செவ்வாய், 23 ஜனவரி, 2018

E- சிகரெட் விளம்பரங்கள் ... புதிய கான்சர் அறிமுகம்

tamilthehindu :பூங்கா, கடற்கரை, திரையரங்கு, சந்தை, சாலைகள் போன்ற பொதுஇடங்களில் எங்கு வேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்தின் சிகரெட்டைப் புகைக்கலாம். நெருப்பு இல்லை. சாம்பல் இல்லை. அதிக அளவில் புகையும் இல்லை. ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நவீன சிகரெட்’ என்று இ-சிகரெட் நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. இப்படியான ஈர்ப்பு அழைப்பில் மயங்கி, பலரும் இ-சிகரெட்டுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ஆனால், இந்தியாவுக்குள் நுழைந்துள்ள புதிய புற்றுநோய் பூதம்தான் இ-சிகரெட் என்பதை நம்மில் பலர் இன்னமும் உணரவில்லை.
2014-ல் ‘புகையிலை சிகரெட்டுக்கு மாற்று’ என்ற போர்வையில் புகுந்துள்ள இ-சிகரெட் புகைப்பழக்கம், இந்தியா உள்ளிட்ட 182 நாடுகளில் பரவியுள்ளது. உலக அளவில் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இ-சிகரெட் புகைப்பதாகப் புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. இந்தப் புதிய பாணி புகைப்பழக்கம் சீனா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் மிக அதிக அளவில் பரவியுள்ளது. இது சந்தைக்கு வந்த முதல் ஆண்டிலேயே 80 கோடி அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை ஆனதாக அமெரிக்க சிகரெட் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்தது. தற்போது 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுமார் 7,000 வகை மணங்களில் இ-சிகரெட்டை விற்பனை செய்கின்றன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இது விற்பனையில் உள்ளது.

எச்சரிக்கை

இ-சிகரெட்டைப் புகைக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களையும் கவர்ந்துள்ள விஷயம் கவலை அளிக்கிறது என்றும், இதைப் பயன்படுத்துவதில் உள்ள சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து, இதன் பயன்பாட்டை சட்டரீதியில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில் இயங்கும் பல சமூகநல அமைப்புகள் அரசிடம் முறையிடுகின்றன.
ஆரம்பத்திலிருந்தே, உலக சுகாதார நிறுவனம், ‘நிகோடின் எந்த வகையில் உடலுக்குள் நுழைந்தாலும் ஆபத்துதான். இது புற்றுநோய், இதயநோய், ரத்தநாள நோய்கள் உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இ-சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று உலக நாடுகளை எச்சரித்துவருகிறது. சிங்கப்பூர், பிரேசில் போன்ற சில நாடுகளில் இது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

இ-சிகரெட் என்பது என்ன?

2008-ல் ஹான் லிக் என்ற சீன மருந்தியலாளர் இ-சிகரெட்டைக் கண்டுபிடித்தார். இவருடைய தந்தை புகைபிடித்தலுக்கு அடிமையாகி, புற்றுநோய் வந்து இறந்துவிட்ட காரணத்தால், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு மாற்றாகவும், புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து மற்றவர்கள் மீண்டுவருவதற்காகவும் ‘எலெக்ட்ரானிக் சிகரெட்’ (Electronic cigarette) என அழைக்கப்படும் இ-சிகரெட்டைக் கண்டுபிடித்தார். இ-சிகரெட் பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கிற ஒரு மின்னணுக் கருவி. இதனுள்ளே நிகோடின் மற்றும் புரோபைலின் கிளைக்கால் திரவம் நிரப்பப்பட்ட குப்பி இருக்கும். அதைச் சூடுபடுத்தும் சிறு கருவியும் பேட்டரியும் இருக்கும்.
சிகரெட்டைப் புகைக்க நினைக்கும்போது, இதை வாயில் வைத்து உறிந்தால், அப்போது ஏற்படும் விசையால், பேட்டரி இயங்கும். சிலவற்றில் இதை இயக்க ஒரு பொத்தான் இருக்கும். இதை அழுத்தியதும், நிகோடின் சூடேறி புகை கிளம்பும். புகைப்பவர் இதை உள்ளிழுக்க, புகையிலை சிகரெட்டைப் புகைப்பது போன்ற திருப்தியை ஏற்படுத்தும்.

என்ன வேறுபாடு?

இ-சிகரெட் எந்தவகையிலும் பாரம்பரிய சிகரெட்டுக்கு மாற்று இல்லை என்று மறுக்கிறது மருத்துவ உலகம். புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட்டைப் புகைக்கும்போது நிகோடின், தார், கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட 7 ஆயிரத்துக்கும் அதிகமான நச்சுப்பொருட்கள் உடலுக்குள் செல்கின்றன. இ-சிகரெட்டில் நிகோடின் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால், இது தீங்கற்றது என்று பலரும் எண்ணுகின்றனர். மேலும், இ-சிகரெட் எந்த வகையிலும் புற்றுநோயை ஏற்படுத்தாது என்று விளம்பரம் செய்கின்றனர். அது உண்மையல்ல. உடலில் புற்றுநோயை உண்டாக்க நிகோடின் ஒன்றே போதும். இது சிகரெட் எனும் நேர் வழியில் வந்தாலும் சரி, இ-சிகரெட் எனும் புற வழியில் வந்தாலும் சரி, இரண்டும் ஒன்றுதான். ஒரே நேரத்தில் 30மி.கி. முதல் 60 மி.கி. வரையிலான நிகோடினை ஒருவர் எடுத்துக்கொண்டால், உடனடியாக மரணமே நிகழ வாய்ப்புள்ளது. இ-சிகரெட்டில் 16 மி.கி.வரை நிகோட்டின் உள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்கின்றனர் கலிபோர்னியா பல்கலைக்கழகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள்.

தேவை சமூக விழிப்புணர்வு

மேலை நாடுகளில் பரவியுள்ளதுபோல் இந்தியாவிலும் இ-சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகரித்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இ-சிகரெட் வர்த்தகம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது எனும் புள்ளிவிவரமே இதற்குச் சாட்சி. நாட்டில் ஏற்கெனவே புகையிலை சிகரெட் புகைப்பவர்களால் புற்றுநோய் ஏற்பட்டு இறப்பவர்கள் ஆண்டுக்கு 10,000 பேர். இ-சிகரெட் பழக்கத்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இதைப் புகைப்பவர்களுக்கு உடனடியாக தொண்டை வறண்டு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதை உறுதிசெய்துள்ளனர். இதிலிருந்து வெளிவரும் புரோபைலின் கிளைக்கால் புகையால் ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் வருவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள பார்மால்டிஹைட் எனும் வேதிப்பொருள் புற்றுநோயை ஊக்குவிக்கிறது. இதைப் புகைப்பவர்களுக்கு மட்டுமல்லமால், அருகில் உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்புகள் உண்டாவது உறுதியாகியுள்ளது.
மேலும், இ-சிகரெட் புகைத்து ஒருவர் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார் என்பதற்கான அறிவியல் ஆதாரமோ, மருத்துவப் புள்ளிவிவரங்களோ எதுவுமில்லை. ஏற்கெனவே இருக்கும் ஒரு போதைப் பொருளுக்கு மாற்றாக வந்துள்ள மற்றொரு போதைப்பொருள் இ-சிகரெட். இது சிகரெட் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு எந்தத் தீர்வும் தரப்போவதில்லை. பதிலுக்கு, ஒரு புதிய சந்தை உருவாவதற்குத்தான் உதவும். இதில் உள்ள நிகோடின் மற்றும் உள்ள நச்சுப்பொருட்களின் தரம் குறித்துப் பரிசோதிக்கவோ, கட்டுப்படுத்தவோ இதுவரை நம் அரசிடம் எந்த அமைப்பும் இல்லை. புகையிலையில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளைப் பொதுஇடங்களில் புகைப்பதற்குத் தடை உள்ளதுபோல் இ-சிகரெட் புகைப்பதற்குத் தடை விதிக்க இதுவரை எந்தவித சட்டவிதிகளும் இல்லை. இது புகையிலையில் தயாரிக்கப்படுவதில்லை என்பதால், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தடைச் சட்டத்தின் வரம்புக்குள் இது வருவதில்லை.
இ-சிகரெட் குறித்து ஆய்வுசெய்ய மூன்று துணைக் குழுக்களை அமைத்துள்ளதாகவும் இ-சிகரெட்டைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் மத்திய அரசு ஆய்வுசெய்வதாகவும் கடந்த வாரம் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நாட்டில் உலவிக்கொண்டிருக்கும் சிகரெட் எனும் பூதத்தை அடக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும்போது, இ-சிகரெட் எனும் மற்றொரு பூதம் கிளம்பி, மக்களைச் சின்னாபின்னம் ஆக்குவதற்கு முன்னால், மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும்!
- கு. கணேசன்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக