ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

நடிகர்கள் அரசியலுக்கு வருவது எதற்காக?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது எதற்காக?minnambalam :அரசியல்வாதிகள் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டதால், நடிகர்கள் எல்லாம் அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டு,அதற்கான ஆயத்த பணிகளையும் அடுத்த கட்ட நடவைடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.நடிகர் விஷாலும் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேலும், நடிகர் பாக்கியராஜும் இன்னும் ஒரு மாதத்தில் கட்சி துவங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று(பிப்ரவரி 17) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திராவிடர் கழகம் சார்பாக நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, "அரசியல்வாதிகள் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டதால், நடிகர்கள் எல்லாம் அரசியல்வாதிகளாகி விட்டனர் " என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசும்போது,"தமிழகத்தில் ஆட்சி காட்சியாக இருக்கிறது,ஆட்சியாக இல்லை.இது சமூகநீதி,மாநில உரிமைகள் இவற்றின் நீட்சியாக மாற வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் டெல்லி ஆட்டுவிக்கிறது, நாங்கள் ஆடுகிறோம் என்பதை வெளிப்படையாகவே வெட்கமில்லாமல் சொல்லுகிறார்கள்.இந்த நிலை மாறுவதற்கு ஒரே வழி ஆட்சி மாற்றம் தான் என்று கி.வீரமணி குறிப்பிட்டார்.
காவிரி நதிநீர் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தான கேள்விக்கு, "காவிரிப் பிரச்னையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைவிட பத்து டி.எம்.சி தண்ணிர் குறைவாக இருந்தாலும்,தீர்ப்பை வைத்துக்கொண்டு தண்ணீர் திறக்க முடியாது.அதனை நடைமுறை படுத்துவதற்குரிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.அதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பதாகும்.இதனை உடனடியாக அமைக்க வேண்டும். எந்த நதியும் யாருக்கும் சொந்தமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது.காவிரி பிரச்னையில் இனி மத்தியஅரசு குறுக்கே நிற்க முடியாது, கண் ஜாடை காட்டினால் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரலாம் என்று பஜாகவுக்கு நப்பாசை இருக்கிறது அந்த எண்ணத்தை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.மாநில அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி விவகாரத்தை மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று கி.வீரமணி பதிலளித்தார்.
ஓடிசாமாநிலத்தில் தமிழக அதிகாரி தக்கபட்டது குறித்த கேள்விக்கு கி.வீரமணி, "இதற்கு முன்னர் வடக்கே சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் இறந்து கொண்டிருந்தநிலையில், தமிழகத்தை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒடிசாவில் தாக்கப்பட்டது, இந்த ஆட்சி எத்தகைய காட்டுமிராண்டி ஆட்சி என்பதை புரிந்து கொள்ள உதவும். மத்திய அரசு இதனை வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. மாநில அரசு வழக்கம் போல் மவுனம் சாதிக்க கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக