சனி, 17 பிப்ரவரி, 2018

நீரவ் மோடி இந்தியா கொண்டுவரப்படுவாரா? அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி .

மின்னம்பலம் :நீரவ் மோடியையும் விஜய் மல்லையாவையும் எத்தனை நாள்களுக்குள் மத்திய பாஜக அரசு இந்தியாவுக்குக் கொண்டுவரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
பிரபல நகைக்கடை அதிபரான நீரவ் மோடி, மும்பையிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,292 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து, சிபிஐயும் மத்திய அமலாக்கத் துறையும் விசாரணை செய்து வருகின்றன. நீரவ் வீட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணமும் நகையும் அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆனால், நீரவ் மோடியும் அவரது நிறுவன பங்குதாரரான மெகுல் சின்னுபாய் சோக்சியும், கடந்த ஜனவரி மாதமே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். இருவரது பாஸ்போர்ட்டையும் நான்கு வார காலத்துக்கு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது இந்திய வெளியுறவுத் துறை. சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போல், நீரவ் மோடி, அவரது மனைவி மற்றும் உறவினர்களைத் தேடி வருகிறது. இவர்கள் அனைவரும், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நீரவ் மோடி மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேபோல, சுமார் 9 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா. இவர், தற்போது இங்கிலாந்திலுள்ள லண்டன் நகரில் வசித்து வருகிறார். இவரை இந்தியாவுக்குக் கொண்டுவரும் மத்திய அரசின் முயற்சிகள் இதுவரை நிறைவேறவில்லை.
நீரவ் மோடி, விஜய் மல்லையா என்ற இரண்டு தொழிலதிபர்கள் வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றியுள்ளது குறித்து, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரையும் மத்திய பாஜக அரசு எப்போது இந்தியாவுக்குக் கொண்டுவரும் என கேள்வி எழுப்பியுள்ளார் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இதுகுறித்து, அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நீரவ் மோடியும் விஜய் மல்லையாவும் எப்போது இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்ற கால நிர்ணயத்தை மத்திய பாஜக அரசு அறிவிக்க வேண்டும். அவர்களிடமுள்ள பணம் எப்போது திரும்பப் பெறப்படும் என்பதையும் சொல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீரவ் மோடி விவகாரத்தில், இதுவரை 18 வங்கி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக