சனி, 24 பிப்ரவரி, 2018

வங்கிகளுக்கு அதானி செலுத்த வேண்டிய தொகை,,, மிக மிக அதிகம் ...

ADaniநக்கீரன் ச.ப.மதிவாணன்  : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது வைரவியாபாரி நீரவ் மோடியின் மெகா மோசடி. இது ஒருபுறமிருக்க விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி என நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி, திரும்பச் செலுத்தாத பெருமுதலாளிகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறது.
தங்கள் பணங்களை பாதுகாக்க வங்கிகளில் டெபாசிட் செய்யும் மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாநிலங்களவைக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பவன் வெர்மா, அதானி குழுமம் மற்றும் அதன் நிறுவனர் கவுதம் அதானியின் மீது வாராக்கடனைத் திரும்பச் செலுத்தாத குற்றச்சாட்டுகளை சரமாரியாக அடுக்கினார். மேலும், பொதுத்துறை வங்கிகளில் அவர் திரும்பச் செலுத்தாத இமாலயத் தொகையை பட்டியலிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

மாநிலங்களவைக் கூட்டத்தின் நேரமில்லா நேரத்தின் போது பேசிய பவன் வெர்மா, ‘இந்தியாவில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசிய வங்கிகளுக்குத் திரும்பி செலுத்தவேண்டிய கடன்தொகை மட்டும் ரூ.5 லட்சம் கோடி. அதில் ஏறக்குறைய ரூ.1.4 லட்சம் கோடியை லான்கோ, ஜி.வி.கே., சுஜ்லான் எனர்ஜி, இந்துஸ்தான் கட்டுமான கம்பெனி மற்றும் அதானி குழுமம் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் திரும்பச் செலுத்தாமல் இருக்கின்றன. அரசுக்கும் இந்த நிறுவனங்களுக்கு இடையே என்ன உறவு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
அதானி மாதிரியான பெருமுதலாளிகள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கண்டுகொள்வதில்லை. மோடியும் தான் எங்கு சென்றாலும், கூடவே அதானியை அழைத்துச் செல்கிறார்’ என்றார்.
இந்த உரை நிகழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பொதுத்துறை வங்கிகளின் பாதுகாப்பிற்காக மோடி தலைமையிலான அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே காலக்கட்டத்தில்தான் LoU கடிதங்கள் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவை விட 8 மடங்கு அதிகமாக கடன்வாங்கிவிட்டு, அதைத் திரும்பச் செலுத்தாமல் நாட்டுக்குள்ளேயே சுதந்திரமாக, செல்வாக்கோடு இருக்கிறார் கவுதம் அதானி. எந்த வங்கியின் ஏஜெண்டுகள் அவர் நிறுவனத்தை ஜப்தி செய்வார்கள்?
Read More Only at Nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக