செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

ராகுல் :பாஜகவின் தவறுகளால் இந்தியா தெற்கு ஆசியாவில் தனிமைபட்டுவிட்டது

tamilthehindu :நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி செய்த தவறுகளால், ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான 3 நாள் தேர்தல் பிரசாரத்தை மக்களிடம் ஆசிர்வாதம் என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். கர்நாடகத்தின் தென் பகுதிகளை மையமாக வைத்து இந்த பிரசாரத்தை ராகுல் காந்தி முன்னெடுத்தார்.
கலாபுர்கி நகரில் மக்கள் மத்தியில் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளியுறவுக்கொள்கையில் பிரச்சினைகளை உருவாக்கிவிட்டது. இதனால் ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிடப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய சீனா, ஆசிய பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் நெருங்கி வருகிறது.

அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணுவதுதான் வெளியுறவுக்கொள்கையின் முக்கிய அம்சமாகும். ஆனால், இன்று இந்தியா பிராந்திய அளவில் தனிமைப்பட்டு கிடக்கிறது.
சீனாவைக் காட்டிலும் இந்தியா அதிகமான வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். சீனாவுடன் ஆவேசமான முறையில் அனுகுவதைக் காட்டிலும், அமைதியான முறையில் அனுக வேண்டும். அமைதியான வழியில் அனுகுவதன் மூலமே சீனாவுடன் போட்டியிட முடியும்.
ஆசியப் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கி இருக்கிறது. நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள், மியான்மர் ஆகிய நாடுகளில் சீனா மெல்ல கால் பதிக்க தொடங்கிவிட்டது.
இவை அனைத்துக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பிரச்சினையே காரணமாகும். இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷியா கூட மேற்கத்திய நாடுகளை நோக்கி நகர்கிறது. இது மிகவும் கவலைகொள்ளும் விஷயம் ஆனால், இதுவரை விவாதிக்கவில்லை.
சீனா 24 மணிநேரத்தில் 50ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவுக்கு திறனுள்ளதாக இருக்கிறது. ஆனால், இந்தியா 23 மணிநேரத்தில் 450 பேருக்குமட்டுமே வேலை வழங்க முடியும்.
சீனாவில் எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள், இந்தியாவில் மத்திய அரசு எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள் என கணக்கெடுக்க வேண்டும். கடந்த 4ஆண்டுகளில் நாம் கணக்கெடுத்தால், மிகவும் வருத்தமாக இருக்கிறது. நிலைமை மோசமடைந்துவிட்டது.
நாட்டின் பொருளாதார நிலை இப்போது பரவாயில்லை. ஆனால், முன்பு இருந்ததைப் போன்று இல்லை. இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க முடியாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம். இப்போது அதேபோன்று வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என கேட்கிறோம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக