புதன், 28 பிப்ரவரி, 2018

4,78,348 ஏக்கர் நிலங்களும் தமிழக கோவில்களும் .. இந்து சமய அறநிலையத்துறையை அபகரிக்க மதுரை மீனாட்சி அம்மன் தீ விபத்து

சுசிலா : சிறகு மின்னிதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை .... சிறகிற்கு மிக்க நன்றி.
இப்போதிருக்கும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், 36,000 கோவில்களுக்கு மேல் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு 4,78,348 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக ஆவணங்கள் சொல்கின்றன. குத்தகைக்கு விட்டு, இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு, ரூ. 58.68 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கிறது என்று அரசு சார்பில் சொல்லப்படுகிறது. பிராமணர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வருமேயானால், வருமானம் முழுதும் அவர்கள் பையில் தான் போய் சேரும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் தற்போது இந்து அமைப்பினர், இந்து பக்தர்கள் சார்பில் கேட்பதாக ஒரு போலி ஏமாற்று வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு சில மடாதிபதிகளும் உடன்படுகிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய ஒன்று. இந்த பேராபத்தை மக்கள் உணர வேண்டும். இந்த துறை ஆரியத்திடமோ அல்லது அவர்களை துதிபாடும் அடிவருடிகளிடமோ போய்ச் சேர்ந்து விடுமேயானால், இந்த 36,000 கோயில்கள் எல்லாமே ஆரியமயமாகி விடும், சமஸ்கிருதமயமாகி விடும், நம் உள்ளூர் பூசாரிகள் ஓரங்கட்டப்படுவர். இதற்கான சூழ்ச்சி தான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் கடைசி விருப்பமாக, ஆலயத்தின் கருவறைக்குள் சாதி உடைக்கப்படவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், கலைஞர் ஆட்சியின் போது அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான தீர்ப்பும் வந்துள்ள நிலையில், தற்போதுள்ள அதிமுக அரசு அதனை பணி நியமனம் செய்யப்படாமல் வைத்திருக்கிறது. இந்நிலையில், இந்த துறை இந்து பக்தர்கள் என்ற பெயரில், இந்து அமைப்பினரிடம் சென்றுவிட்டால், மீண்டும் பழையநிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்பதை நாம் உணர வேண்டிய முக்கிய காலகட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே தங்கள் வசம்வைத்திருந்த, இந்த ஆலய கருவறையை மீட்க வேண்டும் என்று போராடி, மீட்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த துறையையே கபளீகரம் செய்ய துடித்துக்கொண்டிருக்கிறது ஆரியம்.!
இதன் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சியை நாம் உணர்ந்து, தற்போது செயல்பட தவறினோமானால், வருங்காலத்தில் நம் சந்ததியினர் மேலும் அடிமைகளாக்கப் படுவார்கள், மதம், சாதி மூலம் இருக்கும் ஏற்றத்தாழ்வு மென்மேலும் தீவிரமாக்கப்பட்டு கல்வி மறுக்கப்பட்டு, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, மீண்டும் அடிநிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை அறிதியிட்டுக் கூறுலாம். இதை பற்றிய தெளிவை, மக்களிடையே ஏற்படுத்துவது தற்போதைய அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, நம் உரிமைகளை எக்காரணம் கொண்டும் இழக்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக