புதன், 7 பிப்ரவரி, 2018

நீட் தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க விடுவோம் ... முன்னாள் அமைச்சர் நேரு முழக்கம்!

tamilthehindu : நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாவிட்டால் மாணவர்களை காப்பியடிக்கவாவது விடுவோமா? இல்லையா? என திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் நேற்று முன்தினம் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை என்றால், மாணவர்களை காப்பியடிக்கவாவது விடுவோமா? இல்லையா?.
நாங்கள் அமைச்சர்களாக இருந்தால் கண்டிப்பாக செய்வோம். பிஹாரில் காப்பி அடிக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் காப்பி அடிக்கின்றனர். ஏன், தேர்வு மையத்தில் அனைவரும் புத்தகத்தைக்கூட திறந்துவைத்து எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு நாளைக்கு உத்தம சீலர்களாகவே இருப்பது?. டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகளைப் பெற இப்போது, வெளிநாட்டில் இருந்தும்கூட தேர்வு எழுத வந்துவிட்டனர்.

லாலு பிரசாத் யாதவ் தற்போது சிறையில் இருக்கிறார். அவர், ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணிகளுக்கான தேர்வை நடத்தினார். அப்போது, அடிப்படை கல்வியறிவே இல்லாத பிஹாரில் இருந்து, கிட்டத்தட்ட லட்சக்கணக்கானோர் ரயில்வே பணிக்கு வந்துவிட்டனர் என்றார்.

நகைச்சுவையாக பேசினேன்

கே.என்.நேருவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்த்தும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கே.என்.நேருவிடம் கேட்டபோது, “பொதுக்கூட்டமாக இருந்தாலும், அறைகளில் இருந்தாலும் எப்போதுமே யதார்த்தமாக பேசுவது என் வழக்கம். நீட் தொடர்பான ஆர்ப்பாட்டத்திலும் அப்படித்தான் பேசினேன். பிஹார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெறக்கூடிய தேர்வுகளில் அப்பட்டமாக காப்பியடிக்க விடுகின்றனர். புத்தகத்தையே கொடுக்கின்றனர். ஆனால், இங்கு நாம் அப்படியெல்லாம் செய்கிறோமா என்பதைப் பற்றி கூறினேன். அப்போது, நகைச்சுவையாக நான் பேசிய ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்து பரவவிட்டுள்ளனர். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு, நான் எப்படி பேசியிருப்பேன் என்பது புரியும்” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக