புதன், 28 பிப்ரவரி, 2018

சர்வாதிகாரியை வரவிட்டால்... இந்தியாவும் சிரியாவாகும் வாய்ப்பு அதிகம்.

Vijay Bhaskarvijay  : சிரியாவை Bashar al-Assad என்ற சர்வாதிகாரி 2000 ஆம் ஆண்டில் இருந்து ஆள்கிறார்.
2000 மாவது ஆண்டுக்கு முன் அவர் தந்தை Hafez al-Assad ஆண்டு கொண்டிருந்தார்.
சிரியா 70 சதவிகிதம் சன்னி முஸ்லிம்களையும் 12 சதவிகிதம் ஷியா முஸ்லிம்களையும் கொண்டது. Bashar al-Assad ஷியா பிரிவில் ஒரு வகையான Alawites பிரிவைச் சேர்ந்தவர். உடனே இதை சன்னி ஷியா சண்டை என்று கொண்டு போகாதீர்கள்.
2006 ஆம் ஆண்டு சிரியாவில் கொடுமையான பஞ்சம் வருகிறது. மக்கள் கிராமங்களை விட்டு பஞ்சம் பிழைக்க நகரங்களுக்கு அதிகமாக நகர்கிறார்கள். அடுத்த ஐந்து வருடங்களில் அதிபர் மேல் கோபம் அதிகரித்து 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் இறங்குகிறார்கள்.
கிளர்ச்சியாளர்களை அதிபர் Bashar al-Assad கடுமையாக அடக்குகிறார். அதற்கு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பல கொலைகளை செய்தார் என்றும் அவர் மேல் குற்றச்சாட்டு உண்டு.
இதையொட்டி Free Syrian Army என்றொரு பிரிவினர் ராணுவத்தில் இருந்து பிரிந்து அதிபரை எதிர்க்கின்றனர். இவர்கள் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதையொட்டி முழுக்க இஸ்லாமிய பார்வை கொண்ட கிளர்ச்சி இயக்கங்களும் ஆயுதங்களை எடுக்கின்றன.

இப்போது அதிபர் தலைமையில் ஆன ராணுவத்துக்கும், Free syrian army என்ற கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான படைகளுக்கும் சண்டை நடக்கிறது.
அதிபரை ரஷ்யா ஆதரித்து சிரியன் ராணுவத்துடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் East Ghouta நகரத்தின் மேல் தாக்குதல் நடத்துகிறது.
கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க, துருக்கி நாடுகளின் ஆதரவுடன் சிரிய அரசை எதிர்த்து போராடுகிறார்கள்.
ஒரே மூச்சில் East Ghouta நகரத்தை கைப்பற்ற வேண்டும் என்று அதிபர் ரஷ்ய படை துணையுடன் விமானத்தில் இருந்து குண்டுகளை வீச நாம் கடந்த இரண்டு நாட்களாக பார்க்கும் குழந்தைகளின் பிணங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஷன்னி பிரிவை ஆதரிக்கும் நாடுகளான துருக்கி கத்தார் சவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்,
ஷியா பிரிவை ஆதரிக்கும் நாடுகளானா ஈரான், ஈராக், லெபனான் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபருக்கும் ஆதரவு கொடுக்கின்றனர்.
இன்னொரு பக்கம் துருக்கி அரசு அங்குள்ள சிறுபான்மையினரான குர்திஷ் இன மக்களை அடக்க அங்கே Abdullah Öcalan என்றொரு கிளர்ச்சியாளர் தோன்றி அவர் 1998 ஆம் ஆண்டு சிரியாவில் தஞ்சம் அடைகிறார். துருக்கி சிரியாவை அவரை விரட்டு என்று மிரட்ட சிரியா அதை ஏற்றுக் கொண்டு அவரை வெளியேற்றுகிறது. அவர் ரஷ்யாவிடன் தஞ்சம் கேட்க ரஷ்யா தஞ்சம் கொடுக்கிறது. அதிலிருந்து துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் முட்டிக்கொள்கிறது. துருக்கி ஆவேசமாக ரஷ்யாவின் படைகளை கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து எதிர்ப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இதில்லாமல் Pan Arabism , Baathism என்றெல்லாம் சில Terms சொல்லுகிறார்கள். நம் அகண்ட பாரதம் மாதிரி பாத்திஸம் என்றால் ஒன்றுபட்ட அரபு யூனியனை அமைக்கும் குறிக்கோளைக் கொண்டது. அரபு ஒற்றுமையை ஒரே இயந்திரமாக செயல்படும் தன்மையை வலியுறுத்துவது.Pan Arabsim என்பது பாத்திஸக் கொள்கையினால் விளையும் விளைவு. அரபு யூனியனாக ஒன்றுபட்டு செயல்பட்டால் பொருளாதாரத்திலும் உலக அரசியலிலும் முக்கியத்துவம் பெறலாம் என்று நினைக்கிறார்கள்.
அமெரிக்கா இதை விரும்பாமல் இருக்கலாம். அரபு யூனியன் மாதிரி ஒன்று உருவாகினால் அந்த ஒற்றுமையும் அதிகாரமும் தங்களுக்கு பிரச்சனை என்று நினைக்கலாம். குரூட் ஆயில், நேச்சுரல் கேஸ் பொருளாதாரத்தில் அரபு யூனியன் மறுபடியும் ரஷ்யாவின் துணையுடன் தங்களை வீழ்த்தி விடும் அதனாலேயே பாத்திஸ்ட் தலைவரான சிரிய அதிபர் Bashar al-Assad ஆட்சியில் இருக்க கூடாது என்று நினைக்கலாம்.
இங்கே ரஷ்யா பாத்திஸ்ட் தலைவர் Bashar al-Assad தொடர்ச்சியாக ஆட்சியில் வைப்பது மூலம் அரபு யூனியன் சாத்தியமாகப் போகிறது என்ற பயத்தை அமெரிக்காவுக்கு காட்டுவது மூலம் அமெரிக்காவை அடக்கி வைக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.
மேலும் சமீபமாக கடந்த 5 வருடங்களில் குரூட் ஆயில் பொருளாதாரம் விஷயத்தில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரியாது. ரஷ்யா ஆர்டிக் பகுதிகளில் எக்கச்செக்கமான குரூட் ஆயில் எடுக்க இறங்கி இருக்கிறது (எல்லாமே இயற்கையை சோலி முடித்துதான். ஒட்டுமொத்த பூமியே இன்னும் 50 வருடங்களில் காலி) அமெரிக்கா இதை விரும்பவில்லை. ஒபாமா இதுவரை அமெரிக்காவில் எடுத்த அளவை விட 23 மடக்கு அதிகமாக குரூட் ஆயில் எடுக்க உத்தரவிடுகிறார். அரபு நாடுகள் ஆதிக்கம் பெட்ரோல் துறையில் ஆட்டோமெட்டிக்காக குறைந்து போகிறது. குருட் ஆயில் விலை சரிகிறது. இதன் மூலம் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கிறது.
ஆக இது ரஷ்ய அமெரிக்கா போரா? ஆம்.
கிளர்ச்சியாளர்களுக்கும் அதிபருக்கும் உள்ள போரா ?ஆம்.
மென் முஸ்லிம்களுக்கும் வன் முஸ்லிம்களுக்கும்
(கிளர்ச்சியாளர்களில் ஒரு குரூப்)
உள்ள போரா? ஆம்.
சன்னி பிரிவினருக்கும் ஷியா பிரிவினருக்கும் இடையே நடக்கும் போரா? ஆம்
அரபு யூனியன் உருவாக்க வேண்டும் என்பவர்களுக்கும் உருவாக்கக் கூடாது என்பவர்களுக்குமான போரா? ஆம்
இதில் கொடுமை என்னவென்றால் இக்காரணங்களில் ஒன்றை கூட புரிந்து கொள்ள முடியத அப்பாவி குழந்தைகள் சிதைவதுதான்.
சிரியா பிரச்சனையைப் பொருத்தவரை அதிகாரம் இரண்டு பக்கமும் ஊடுபாவாக பிணைந்து கிடக்கிறது.
இதில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள ஒன்றிருக்கிறது.
சிரியா 50 வருடங்களுக்கு முன் இஸ்ரேலிடம் ஒரு போரில் தோற்றுப்போகிறது. சிரியா ஜோர்டான் எகிப்து மூன்றும் சேர்ந்து செய்த அரேபிய யூத (இஸ்ரேல்) போர் அது.
தோற்றதில் இருந்து சிரிய மக்கள் “நம்ம நாடு ஸ்டிராங்கா இருக்கனும்” என்று சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்கள். வலிமையான அதிபர் என்ற சித்தாந்தத்தை ரசிக்கிறார்கள். அப்படித்தான் சிரியாவுக்குள் சர்வாதிகாரம் நிலைப்பெறுகிறது.
அந்த அளவுக்கதிமான தேச உணர்ச்சியின் பலனை இப்போது அங்கே உயிரை விடும் அப்பாவி குழந்தைகள் அனுபவிக்கின்றன.
இந்தியாவிலும் கூட சர்வாதிகாரிகள் “பக்கத்து நாட்டுக்காரன் அடிக்கிறான், நாட்டை இன்னும் பலமாக்கனும்” என்ற போர்வையில் ஆளத் துடிக்கலாம்.
அதிபர் ஆட்சி முறை கொண்டு வருகிறேன் என்று அதற்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கலாம். இந்திய மக்களாகிய நாம் அதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட வேண்டும். அது நிச்சயம் சர்வாதிகாரத்துதான் இட்டுச் செல்லும்.
ஜனநாயக அமைப்பில் பலம் வாய்ந்த ஒற்றைத்தலைவன் என்ற சொல்லே பொருந்தாத ஒன்று என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
என் மதத்தைக் காப்பாற்றுகிறான் என்றொரு சர்வாதிகாரியை வரவிட்டால் அதையொட்டிய விளைவுகளால் இந்தியாவும் சிரியாவாகும் வாய்ப்பு அதிகம்.
இது எத்தனை இந்தியர்கள் மண்டையில் ஏறும் என்று தெரியவில்லை.
சர்வாதிகாரத்தின் குண்டுகள் நம் குழந்தைகளையும் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக