மின்னம்பலம் : 2ஜி
வழக்கு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆங்கிலத்தில் எழுதிய
‘2ஜி சாகா, அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் வரும் மார்ச் 21ஆம் தேதி தமிழில்
வெளியிடப்பட உள்ளது.ஏழு வருடங்களாக நடைபெற்றுவந்த 2ஜி வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான தீர்ப்பில் ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த 2ஜி வழக்கு தொடர்பான தனது அனுபவங்களை ஆ.ராசா புத்தகமாக எழுதியிருந்தார்.
‘2ஜி சாகா, அன்ஃபோல்ட்ஸ்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகம் டெல்லி ரஃபி மார்க் இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சபாநாயகர் அரங்கில் வெளியிடப்பட்டது.
கடந்த 20ஆம் தேதி புத்தகத்தை ஆ.ராசா வெளியிட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பெற்றுக்கொண்டார்.
அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புத்தகம் தமிழில் வெளியாக உள்ளது. இந்தப் புத்தகம் வரும் மார்ச் மாதம் 21ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது. திமுக பொதுச் செயலாளரான பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட அதன் முதல் பிரதியைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொள்ள உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் திராவிட இயக்க தமிழர் பேரவையைச் சார்ந்த சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக