சனி, 17 பிப்ரவரி, 2018

சத்தியவாணி_முத்து அம்மையாரின் 95-வது பிறந்தநாள் இன்று (15-02-1922)

ஸ்டாலின் தி :: தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்" நிறுவனர் போற்றளுக்குரிய தலைவர் #சத்தியவாணி_முத்து அம்மையார்  ---------------------------------------
ஊழல் குற்றவாளிகளென அறியப்படுவோர்களே, திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களாக இன்றையச் சூழலில் அறியப்படுகிறார்கள். பெருமைக்குரிய, மக்களின் நலனுக்கான அறிவையும் உழைப்பையும் அளித்துள்ள பலரையும் இன்றைய தலைமுறைக்கு, திராவிட அரசியல் கட்சிகளே அறியப்படுத்தவில்லை. அப்படி அவர்கள் மறைக்கப்படுவதற்கு சாதியும் முக்கியக் காரணமாக இருக்கிறது. சாதியின் காரணமாக மறக்கடிக்கப்படுபவர்களில் அம்மா சத்தியவாணி முத்து அவர்களும் ஒருவர்.
சத்தியவாணி முத்து அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 1949 துவங்கப்பட்டபோதே அதன் பிரமுகராக இருந்தவர். அவர் பறையர் சமூகத்தில் பிறந்தவர் என்பதாலும் பட்டியலின சமூகத்தின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை விதைத்தவர் என்பதாலும் திமுகவின் தலித் சமூக பிரதிநிதியாகவே கருதப்பட்டவர். மேலும், அவரும் கருணாநிதி அவர்களும் திமுகவின் ஐம்பெருந்தலைவர்களுக்கும் அடுத்தக் கட்டத் தலைவர்களாக இருந்தவர்களாவார்கள்.

1953 இல் ராஜகோபாலச்சாரி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி சிறை சென்ற சத்யவாணி முத்து அம்மா அவர்கள், திமுக முதன் முதலில் 1957 இல் சட்டமன்றத் தேர்தலில் நின்றபோது, அதன் பெரம்பூர் தொகுதி வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றார். 1959 இல் திமுகவின் கொள்கை விளக்கச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு, திமுகவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.
1967 ஆம் ஆண்டிலும் 1971 ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்று, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டதோடு அல்லாமல், அண்ணாதுரை அவர்களின் தலையிலான அமைச்சரவையில் (1967-69) 'அரிஜன நலத்துறை மற்றும் செய்தித்துறை' அமைச்சராகவும், அண்ணாதுரை அவர்களின் மறைவுக்குப் பிறகு (1969-74) அமைந்த, கருணாநிதி அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் 'அரிஜன நலத்துறை' அமைச்சராகவும் பதவி வகித்துக் கடமையாற்றினார்.
திமுகவில் தலித்துகள் தொடர்பான அணுகுமுறைகளில், பாரபட்சம் இருந்ததை எதிர்த்து உட்கட்சி போராட்டத்தில் ஈடுபட்டார். திமுகவின் தலைமைப் பொறுப்பிலிருந்த கருணாநிதி அவர்கள், உட்கட்சியில் நிலவும் சாதியப் போக்கை கட்டுப்படுத்தத் தவறிய பட்சத்தில், சத்தியவாணி முத்து அவர்கள், 1974 இல் திமுகவிலிருந்து வெளியேறினார். அதே ஆண்டில், "முடிவில்லாமல், அவர்கள் நம்மை சுரண்டுவதையும், அவமானப்படுத்துவதையும் இனியும் அனுமதிக்க முடியாது" என்கிற முழக்கத்தோடே, 'தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்' என்னும் தனிக்கட்சியை தலைமையேற்றுத் துவக்கினார்.
"டாக்டர்.அம்பேத்கருக்குப் பிறகு, இந்த சமூகத்திற்காக முழுமனதோடு யாரும் உழைக்கவில்லை" என்கிற வேதனையை வெளிப்படுத்திய அவரின் தலைமையில், தலித்துகளும் திரண்டனர். 1977 இல் திமுகவிலிருந்து விலகிச் சென்ற, க.நெடுஞ்செழியன், கே.ராஜாராம், பி.யூ.சண்முகம், எஸ்.மாதவன் உள்ளிட்டோர் உருவாக்கிய 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' கட்சியும், சத்தியவாணி முத்து அவர்களின் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கட்சியும் இணைந்து சிலகாலம் செயல்பட்டன. இந்நிலையில் 1977 இல் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்ந்தது எம்.ஜி.ஆரின் அதிமுக. அதே ஆண்டில், அதிமுகவோடு இணக்கமான சத்தியவாணி முத்து அவர்கள், தமது கட்சியை அதிமுவுடன் இணைத்தார்.
அதிமுக சார்பில், 1978 இல் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சத்தியவாணி முத்து அவர்கள், 1979 இல் சரண்சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பதவியேற்றார். முதல் முதலாக திராவிட இயக்கத்திலிருந்து மத்திய அமைச்சரானவர் திருமதி சத்தியவாணி முத்து, திரு பாலா பழநூர் ஆகிய இருவரும்தான்.
அரசியலில் பல்வேறு ஏற்ற இறக்கங்களையும், புகழ்ச்சிகளையும் இகழ்ச்சிகளையும், வஞ்சனைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்து, ஒரு பெண் நின்றுகாட்டுவது அவ்வளவு எளியதானதல்ல. குறிப்பாக தலித் பெண்மணிக்கு அது எளியதே அல்ல. ஆனால், சத்தியவாணி முத்து அவர்கள் நின்றார். சமூகமும் அவருக்குத் துணையாக நின்றது. சமூக மாற்றம் குறித்து அவர் கண்ட கனவு இன்னமும் மெய்ப்படவில்லைதான். ஆனால், அவரைப் போன்றவர்களால்தான் அந்தக் கனவு நம்மிடமும் வந்து சேர்ந்துள்ளது.
1999 ஆம் ஆண்டு, நவம்பர் 11 ஆம் நாளில், இயற்கையடைந்துவிட்ட, நம் போற்றுதலுக்குரிய தலைவர், அம்மா சத்தியவாணி முத்து அவர்களின் 95 ஆவது பிறந்த நாள் இன்று (2018-பிப்15).
- ஸ்டாலின் தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக