செவ்வாய், 9 ஜனவரி, 2018

TNA சம்பந்தர் : மைத்திரியை ஆதரித்ததில் தவறில்லை... மகிந்தா மீண்டும் வருவரா ...

மைத்திரியை ஆதரித்தமை குறித்துக் கவலையில்லை! போர் முடிந்தால்,
முரண்பாடு முடிந்துவிட்டதா?
  •  மாற்று என்ன? மஹிந்த மீண்டும் வருவதா?
  • கூட்டமைப்பின் தலைமைத்துவம் குறித்துத் திட்டமில்லை
  • வடமாகாண சபை இன்னும் சிறப்பாகச் செயற்பட்டிருக்கலாம்
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான பொறுப்புக்கூறலுக்காக வழங்கிய அர்ப்பணிப்புகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், இதனால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் “தி ஹிந்து” ஆங்கிலப் பத்திரிகையின் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலொன்று, நேற்றைய (03) பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியான அவர், இந்த அரசாங்கத்தின் செயற்றிறன், தமிழ் அரசியல், வடமாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் ஆகியன பற்றிய கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.

    அந்த நேர்காணலின் தமிழ் வடிவத்தை, “தி ஹிந்து”வுக்கு நன்றியுடன் இங்கு பகிர்கிறோம்.

    கேள்வி: தமிழர்கள் உள்ளடங்கலாக, நாட்டின் இன, மத ரீதியான சிறுபான்மைப் பிரிவுகளின் உச்சபட்ச ஆதரவுடன், இலங்கையின் தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஜனாதிபதி சிறிசேனவை, [ஜனாதிபதித் தேர்தலில்] ஆதரிக்கும் உங்கள் முடிவை, எப்படிப் பார்க்கிறீர்கள்?

    பதில்: திரு. சிறிசேனவை ஆதரவளிக்கும் விடயத்தில், சரியான முடிவையே நாம் எடுத்தோம் என்பதில், துளியளவும் எனக்கு ஐயமில்லை. ராஜபக்‌ஷ அரசாங்கம் தொடர்பில் எமக்குப் போதுமென்று ஆகிவிட்டது. அவ்வரசாங்கம், குறிப்பாகத் தமிழ் மக்கள் மீது அநீதியாகவும் அநியாயத்துடனும் நடந்துகொண்டது.
    தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே, தமிழ் அரசியலில், ஜனாதிபதி சிறிசேன ஈடுபட்டிருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான நீதியானதாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான தீர்வொன்றுக்கான, தீவிர ஆதரவாளர்களுள் ஒருவராக அவர் இருந்தார். 1994ஆம் ஆண்டுக்கும் 2000ஆம் ஆண்டுக்கும் இடையில், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவால் முன்வைக்கப்பட்ட அரசமைப்பு முன்மொழிவுகளுக்கு அவர் ஆதரவளித்தார். அது, [தேர்தலில் ஆதரவளிக்கும்] எமது முடிவில் தாக்கம் செலுத்தியது என்பதில் சந்தேகமில்லை.
    திரு. சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இணைந்து செயற்படத் தயாராக இருந்தனர் என்ற விடயம் காரணமாகவும் நாம் உந்தப்பட்டோம். பல கட்சிகள் இணைந்த கருத்தொற்றுமை வருவதற்கான வாய்ப்பை, முதன்முறையாக இது வழங்கியது. முக்கியமாக, தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக, இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையில் இது ஏற்பட வாய்ப்பேற்பட்டது.
    நாம் எடுத்த முடிவு தொடர்பாக, எமக்குக் கவலைகள் இல்லை. ஆனால் தமிழ் மக்களும், தொடர்ந்து அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாமும், இவ்வரசாங்கத்திடமிருந்து இன்னமும் சிறப்பான செயற்றிறனை எதிர்பார்த்தோம்.
    கேள்வி: இவ்வரசாங்கத்தின் அடைவுகளைப் பற்றி மதிப்பிடும் போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் அரசமைப்புச் சீர்திருத்தம் தொடர்பிலும், தமிழ் மக்களால் அடையப்பட்ட, குறிப்பிடத்தக்க அடைவுகள் என்ன?
    பதில்: தேசிய பிரச்சினைக்கான, பொருத்தமான அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்காக, 2016ஆம் ஆண்டில், அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பிடத்தக்க அளவு பணி, அவ்விடயத்தில் ஆற்றப்பட்டுள்ளது.
    [பிரதமரின் தலைமையில் 21 உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட] வழிகாட்டல் குழு, கலந்துரையாடல்களுக்காக அடிக்கடி சந்தித்ததோடு, இடைக்கால அறிக்கையொன்றையும் சமர்ப்பித்தது. அது, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. [பெப்ரவரியில் இடம்பெறவுள்ள] உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து, அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடுகள், இன்னும் துரித கதியில் செல்லுமென நாம் எதிர்பார்க்கிறோம். சில கட்சிகளால் எடுக்கப்பட்ட சில நிலைப்பாடுகள் காரணமாக, இச்செயற்பாடுகள் சிறிது தாமதித்துள்ளன.
    பாதுகாப்புப் படையினரால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் [பொதுமக்களின்] காணிகள், அரசியல் கைதிகள் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருத்தல், காணாமல் போனோர் விவகாரம் ஆகியனவே, தமிழ் மக்களின் [பிரதான] பிரச்சினைகளாக உள்ளன. [இவை தொடர்பில்] எவையுமே நடைபெறவில்லை என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால், இன்னமும் அதிகமான பணிகள் செய்யப்பட்டு இருக்க முடியும் என்று நிச்சயமாகச் சொல்வேன்.
    அரசாங்கத்துக்கு நாம் கடுமையான அழுத்தங்களை வழங்கியதைத் தொடர்ந்து, [இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த] சில காணிகள், வடக்கிலும் கிழக்கிலும் விடுவிக்கப்பட்டுள்ளன. காணிகளை விடுவித்தல் என்பது, தொடர்ந்துவரும் செயற்பாடு. இது இலகுவானதல்ல, ஆனால் இது நடந்துகொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னரும் கூட, முல்லைத்தீவின் கேப்பாப்புலவில், 133 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. அதில் (காணிகளை விடுவிப்பதில்) நான், கவனமாகவும் இடைவிடாதும் செயற்பட்டேன்.
    தடுத்துவைக்கப்பட்டோர் தொடர்பில் பார்க்கும் போது, அவர்களில் சுமார் 40-50 சதவீதமானோர், சிறைச்சாலைகளை விட்டு வெளியே வந்துள்ளனர். காணாமல் போனோர் பற்றிய கேள்வி தொடர்பாகப் பார்த்தால், காணாமல் போனோர் தொடர்பாக சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனக் கூறப்படுகிறது. இது, மிகப்பெரிய எண்ணிக்கையாகும். காணாமல் போன தமது உறவுகள் தொடர்பாக, அந்தக் குடும்பங்களுக்குத் தகவல்கள் தேவைப்படுகின்றன; அந்த நபர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற முடிவு தேவைப்படுகிறது. சிறிதளவு மன ஆறுதல்படுத்தல், இழப்பீடு, ஏதோ ஒரு வகையிலான உதவி ஆகியன வழங்கப்பட்டு, யதார்த்தத்துக்கு அவர்கள் வந்து, தங்களுடைய வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் காணப்பட வேண்டும்.
    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசாங்கத்தால் 2015ஆம் ஆண்டு துணை அனுசரணை வழங்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்ட, பொறுப்புக்கூறல் தொடர்பான அர்ப்பணிப்புகளை, அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை. இத்தாமதம் தொடர்பாக, தமிழ் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
    கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாட்டுக்கு, போர்க் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை விட அதிகளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல காலக்கெடுகள் முடிவடைந்து, மெதுவாக மாறியுள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவது, தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது ஆகிய விடயங்களிலேயே, இது தொடர்பான விவாதம் சிக்கியுள்ளதே தவிர, அதிகாரப் பகிர்வு தொடர்பில் சிறிதளவே கவனம் காணப்படுகிறது. இத்தேசிய அரசாங்கம், தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத் தவறுகிறது என நினைக்கிறீர்களா?
    பதில்: இறுதியாக என்ன நடக்குமென்ற முடிவுக்கு, எம்மால் இதுவரை வர முடியாமலிருக்கிறது. ஆனால், ஒரு விடயம் தொடர்பில் அதிகளவுக்கு விவாதங்கள் நடைபெறவில்லை என்றால், அவ்விடயம் தொடர்பில் பெரிதளவுக்குக் கருத்து வேறுபாடுகள் இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம். விடயத்தின் நுணுக்கங்களுக்குச் செல்ல நான் விரும்பவில்லை, ஏனென்றால், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த முதலமைச்சர்கள் — குறிப்பாக, வடக்கு, கிழக்குக்கு வெளியேயுள்ள முதலமைச்சர்கள் — மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது, நன்றாக அறியப்பட்ட ஒன்று. ஆனால், இறுதி வடிவம் வரும்வரை நான் காத்திருக்கிறேன்.
    கேள்வி: நன்னம்பிக்கையுடன் காணப்படுகிறீர்களா?
    பதில்: அவநம்பிக்கையுடன் நான் இல்லை. நாட்டின் அனைத்து மக்களையும் சரிசமமாகப் பார்க்கும், உண்மையான அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் நோக்கிய பயணத்தை மேற்கொள்ள, இந்நாட்டுக்கு அரசியல் தீர்வொன்று தேவைப்படுகிறது. இச்சூழலில், இச்செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து நாம் உறுதியோடிருந்து, வெற்றிகரமானதும் விரைவானதுமான முடிவைப் பெறுவதே நாம் செய்யக் கூடியதாக இருந்தது. நாம், நம்பிக்கை இழக்க முடியாது; நாம், விடயங்களைக் கைவிட முடியாது.
    எம்மிடம் பொறுப்பைத் தந்தவர்கள், இச்செயற்பாட்டில் குறைந்தளவு நம்பிக்கையையாவது வைத்திருக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளனர். பொறுப்பானதும் நடைமுறைக்கேற்றதும், தமிழ் மக்களுக்கு முக்கியமானதை அடைவதை நோக்கியதுமான பாத்திரத்தை, நாம் ஏற்க வேண்டும். மாறாக, அனைத்தையும் பற்றிக் கூச்சலெழுப்பிக் கொண்டு, தடங்கலுக்கும் குழப்பத்துக்குமான காரணங்களாக நாம் இருக்கக்கூடாது.
    மாற்று என்ன? மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் மீள வருவதை மக்கள் விரும்புகிறார்களா? ஒன்றுமே நடக்காமலிருப்பதற்கு, இது [மஹிந்த மீண்டும் வரக்கூடாது என்பது] போதுமானது என்று சொல்லவில்லை. ஆனால், இவ்வரசாங்கத்தின் கீழ், சட்டத்தின் ஆட்சி காணப்படுகிறது; முன்னர் காணப்பட்ட சட்டவிலக்கீட்டுக் கலாசாரம் காணப்படவில்லை; நீதித்துறையினதும் பொது நிறுவனங்களினதும் சுயாதீனம் ஆகியன மீளக் கொண்டுவரப்பட்டுள்ளன.
    ஒட்டுமொத்த நிலைமையை நீங்கள் எடுத்துப் பார்த்தால், தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான சூழலாக இது காணப்படுகிறது.
    கேள்வி: உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், ஏனைய இனங்களையும் மதங்களையும் சேர்ந்த இலங்கையர்களின் பிரச்சினைகளை, எவ்வாறு பிரதிநிதித்துவம் செய்வதற்கு உங்களால் முடிந்துள்ளது என நினைக்கிறீர்கள்?
    பதில்: அந்தப் பகுதியை, முழுமையாகவே நான் உதாசீனப்படுத்தியிருக்கவில்லை. ஆனால், இன்னமும் ஆக்கபூர்வமான பணியை நான் ஆற்ற முடியுமென, சிலரிடமிருந்து எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. அந்தப் பார்வையை நான் மறுக்க மாட்டேன். ஆனால் அதேநேரத்தில், நாடு தற்போது சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினை, தேசிய பிரச்சினை என நான் நினைக்கிறேன். இந்த நாடு, அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றங்களை இதுவரை அடைந்திருக்கவில்லை என்றால், இவ்விடயத்தில் (தேசிய பிரச்சினை) பெறப்பட்ட தோல்விகளே ஆகும். அவ்விடயம் தொடர்பாக நான் ஆற்றிக் கொண்டிருக்கும் பணியை, வேறு விதமாகச் சிந்திப்போர் போதியளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன்.
    கேள்வி: இந்த நாட்டின் இனப் பிரச்சினை, ஒன்றுடன் ஒன்று போட்டியிட்ட சிங்கள, தமிழ் தேசியவாதங்களால் — ஆனால், ஒரே அளவில் இல்லாமல் — தூண்டப்பட்டு, தீவிரமாக்கப்பட்டது. இன்றும் கூட, தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் கலந்துரையாடல், தேசியவாதமாகவும் இனரீதியாகத் துருவப்படுத்துவதாகவும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை அடிக்கடி நினைவுபடுத்தும், தமிழ்த் தேசிய அரசியலை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? போருக்குப் பின்னரான சூழலில் அதன் பொருத்தப்பாடு என்ன? தமிழ்ச் சமூகத்துக்குள் காணப்படுவதாகக் கூறப்படும் சமயரீதியான சகிப்புத்தன்மை இல்லாமை, சாதியப் பாகுபாடு ஆகியவற்றுக்காக அது குரல் கொடுக்குமா?
    பதில்: தமிழ்ச் சமூகத்துக்குள் குறிப்பிட்ட சில பிளவுகள் காணப்படுகின்றன என்பதில் சந்தேகங்கள் இல்லை. இவை, அனைத்துச் சமூகங்களிலும் காணப்படுகின்றன என நான் நினைக்கிறேன்.
    இந்நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகளாக இருக்கிறோம், சமமான பிரஜைகளாக இல்லை என்ற சிந்தனையிலிருந்து, தமிழ் மக்கள் வெளியே வர வேண்டும். பெரும்பான்மையினச் சமூகத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் அதே உரிமைகள், அவர்களுக்கு இல்லை. அதற்காகத் தான் போர் நடைபெற்றது. போர் முடிவடைந்துவிட்டது என்பதற்காக, முரண்பாடே தீர்க்கப்பட்டு விட்டது என்று அர்த்தம் கிடையாது.
    வெவ்வேறான விடயங்களுக்கான சமநிலைக்கும் கவனமான நடவடிக்கைக்குமான அதிக கவனம் தேவை என்று நான் நினைக்கின்ற அதேவேளை, காணப்படும் அடிப்படையான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். புதிய அரசமைப்பில், எதிர்காலம் தொடர்பாக தமிழ் மக்களுக்குச் சிறிதளவு நம்பிக்கை வழங்கப்படக் கூடியதாக இருந்தால், இவ்விடயங்களை இப்போது ஆராய்வதை விட அப்போது ஆராய்வது சிறப்பாக இருக்கும்.
    கேள்வி: 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தல், பிராந்திய அரசாங்கத்துக்கான முதலாவது வாய்ப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியது. போதுமற்ற அதிகாரப் பகிர்வு தொடர்பான அதன் குறைபாடுகள் அறியப்பட்ட போதிலும், வடக்கு மக்களுக்காக, அச்சபை எவ்வாறு பணியாற்றியிருக்கிறது? ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பாலானது, பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும், மாகாண அரசாங்கம், தேவையான நியதிச் சட்டங்களை உருவாக்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றன.
    பதில்: எனக்குக் கிடைத்த, நான் வாசித்த அனைத்து அறிக்கைகளையும் வைத்துப் பார்க்கும் போது, வடமாகாண சபை, இன்னும் சிறப்பாகச் செயற்பட்டிருக்கலாம் தான். 13ஆவது திருத்தத்தில், குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால், அந்த வரையறைக்குள் வைத்து, இன்னும் அதிகமாகச் செயற்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் ஆளுநர், கடினமானவராக இருந்தார்; அவர், இராணுவத்தைச் சேர்ந்தவர். ஆனால் 2015ஆம் ஆண்டின் பின்னர் வந்த ஆளுநர்கள், தாராளப் போக்குடையவர்களாகவும் முன்னேற்றகரமானவர்களாகவும் காணப்பட்டனர். மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான, தினசரி தேவைகளைத் தீர்ப்பதற்கான பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். அவர்கள் செய்திருப்பதை விட, இன்னும் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டிருக்கலாம்.
    கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் பதற்றங்கள், மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன. உங்களுடைய கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி, கூட்டணியில் ஆதிக்கம் செலுத்துகிறது என, சில பங்காளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், தமிழ் அரசியலிலும் தேசிய அரசியலிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதைப் பற்றிக் கூற முடியுமா?
    பதில்: உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், சமூகத்தின் அடிமட்டத்தில் இடம்பெறுவன ஆகும். புதிய அரசமைப்பின் கீழ், தேசிய செயற்பாடுகள், மாகாண அதிகாரங்களின் பட்டியல் ஆகியன போன்று, உள்ளூராட்சி மன்றச் செயற்பாடுகள் தொடர்பான பட்டியலொன்று காணப்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த ஏற்பாடுகள், புதிய அரசமைப்பில் இணைக்கப்பட்டால், உள்ளூராட்சி மன்றங்களும், ஓரளவுக்கு முக்கியமானவையாக மாறும்.
    தற்போதைய நிலையில், தேசிய பிரச்சினைகளை வாக்காளர் தொகுதிகளில் சிலர் எழுப்புவதை நான் பார்க்கிறேன். தற்போதைய நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி, புளோட், டெலோ ஆகியன அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை, பெரும்பாலான மக்கள் ஏற்பார்கள் என நான் நினைக்கிறேன். ஈ.பி.ஆர்.எல்.எப் தான் வெளியேறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்படும் கொள்கைகளை, விவேகமுள்ள மக்கள் பாராட்டுவார்கள் என்று, ஓரளவுக்கு உறுதியுடன் உள்ளேன்.
    கேள்வி: தேசிய ரீதியில்?
    பதில்: என்ன நடக்குமென எமக்குத் தெரியாது. ஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிரதமரின் ஐக்கிய தேசிய முன்னணி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் வழிநடத்தப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என, மூன்று பிரதான போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். எவருமே, [அரசியல்] போக்கைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது என நான் நினைக்கவில்லை. எப்படி நடக்கிறது என்பதை, நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
    கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கான அடுத்த கட்டம் குறித்துச் சிந்தித்துள்ளீர்களா?
    பதில்: எதையும் நான் திட்டமிடவில்லை என்பதோடு, எவர் மீதும் அல்லது குறித்த ஒரு நடவடிக்கை மீதும், தனியான கவனமென்பது என்னிடம் இல்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அது நடக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். நாம் தொடர்ந்து செல்லும் போது என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். நான் தொடர்ந்தும் இருக்க முடியாது, யாராவது பொறுப்பை ஏற்க வேண்டும். இது இலகுவானதல்ல — கவனமாக இருக்க வேண்டியுள்ளது, பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது, எல்லோருக்கும் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது. அது சாத்தியமில்லை.
    tamilmirror.lk

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக