செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

சண்டிகார் :மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பட்டது

மற்ற பிள்ளைகளுக்கு இது மாதிரி நடக்காம பாத்துக்கணும்!மின்னம்பலம் :சண்டிகரில் படித்துவந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சண்டிகரில் செயல்பட்டுவரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். (PGIMER) மருத்துவக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு படித்துவந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணபிரசாத் நேற்று (பிப்ரவரி 26) கல்லூரி விடுதியில் தூக்கில் தொடங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
கிருஷ்ண பிரசாத்தின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் விமானம் மூலம் சண்டிகர் வந்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு கிருஷ்ண பிரசாத்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலை மார்க்கமாக டெல்லி கொண்டுவரப்படும் கிருஷ்ண பிரசாத்தின் உடல், அங்கிருந்து விமானம் மூலமாகத் தமிழகம் எடுத்துவரப்படும்.

"என் பையன் மொழி தெரியலனு எங்ககிட்ட சொல்லிருந்தான். அதுனாலதான் தற்கொலை பண்ணிகிட்டான்னானு தெரியல. எங்க பிள்ளையை நாங்க இழந்துடோம் ... இனிமேலாவது மத்த பிள்ளைகளுக்கு இது மாதிரி நடக்காம பாத்துக்கணும்" என்று கிருஷ்ண பிரசாத்தின் பெற்றோர் தெரிவித்தனர்.
வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய வகையில் தற்கொலை செய்துகொள்வது மர்மாக இருக்கிறது. இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்; இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ண பிரசாத்தின் உறவினர்களும், மருத்துவர்கள் சங்கமும் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் மருத்துவ மாணவர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயர் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். தற்போது கிருஷ்ண பிரசாத்தின் மரணத்தையடுத்து, தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
”தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குச் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவ மாணவர்கள், எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் மனதுக்கு வேதனையளிக்கிறது. எதிர்காலத்தில் அந்த மாணவர்களுக்கு மனவலிமை கொடுக்கும் விதத்தில், அவர்களுக்கு கவுன்சலிங் அளிக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார் விஜயபாஸ்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக