ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

5 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து!

5 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து!மின்னம்பலம் : தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து இரு தவணைகளில் வழங்கப்படுகிறது. அதில், முதல் தவணையில் விடுபட்ட 5 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட 66 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
முதல் தவணையில் விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கடந்த 5 நாட்களாக வீடுவீடாகச் சென்று சொட்டு மருந்தினை வழங்கினர்.

“தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் 66 லட்சம் குழந்தைகளுக்குக் கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற முகாமில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாமைத் தொடர்ந்து, அடுத்த 3 நாட்களுக்குப் போலியோ சொட்டு மருந்து மையம் செயல்பட்டது.
இதைத் தொடர்ந்து, சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்தினை வழங்கினர். இதில், விடுபட்ட 5 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் தவணையாக வரும் மார்ச் 11ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது" எனச் சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக