வியாழன், 22 பிப்ரவரி, 2018

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரத சாகு நியமனம்!

muthukrishnan-s" .vikatan.com  :தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரத சாகுவை நியமித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 1997-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சத்ய பிரத சாகு, சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அவர், விரைவில் பதவியேற்க உள்ளார். தமிழகத் தேர்தல் அதிகாரியாக கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டார். தமிழகத் தலைமைத்  தேர்தல் அதிகாரியாக 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி இடைத்தேர்தல்களையும் அவர் நடத்தி முடித்தார். திருமங்கலம், ஆர்.கே.நகர் தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் அவர் நடத்தினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பணப் பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவிட்டு, மீண்டும் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலையும் நடத்திமுடித்தார். குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகியவற்றையும் அவர் நடத்தினார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து அவரை மாற்றிவிட்டுப் புதிய அதிகாரி ஒருவரை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இதையடுத்து, டிட்கோ தலைவர் ரமேஷ் சந்த் மீனா, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளராக இருக்கும் கார்த்திக், சென்னைப் பெருநகரக் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சத்ய பிரத சாகு ஆகிய மூவர் பெயர்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்திருந்தார். அதில், தேர்தல் ஆணையத்தின் தீவிர ஆலோசனைக்குப் பிறகு, சத்ய பிரத சாகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக