வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

கேரளாவில் ஆதிவாசி இளைஞர் அடித்து கொலை செல்பியும் எடுத்த கொலையாளிகள் ..விடியோ


மின்னம்பலம் :கேரளாவில் ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிவாசி இளைஞர் கொலை: பினராயி விஜயன் கண்டனம்!கேரள மாநிலம் அட்டாப்பாடி பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆதிவாசி இளைஞரான மது என்பவரை 15 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
அந்தக் கும்பல் மதுவின் இரு கைகளையும் கட்டி, சரமாரியாகத் தாக்கியுள்ளது. மதுவிடம் ஒரு இளைஞர் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் அதனை மற்றொரு இளைஞர் செல்ஃபி எடுத்துள்ளார். முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இவர்களின் தாக்குதலுக்குப் பிறகு அவர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மதுவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவர் உயிரிழந்தது குறித்துச் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
“மது மீது கடைகளில் உணவுப் பொருட்கள், அரிசி திருடியதாக மூன்று வழக்குகள் உள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமையும் கலண்டா பகுதியில் உள்ள அரிசிக் கடையில் திருடியுள்ளார். இதையடுத்து ஒரு கும்பல் காட்டுப் பகுதியில் வைத்து அவரைத் தாக்கியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று அவரைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம். செல்லும் வழியில் மதுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே அவர் உயிரிழந்ததுக்கான காரணம் குறித்துக் கூற முடியும். இந்த விவகாரத்தில் கே. ஹுசைன், பி.பி. கரீம் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மது தாக்கப்பட்டதற்கு முகநூலில் கண்டனம் தெரிவித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், இதுபோன்று இனி நடைபெறாத வண்ணம் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். “நமது சமூகத்தில் இத்தகைய கொடுஞ்செயல்களை அனுமதிக்க முடியாது. கேரள மாநிலத்துக்கு இந்தச் சம்பவம் இழுக்கு சேர்த்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக