில் நடைபெறுமென்றும் தெரிவித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இன்று (பிப்ரவரி 10) சென்னை வேப்பேரியில் மாணவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாக நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டம்
நடத்தப்படுமென்று தெரிவித்தார். இதற்கு, ‘சமூக நீதிப் பாதுகாப்பிற்கான அனைத்து அமைப்புப் பேரவை’ என்று பெயரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரித் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த மசோதா, அரசியலமைப்புச் சட்டப்படி நமக்கு இருக்கிற உரிமையை வலியுறுத்துகிறது. அப்படி அந்த மசோதா ஏற்கப்படாவிட்டால், என்ன காரணத்தினால் அதனை ஏற்க முடியவில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அப்போது, நம்மால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்” என்றார்.
நீட் எதிர்ப்பு விவகாரத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்காகவே, இந்தப் பேச்சுவார்த்தையில் அனைத்து மாணவர் அமைப்புகளும் பங்கேற்றிருப்பதாகத் தெரிவித்தார் வீரமணி. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் அறிவித்தார். “நீட் தேர்வுக்கான விலக்கை தமிழக அரசு உடனடியாகப் பெறுமாறு வலியுறுத்துவது, இந்த விவகாரம் முடிவடைந்ததாக உருவாக்கப்பட்ட போலி தோற்றத்தை உடைப்பது, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லா மருத்துவக் கல்லூரி வாயிலிலும் மாணவர் அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவது, நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரைகளை மாவட்டத் தலைநகரங்களில் மேற்கொள்வது, டெல்லியில் அனைத்து மாணவர் அமைப்புகளின் சார்பில் பெரிய போராட்டத்தை நடத்துவது, அன்றைய தினமே நீட் தேர்வினால் ஒவ்வொரு மாநிலமும் பாதிக்கப்படுவது குறித்து தேசியக் கருத்தரங்கத்தை நடத்துவது, பொதுமக்களின் எதிர்ப்பைக் கடிதம் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ளவிருக்கிறோம்” என்று கூறினார்.
மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள், நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து தமிழக முதலமைச்சரைச் சந்தித்து வலியுறுத்துவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
“நீட் தேர்வுக்கு எதிராக, குறைந்தபட்சம் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வரை எங்களது அறப் போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக, இதனை அகில இந்திய அளவில் எடுத்துச் செல்லவிருக்கிறோம். இதுபற்றி, நீதிமன்றத்தை மீண்டும் நாடவும் வாய்ப்புகள் உள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட அறிஞர்கள் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார் வீரமணி.
இந்தப் பேச்சுவார்த்தையில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக