சனி, 3 பிப்ரவரி, 2018

தெலுங்கு தேசம் 22 எம்பிக்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது ..

B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,தேசிய ஜனநாயக கூட்டணி,நெருக்கடி,தெலுங்கு தேசம், விலக,முடிவு
தினகரன் :'மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நலத்திட்டங்கள் ஏதும் இடம் பெறவில்லை' என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது. தொடர்ந்து தங்கள் மாநிலம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என, தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள், சந்திரபாபு நாயுடுவிடம் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, தே.ஜ., கூட்டணியில் நீடிப்பது பற்றி முடிவெடுக்க கட்சி, எம்.பி.,க்கள் முக்கிய நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு நாளை ஆலோசிக்கவுள்ளார். இது தே.ஜ., கூட்டணியில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டை பா.ஜ.,வை சேர்ந்த, நிதியமைச்சர், அருண் ஜெட்லி, நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் லோக்சபா தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், வாக்காளர்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.


எனினும், இலவச திட்டங்கள், வரிச் சலுகைகள், கடன் ரத்து போன்ற எந்த கவர்ச்சிகர திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மாறாக, விவசாயிகளின் விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்வு, கிராமப்புற மேம்பாடு, 10 கோடி குடும்பங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீடு போன்ற மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் இடம் பெற்றன.

மத்திய பட்ஜெட்டுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கலந்த விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய பட்ஜெட்டுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜ., கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார், இந்த பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான தெலுங்கு தேசம் கட்சி, மத்திய பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளது. அந்த கட்சியை சேர்ந்த, எம்.பி.,க்கள் பலரும், ஜெட்லி அறிவித்த பட்ஜெட்டை நேரடியாக விமர்சித்துள்ளனர்.


ஒருங்கிணைந்த ஆந்திரா, ஆந்திரா - தெலுங்கானா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டதால் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இதற்காக, நான்கு ஆண்டுகளில், 42 முறை, டில்லி சென்று, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். எனினும், இதுவரை சிறப்பு அந்தஸ்தோ, சிறப்பு நிதியோ ஒதுக்கப்படவில்லை.

லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டிலாவது, ஆந்திராவுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என அந்த கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகப் பெரிய அறிவிப்புகள் ஏதும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த, தெலுங்கு தேசம், எம்.பி.,க்கள், டில்லியில் நேற்று முன்தினம் மாலை, தெலுங்கு தேசம் எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான சவுதாரியின் வீட்டில் கூடினர். ஐதராபாத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், எம்.பி.,க்களுடன் பேசிய சந்திரபாபு நாயுடு, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது பெரும்பாலான எம்.பி.,க்கள், தே.ஜ., கூட்டணியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து எம்.பி.,க்கள் அனைவரையும், உடனடியாக ஆந்திராவுக்கு அழைத்துள்ள சந்திரபாபு நாயுடு, நாளை, அவர்களுடன் தன் வீட்டில் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தே.ஜ., கூட்டணியில் 22 எம்.பி.,க்களுடன் பலம் வாய்ந்த கட்சியாக திகழும் தெலுங்கு தேசம் கட்சி அதிலிருந்து விலகினால் தென் மாநிலங்களில் பா.ஜ., வலுவான கூட்டணியை இழக்கும் சூழல் உருவாகலாம். தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, 2019 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் அதிருப்தியையும் பா.ஜ., சம்பாதித்துள்ளது, தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பொறுமையை சோதிக்க வேண்டாம்!

மத்திய அரசின் நடவடிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. நாங்கள் மிகவும் பொறுமையாக உள்ளோம். இனியும் எங்கள் பொறுமையை சோதிப்பது நல்லதல்ல. பட்ஜெட்டில் ஆந்திராவுக்கான நலத்திட்டங்கள் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. எங்களிடம் மூன்று வாய்ப்புகள் உள்ளன. அனைத்தையும் சகித்துக்கொண்டு அமைதி காப்பது; எம்.பி., பதவியை ராஜினாமா செய்வது; அல்லது, பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக்கொள்வது. இதில் எதை செய்வது என்பது குறித்து, கட்சி தலைமை முடிவு செய்யும்.
-டி.ஜி.வெங்கடேஷ்,தெலுங்கு தேசம் எம்.பி.,

எந்த தியாகத்திற்கும் தயார்!

மத்திய அரசு தொடர்ந்து ஆந்திராவை புறக்கணித்து வருகிறது. பல முறை கோரிக்கை விடுத்தும், புதிய ரயில்வே திட்டங்களோ, புதிய தலைநகருக்கான சிறப்பு திட்டங்களோ, பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவை அறிவிப்போம். ஆந்திர மக்கள் நலனுக்காக, நாங்கள் எந்த தியாகமும் செய்ய தயார்.
-ஒய்.எஸ்.சவுதாரி,மத்திய அமைச்சர்,தெலுங்கு தேசம்
மாறும் கூட்டணி?
தே.ஜ., கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகினால் ஆந்திராவில் எதிர்க் கட்சியாக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசுடன் கூட்டணி வைக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பா.ஜ., தலைவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டது சந்திரபாபு நாயுடுவுக்குதெரியவந்ததால் தே.ஜ., கூட்டணியிலிருந்து விலகும் மனநிலைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. யாருக்கு எத்தனை?
மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு லோக்சபாவில் 333 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில், 83 எம்.பி.,க்களும் உள்ளனர். இதில் பா.ஜ.,வுக்கு முறையே 276 மற்றும் 58 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தெலுங்கு தேசம் கட்சிக்கு லோக்சபாவில் 16, ராஜ்யசபாவில் ஆறு என, மொத்தம், 22 எம்.பி.,க்கள் பலம் உள்ளது. தே.ஜ., கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி உடனடியாக விலகினாலும் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனினும் இந்த கூட்டணி பிளவு, 2019 லோக்சபா தேர்தலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.< எம்.பி.,க்கள் போர்க்கொடி!
'தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காரணத்தால் நான் மிகவும் பொறுமையாக உள்ளேன். பா.ஜ.,வின் செயல்பாடுகளையோ அந்த கட்சி தலைவர்களையோ விமர்சிக்க வேண்டாம் என தெலுங்கு தேசம் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளேன். கூட்டணி தர்மத்தை காக்க, மிகவும் பொறுமை காத்து வருகிறேன். ஆனால் பா.ஜ., தலைவர்கள் இதை மறந்து செயல்படுகின்றனர். அவர்கள் விரும்பாவிட்டால், நாங்கள் தனித்து செயல்படவும் தயார்' என, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில், ஆந்திரா, முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதால், தே.ஜ., கூட்டணியிலிருந்து விலகியே ஆக வேண்டும் என, தெலுங்கு தேசம், எம்.பி.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.< - நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக