வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

நாட்டை திருடி விற்ற மோடி அரசின் கடைசி பட்ஜெட் – முதல்கட்ட பார்வை !

வீட்டில் உள்ள பொருட்களை விற்றுத் தீர்க்கும் சூதாடி குடும்பத்தலைவன் சிறப்பானவனா?. இந்தியாவை கூறுபோட்டு விற்பதை பெருமையாக பீற்றிக் கொள்ளும் அரசை என்னவென்று சொல்வது ? ஏலக்கம்பெனி என்று தான் கூறவேண்டும்.
வினவு :மக்களுக்குக் கொடுக்க கிண்டப்படும் ‘அல்வா’ 
வரவிருக்கும் 2018 – 2019 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் அருண் ஜெட்லி. தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்கிய நிதியமைச்சர், அவ்வப்போது ஹிந்தியிலும் பேசியிருக்கிறார். பார்ப்பனியத்தை ஆட்சித் தத்துவமாக்கத் துடித்து வரும் மோடி அரசின் மற்றுமொரு இந்தித்திணிப்பு நடவடிக்கை இது
இது குறித்து முகநூலில் வந்த ஒரு கண்டனச் செய்தியை ஆழி செந்தில்நாதன் பதிவு செய்திருக்கிறார்.
******
Aazhi Senthil Nathan
நிதி அமைச்சருக்கு கடும் கண்டனம்.
நிதிநிலை அறிக்கையில் பெரும்பாலும் இந்தியைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்கிற நிலையை நோக்கி இந்தியாவை நகர்த்துகிறார்கள் ஹிந்தியர்கள். 1965 இல் தமிழர்களால் தோற்கடிக்கப்பட்ட இந்தி வெறியர்கள் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்கிற கனவை நிறைவேற்றத் துடிக்கிறார்கள்.
இந்தித் திணிப்பை எல்லா இந்தி பேசாத மாநிலங்களும் எதிர்க்கும் நிலையில், எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், தனது மொழிவெறியைக் காட்டியிருக்கிறது இந்தி அரசு.

ஆங்கிலத்தை இணைப்பு மொழி என்கிற இடத்திலிருந்து ஹிந்தியா நீக்குமானால் அது இந்தியாவின் அடித்தளத்தையே நொறுக்கிவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும். தெரிந்தே அப்பட்டமாக தங்கள் வெறித்தனத்தைக் காட்டுகிறார்கள்.
இந்திவெறி பிடித்த மோடி அரசை தன்னாட்சித் தமிழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
எங்கள் மொழி உரிமையையும் எங்களுக்கான நிதி இறையாண்மையையும் வென்றெடுக்கும் வரை ஓயமாட்டோம்.
******
அருண் ஜெட்லி : 2017-18-ம் ஆண்டில் நேரடி வரியில் 12.6 விழுக்காடு மற்றும் மறைமுக வரியில் 18.7 விழுக்காடு வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கில் எந்தவித மாற்றமும் இல்லை. பணமதிப்பழிப்பால், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மக்கள்: ஒரு நாட்டில் நேரடி வரி குறைவாகவும், மறைமுகவரி அதிகமாகவும் இருந்தால் அந்நாட்டின் முதலாளிகள் மகிழ்ச்சியாகவும், மக்கள் துக்கத்தோடும் வாழ்வதாக பொருள். அதன்படி மோடி அரசின் வரிக் கொள்கையின் படி சாதாரண மக்கள் செலுத்தும் மறைமுக வரியில் 18.7% வளர்ச்சி என்பது சாதனையா வேதனையா?
அருண் ஜெட்லி: சட்டவிரோத பண பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படும் கிரிப்டோ கரன்சியை ஒழிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
மக்கள்: சட்டபூர்வமாகவே கருப்புப்பணம் அன்னிய முதலீடாக வரும்போது சட்டவிரோத பரிவர்த்தனையை ஒழிக்க முயற்சி எடுத்து என்ன பயன்? அதவும் நிதியமைச்சர் கிரிப்டோவை ஒழிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றுதான் கூறியிருக்கிறாரே ஒழிய என்ன முயற்சி என்பதைக் கூறவில்லை. அப்படியே கூறினாலும் அது ”ஆகட்டும் பார்க்கலாம், நல்லதே நடக்கும்” என்ற வெத்துவேட்டுதான். மொரிசியஸ் போன்ற வரி இல்லா சொர்க்கங்களில் இருந்து இந்தியாவில் சட்டபூர்வமாக வரும் கருப்புப்பணத்தை வைத்துக் கொண்டே இங்கே வெளிப்படையான பொருளாதாரம் எப்படிச் சாத்தியம்?
அருண் ஜெட்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்படும்.
மக்கள்: கழிப்பறை கட்டுவதற்கான இந்த திட்டத்தில் விளம்பரத்திற்கு மட்டும் நிறைய செலவழித்திருப்பார்கள் போலும். நகர்ப்புறங்களிலும் சரி,  கிராமப் புறங்களிலும் சரி வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். அது போக வாடகை வீடுகளிலும் கழிப்பறை வசதிகள் உள்ளவை குறைவு. அதையும் தாண்டி நீர் வறட்சியும் அதிகம். அரசு கட்டியுள்ள பல இலட்சம் கட்டணக் கழிப்பறைகளில் கூட தண்ணீர் வசதிகள் மிகவும் குறைவு. சென்னை போன்ற நகரங்களில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் கூட தண்ணீர் வசதி இல்லை. ஏழ்மை, வறுமையை வைத்துக் கொண்டே வெறும் கழிப்பறை மட்டும் கட்டுவது என்பது போதுமானது அல்ல!
அருண் ஜெட்லி: செளபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி மின் இணைப்புகள் வழங்கப்படும்.
மக்கள்: தனியார் மின்சாரம் அதிகரித்து வரும் காலத்தில் மின்சாரக் கட்டணம்தான் அதிகிரித்துக் கொண்டே போகிறது. மின்சார தயாரிப்பை அரசு கைவிழுவி விட்டுக் கொண்டே மின் இணைப்புக்களைக் கொடுத்து என்ன பயன்?
அருண் ஜெட்லி: விமானநிலையங்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக உயர்த்த திட்டம்.
மக்கள்: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகி வருகிறது. மலிவான கட்டணத்தைக் கொண்டுள்ள  ரயில்வேயிலோ கூட்டம் பிதுங்கி வழிகிறது. ஆனால் அரசு தனது முதலீட்டை அதிகமாக மேட்டுக்குடியினருக்கு ஒதுக்குகிறது என்பதற்கு இந்த ஐந்து மடங்கு விமான நிலைய எண்ணிக்கை ஒரு சான்று. எனில் இதற்கு எத்தனை பில்லியன் கோடி ரூபாயை மொய்யாக வழங்குவார்களோ தெரியவில்லை.
அருண் ஜெட்லி: காச நோயாளிகள் நலனுக்காக 600 கோடி ஒதுக்கீடு. 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு பயன்படும் வகையில், தேசிய சுகாதார திட்டம் தொடங்கப்படும்.
மக்கள்: இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 2,20,000 மக்கள் காசநோயல் மரிக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி 2011-ம் ஆண்டில் 22 இலட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதே ஆண்டில் உலக அளவில் 96 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதன் படி உலக அளவில் ஐந்தில் ஒருவர் இந்தியாவின் காச நோயாளியாக இருக்கின்றார். 2018-ல் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கும்.
எனினும் அருண் ஜெட்லி ஒதுக்கியிருக்கும் 600 கோடி ரூபாயை அந்த 22 இலட்சம் மக்களுக்கு பிரித்தால் என்ன வரும்? ஒரு நபருக்கு 2727 ரூபாய் மட்டுமே வரும். இதை வைத்து என்ன செய்ய முடியும்? இந்த இலட்சணத்தில் பத்து கோடி ஏழை குடும்பங்களுக்கு உதவும் தேசிய சுகாதார திட்டத்தில் என்ன கிடைக்கும்? ஒரு வடையும் தேநீரும் கிடைத்தால் அதிகம்!
அருண் ஜெட்லி: பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கென ’ஏகலைவா’ பள்ளிகள் தொடங்கப்படும்.
மக்கள்: பழங்குடி மக்களின் மேம்பாட்டை நாம் ரோகித் வெமுலா, அனிதாக்களின் தற்கொலைகளிலேயே பார்த்திருக்கிறோம். ஏகலைவா பள்ளிகளில் பழங்குடி மக்களின் மரபையும், பண்பாட்டையும் ஒழித்து விட்டு பார்ப்பனியத்தை விசம் போல கொடுப்பது நிச்சயம் நடக்கும். தலித்துக்கள், பழங்குடிகளை உள்ளிழுக்கும் வேலையை துரிதப்படுத்துவதற்கே இந்த ஏகலைவா பள்ளிகள் பயன்படும். ஏகலைவனின் கட்டை விரலை வெட்டி முடக்கினார் துரோணர். இங்கோ ஏகலைவர்களின் சிந்தனையை வெட்டும் வேலையைத்தான் தற்போது மோடி அரசு செய்யத் துடிக்கிறது.

மருத்துவக் கல்லூரிகளை அதிகரித்து நீட் மூலம் இன்னும் எத்தனை அனிதாக்களைக் கொல்லப் போகிறார்கள்?
அருண் ஜெட்லி: ஒவ்வொரு மூன்று பாராளுமன்ற தொகுதிக்கும் ஒரு மருத்துவ கல்லூரி இருப்பது உறுதிசெய்யப்படும். நாடு முழுவதும் 24 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும். 1000 சிறந்த பொறியியல் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் ஐஐடி மற்றும் என்ஐடி-யில் முனைவர் பட்டம் பயில உதவிகள் வழங்கப்படும்.
மக்கள்: தமிழகத்தில் நீட் தேர்வின் படையெடுப்பு என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதறிவோம். தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவிப்பதைத்தான் ஜெட்லியின் அறிவிப்பு சொல்கிறது. அடுத்து சிறந்த பொறியியல் மாணவர்களை தெரிவு செய்து ஐஐடியில் சேர்ப்பது என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிறந்த மூளைகளை அரசு செலவில் வழங்குவது அன்றி வேறு அல்ல. பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் அரசின் கைகளை கழுவிவிட்டு தனியார் கல்வியை பூதகரமாக வளர்த்து விட்டு, விரல் விட்டு எண்ணப்படும் உயர்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு இத்தகைய ஐஐடி வாய்ப்புகளை வழங்கி தனது பாராமுகத்தின் சேதத்தை குறைப்பதற்கு இந்த அறிவிப்பு பயன்படும்.
அருண் ஜெட்லி: 8 கோடி ஏழை பெண்களுக்கு சிலிண்டர்கள் வழங்கப்படும். மூங்கில் மரங்கள் வளர்ப்புக்காக 12,900 கோடி ஒதுக்கீடு.
மக்கள்: சிலிண்டர்களின் மானியத்தை ரத்து செய்து விட்டு சந்தை விலையை ஒராண்டில் கொண்டு வரப் போகிறார்கள். இந்த இலட்சணத்தில் எட்டு கோடி பெண்களுக்கு வழங்குவதின் பொருள் என்ன? அதானிக்கு அனைத்து மீறல்களோடும் நிலக்கரி உற்பத்தி, ஏற்றுமதிக்கு சலுகை வழங்கி விட்டு மூங்கில் மரத்தை வளர்த்து என்ன பயன்?
அருண் ஜெட்லி: இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 இலட்சம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
மக்கள்: எப்படி? கடந்த நான்காண்டுகளில் 1 கோடி வேலைவாய்ப்பு ’உருவாக்கியதைப்’ போலவா? ஆட்சியமைத்த நாளில் இருந்து எவ்வித வேலைவாய்ப்பையும் உருவாக்காமல் வெறும் வாய்ச்சவடாலில் ஓட்டிக் கொண்டிருந்த மோடி, இன்னும் ஒரே ஆண்டில் 70 இலட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி விடுவாராம் நம்புங்கள்
அருண் ஜெட்லி: பொதுத்துறை சொத்துக்களை விற்பதற்கு கடந்த நிதியாண்டில் திட்டமிடப்பட்ட தொகையான ரூ.72,500 கோடி இலக்கை எட்டியிருக்கிறது அரசு. இந்த நிதியாண்டுக்கான பொதுத்துறை சொத்துக்களை விற்பதற்கான இலக்கு ரூ.80,000 கோடி.
மக்கள்: வீட்டில் உள்ள பொருட்களை இன்னும் அதிகரிக்கும் வண்ணம் செயல்படும் குடும்பத்தலைவன் சிறப்பானவனா அல்லது வீட்டில் உள்ள பொருட்களை விற்றுத் தீர்க்கும் சூதாடி குடும்பத்தலைவன் சிறப்பானவனா?. இந்தியாவை கூறுபோட்டு விற்பதை பெருமையாக பீற்றிக் கொள்ளும் அரசை என்னவென்று சொல்வது ? ஏலக்கம்பெனி என்று தான் கூறவேண்டும்
அருண் ஜெட்லி: சுமார் 1.5 இலட்சம் சுகாதார நலத்துறை மையங்களை உருவாக்கி அதில் அவசியமான மருந்துகளும், நலத்திட்டங்களும் இலவசமாக வழங்கப்பெறும். அதற்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மக்கள்: அதாவது ரூ.80,000 ஒரு மையத்தை உருவாக்கி ஆண்டு முழுவதும் இலவச மருந்துகளும், இலவச மருத்துவ சேவையும் வழங்கப் போவதாகக் கூறுகிறார் ஜெட்லி. அரசு டெண்டரில் இரண்டு நோயாளி படுக்கைகள் வாங்குவதற்கே இந்தத் தொகை சரியாய்ப் போய்விடுமே? யாரிடம் கதை விடுகிறார் ஜேட்லி ?
அருண் ஜெட்லி: இரயில்வே பட்ஜெட்டில் இந்த ஆண்டு 4000 ஆளில்லா இருப்புப்பாதை கடப்பு வழிகள் பாதுகாப்பானதாக மாற்றப்படும்.
மக்கள்: கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதே வாய்தான் இரயில்வே பாதுகாப்பில் முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக அறிவித்தது. இந்த 4000 ஆளில்லா இருப்புப்பாதைக் கடப்புகள்தான் கடந்த ஆண்டின் பாதுகாப்பான இரயில்வேயின் சான்று எனில், இதன் மூலம் மோடி அரசின் செயல்பாட்டு யோக்கியதையை புரிந்து கொள்ளவேண்டியதுதான்.
அருண் ஜெட்லி: 2018-2019-ம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட் ரூ.1,48,500 கோடி ஒதுக்கீடு.
மக்கள்: வருச வருசம் பட்ஜெட்டுல இருந்து இத்தன கோடியையும் எடுத்துக்கிட்டு, டிசைன் டிசைனான பேர்ல மக்கள்கிட்ட இருந்தும் கட்டணக் கொள்ளையடிச்சுட்டு மொத்தக் காசையும் புல்லட் ட்ரைனுக்கும், எல்லாப் பெட்டிகளையும் குளிர்பதனப் பெட்டியா மாத்துறதுக்கும் செலவு செய்கிறது மோடி அரசு. சாதாரண மக்களால பயணம் செய்யமுடியாத வகையில இரயில்வேயை மாத்துறதுக்கு நம்ம வரிப்பணத்துலயே ஏற்பாடு செய்யுறாரு ஜெட்லி.
அருண் ஜெட்லி: புல்லட் ரயில் குறித்த படிப்பிற்கு வடோடராவில் ஒரு கல்வி நிலையம் அமைக்கப்படும்.
மக்கள்: புல்லட் இரயிலே எங்களுக்கான தேவை கிடையாது. அதுக்கு கல்வி நிலையம்னு வேற மக்கள் காசைக் கரியாக்குகிறார் ஜெட்லி.
அருண் ஜெட்லி: விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை சுமார் 1.5 மடங்கு அதிகரிக்கப்படும்.
மக்கள்: வெறும் வாய்ச்சவடால் கதைக்கு ஆகாது. எப்படி கொடுக்கப் போறாரு, அதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் என்னன்னு எதுவுமே கையில் கிடையாது. வாய்நிறைய பொய் சொன்னா போதும் மக்களை ஏமாத்திடலாம்னு இன்னும் எத்தனை நாளைக்கு கனவு காணப் போறீங்க ஜெட்லி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக