திங்கள், 8 ஜனவரி, 2018

ஜானி வந்துடாம்பா!: casteless collective இசை நிகழ்ச்சி குறித்து…

thetimestamil :ப. ஜெயசீலன் : அமெரிக்க கருப்பின போராட்ட வரலாறு அதி உன்னதமான அறம் சார்ந்த மானுட விடுதலைக்கான, சமுத்துவத்திற்கான எளிய,வறிய, தன்னடையாளம் பறிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் போர் குணத்தையும், அவர்கள் அடைந்த உன்னத வெற்றிகளையும் உள்ளடக்கியது. அமெரிக்க கருப்பின மக்களின் போராட்டம் என்பது தங்களின் பூர்விக மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்டு, அவர்களின் கலை,இலக்கியம், மொழி, மதம், அடையாளம், சடங்குகள் என அவர்கள் சார்ந்த எல்லாவற்றையும் இழந்து, எல்லாமும் பறிக்கப்பட்டு மிஞ்சிப்போனவைகளையும் இழிவென கற்பிக்கப்பட்டு அதை சார்ந்து அவமானத்திற்க்கு உள்ளான இனக்குழு தனக்கெதிராக அடக்குமுறையை ஏவிய, இது வரை உலகம் கண்டிராத வல்லாதிக்க உலக வல்லரசான அமெரிக்க இனவெறி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான யுத்தத்தை கிட்டத்தட்ட நிராயுதபானியாக அவர்களின் எதிர்புணர்ச்சியும், போர்குணத்தையும் மட்டுமே கொண்டு எதிர்கொண்ட ஒரு இனத்தின் எழுச்சியூட்டும் போராட்ட வரலாறு.
கருப்பின மக்களின் எழுச்சியின் ஒரு முக்கிய காரணியாக விளங்கியது அவர்கள் தங்களிடம் மிஞ்சிய அடையாளத்தை எல்லா அவமானங்களையும் தாண்டி தற்காத்துக்கொண்டதும், அவர்களின் அடையாளங்களை மிக நுட்பமாகவும்,கம்பீரமாகவும் நவீனவடிவில் மீட்டுருவாக்கம் செய்ததும் ஆகும்.
அடையாள மீட்ருவாக்கம் என்பது அரசியல் சித்தாந்த மீட்டுருவாக்கம் தொடங்கி இசை,உடை,உணவு,மதம்,விளையாட்டு,வரலாறு,சடங்கு,ஆடைகளின் வண்ணங்கள்,சிகை அலங்காரம் என மிக விரிந்தது,பரந்துபட்டது.
உதாரணத்திற்கு கருப்பின ஆண்/பெண்களின் முடி மிக மிருதுவான நீண்ட ஐரோப்பியர்களின் கூந்தல் போல் அல்லாமல் மிக சுருண்டு மிக கடினமான கம்பியை போன்ற தன்மை கொண்டது. ஆப்பிரிக்காவில் இருக்கும் கருப்பினத்தவர்கள் அதற்கேற்ற சிகை அலங்காரங்களை பின்பற்ற கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் இருந்த கருப்பினத்தவர்கள் தங்களின் உடல் மீதும், நிறத்தின் மீதும் கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மையாலும், குற்றவுணர்ச்சியினாலும் ஐரோப்பிய சிகை அலங்காரத்தை போல தங்களை சிங்காரித்து கொள்ள ஆபத்தான ரசாயன பொருட்களை கொண்டு அவர்களின் கூந்தலை சுருட்டை முடியிலிருந்து மாற்றி மிருதுவான கூந்தலாக்க அழகு நிலையங்கள் சென்று மாற்றிக்கொண்டார்கள். கருப்பினத்தவர்களுக்கு கூந்தல் பராமரிப்பு பொருட்களை அந்தக்காலத்தில் விற்பனை செய்த கருப்பின CJ Walker என்ற பெண்மணிதான் முதல் கருப்பின கோடிஸ்வரர் என்று அறியப்படுகிறார்.
இந்நிலையில் 1960-70களில் கருப்பினத்தவர்களின் போராட்டம் கொதிநிலையை அடைந்த பொழுது பல்வேறு தளங்களில் இயங்கிய பல்வேறு தலைவர்களில்/குழுக்களில் மிக முக்கியமானதான Black panthers partyயில் இயங்கிய Kathleen cleaver, Angela Davis,Erika Huggins போன்ற பெண்களும் அந்த அமைப்பை நிறுவிய உலக புரட்சியாளர்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்திற்கு சொந்தகாரர்களான இளைஞர்களான Huey Newton, Bobby Seale போன்றோரும் கருப்பின அடையாள அரசியலை(நடை,உடை,தோரணை,அலங்காரம்,வண்ணங்கள்) தீவிரமாக முன்னெடுத்ததன், மீட்ருவாக்கம் செய்ததின் மூலமாக கருப்பின இளைஞர்களின் மக்கள் திரட்சியை நிகழ்த்தி அவர்களை அரசியல்படுத்தினார்கள். அந்த காலத்தில் angela உள்ளானவர்கள் கருப்பினத்தவர்கள் தங்களின் முடியை மாற்றியமைப்பதை கடுமையாக எதிர்த்து, விமர்சித்து, அதன் பின்னால் இயங்கும் அடிமை மனநிலையை விளக்கி, கருப்பினத்தவர்களின் கூந்தல் இயற்கையாக எவ்வளவு அழகானது என்று நிறுவி கருப்பின ஆண் பெண்களின் மத்தியில் நிலவிய தங்கள் உடல் சார்ந்த சங்கோஜங்களை போக்கினார்கள். இன்று Bob Marley பிரபலப்படுத்திய dread locks எனப்படும் கருப்பின சிகையலங்காரம் ஐரோப்பியர்கள் முதற்கொண்டு உலகம் முழுவதும் பிரபலமாகியிருப்பதை காண்கிறோம். ஒடுக்கப்பட்ட இனங்களின் அடையாள மீட்டுருவாக்கம் என்பது மயிர் முதற்கொண்டு சம்பந்தப்பட்டது என்பதை விளக்கவே இந்த நீண்ட உதாரணம்.

அமெரிக்க கருப்பினத்தவர்களின் போராட்ட வரலாற்றின் வெற்றி சாத்தியப்பட்டதுக்கு காரணம் அவர்கள் பல்வேறு முனைகளில் ஒரே நேரத்தில் அவர்களின் எதிரிகளை சந்தித்து போராடி அவர்களை வீழ்த்தியது. உதாரணத்திற்கு மார்ட்டின் லூதர்கிங் பெரும்பான்மைவாத கிறிஸ்துவ மிதவாத அரசியலை முன்னெடுத்தபோதேதான் சிறுபான்மைவாத இஸ்லாமிய தீவிர இடதுசாரி அரசியலை முன்னெடுத்த malcolm xம் இயங்கினார். அதே நேரத்தில் தீவிர இடதுசாரி மார்க்ஸிய லெனினிய தேவைப்படும் பட்சத்தில் ஆயுத போராட்டத்தை வலியுறுத்திய black panthers அமைப்பும் களத்தில் இருந்தது. இந்த அமைப்புகள் விளையாட்டு,கலை,பண்பாடு போன்ற தளங்களில் Angela Davis, Stokely Carmichael, முஹம்மது அலி, Tommie smith,John Carlos, மார்லி போன்ற பலரை பயன்படுத்தினார்கள், பாதுகாத்தார்கள், உத்வேகப்படுத்தினார்கள். இப்படி பல்வேறு அரசியலை முன்னெடுத்த பல்வேறு அமைப்புகள் ஒரே நேரத்தில் இயங்கியதன் விளைவாக the white Americans were naturally drawn towards the liberal left wing politics. அதி தீவிர இடதுசாரி அரசியலை முன்னெடுத்தவர்களின் மீதான வெறுப்பும் பயமும் வெள்ளை அமெரிக்கர்களுக்கு மிதவாத கிறிஸ்துவ கோட்பாட்டு, அஹிம்சை அரசியலை முன்னெடுத்த மார்ட்டின் லூதர் கிங் மீதான கரிசனத்தை அதிகப்படுத்தியது. அவரின் நியாய தர்க்கங்களை காது குடுத்து கேட்கவைத்தது.
இந்திய/தமிழக சூழலில் தலித்துகளின் போராட்டம் என்பது பல்முனைகளில் நிகழாமல் unfortunately தேர்தல் அரசியல் மற்றும் இயக்க அரசியல் சார்ந்து மட்டுமே அதுவும் மிதவாத இடதுசாரி தன்மையுடனேயே நிகழ்ந்துவருகிறது. அதுவும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கிறதேயன்றி ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் நிகழும் எழுச்சியாகவோ எல்லாரையும் ஒன்றிணைக்கும் எழுச்சியாகவோ நிகழ்வதில்லை. இதற்கு மிக முக்கிய காரணம் கலை இலக்கிய,பண்பாட்டு, அடையாள அரசியல் தளத்தில் தலித்திய அமைப்புகளோ, கட்சிகளோ எந்த தாக்கத்தையும்இ, சலனத்தையும் இது வரை ஏற்படுத்தவும் இல்லை முயற்சிக்கவும் இல்லை. ஓரளவிற்கான கட்டமைப்பு வசதியை பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிச்சயமாக கலாச்சார பண்பாட்டு தளத்தில் அவர்கள் நியாமாக ஆற்றியிருக்க கூடிய பங்கை ஆற்றியிருக்க வேண்டும். ஆனால் அதை அண்ணன் திருமாவால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியாது. அம்பேத்கருக்கு நிகழ்ந்த அதே பிரச்சனை சிக்கல் அண்ணன் திருமாவுக்கும் நிகழ்வதாக நான் கவலையோடு பார்க்கிறேன். ஒரு நல்ல தலைவரின் பல்வேறு அளவீடுகளில் முக்கியமான அளவீடு அந்த தலைவரின் அரவணைப்பின் கீழ் எத்தனை தலைவர்கள் உருவானார்கள் என்பதும் ஆகும். உதாரணத்திற்கு பெரியாரின் வார்ப்புகள் இன்றைய நாள் வரை தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்த கூடியவர்களாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். உன்னத புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பல்வேறு தளங்களில்,பல்வேறு பிரச்சனைகளுக்காக தீவிரமாக செயல்பட்ட பொழுது அவருடைய பணியில் அவருக்கு உறுதுணையாக நிற்கவோ, பணியை பங்கிட்டு கொள்ளவோ அவருடைய ஆளுமைக்கு சமமான இன்னொரு ஆளுமை இல்லாமல் போனதின் விளைவாக அவரால் அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்க முடியாமல் போனது. ஆனால் அவர் விட்டு சென்ற உன்னதமான கோட்பாட்டு அரசியல் இன்றுவரை தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது. இதை போலவே தொலைக்காட்சி விவாதம் தொடங்கி கல்யாணங்கள் வரை அண்ணன் திருமாவே நேரடியாக ஈடுபடுவது அவரது விருப்பம் என்றாலும் கூட சமகாலம் அண்ணன் திருமாவிடம் பெரும் பணியையும் வலிமையையும் அளித்திருப்பதாக நம்பும் என்போன்றவர்கள் அண்ணன் வலுவான விதைகளை தேர்ந்தெடுப்பதிலும்,விதைத்து செல்வதிலும், பல்வேறு தளங்களில் இயங்கும் அமைப்புகளை உருவாக்கி களம் அமைத்துத்தருவதிலும் இனிவரும் காலங்களில் பார்வையை திருப்புவார் என்று உரிமையோடு நம்புகிறேன். அவருடன் இருக்கும் கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் இதில் கவனம் செலுத்த கூடியவர்களாவும், இதன் அவசியத்தை உணர்ந்தவர்களாவும்,தீவிரமாக இயங்க கூடியவர்களாவும் நிச்சயம் இருக்க வேண்டும். தலித்துகளின் அடையாளங்களை நவீன மீட்டுருவாக்கம் செய்யாமல் அவர்களிடம் அரசியல் எழுச்சியையும், போர் குணத்தையும் நிச்சயம் நிகழ்த்த முடியாது.
மேல் சட்டையும், துண்டும் அணியக்கூடாது என்று ஒடுக்கும் சாதி ஹிந்துக்களின் முன்பு தலித்துகள் பட்டுவேட்டி சட்டை அணிந்து புழங்க வேண்டுமா அல்லது கோட் சூட் அணிய வேண்டுமா? மாட்டிறைச்சி தடைக்கு எதிராக மாட்டிறைச்சி பிரியாணி சமைத்து பரிமாறுவதோடு நிற்க வேண்டுமா அல்லது மாட்டிறைச்சி பர்கர், மாட்டிறைச்சி பாஸ்தா, மாட்டிறைச்சி பிஸ்சா, black beans and beef போன்ற பதார்த்தங்களை பரிமாறி மாட்டிறைச்சியின் சர்வதேச தனத்தை நிறுவ வேண்டுமா? தலித் ஆண்/பெண்ணின் நவீன அடையாளம் என்பது என்ன? அவர்களின் fashion statement என்பது என்ன? பறையிசை இசைப்பவர்கள் தலையில் ஜரிகை துணியை கட்டிக்கொண்டு மடித்து கட்டிய வேஷ்டியோடுதான் ஆடவேண்டுமா அல்லது ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்து இசைக்க வேண்டுமா? பறையிசை கருவி தயாரிப்பை வடிவமைப்பை எப்படி நவீன படுத்துவது? என்பதில் தொடங்கி இது போன்ற என்னற்ற எளிய ஆனால் முக்கியமான கேள்விகள் கலை இலக்கிய பண்பாட்டு தளத்தில் தலித்துகளின் முன்பு உள்ளது. இவற்றிற்கு விடை காண்பதும் விவாதிப்பதும் மட்டுமே தலித்துகளின் நவீன அடையாள மீட்டுருவாக்கத்தை சாத்தியப்படுத்தும். இவை நிகழும் போது தலித்துகளின் மீதான சாதி ஹிந்துக்களின் பார்வையும், தலித்துகளுக்கு தங்கள் அடையாளம் குறித்தான பார்வையிலும் மாற்றம் வரும். ஆங்கிலத்தில் இதுநாள் வரையிலும் நம்பப்பட்டு வந்த, கற்பிக்கப்பட்டு வந்த, பின்பற்றப்பட்டு வந்த ஒரு கருத்தாக்கம் முற்றிலும் மாற்றப்பட்டு புதிதான ஒன்றை நோக்கி நகர்வதை paradigm shift என்று சொல்வார்கள். அது போன்ற ஒன்றை நிகழ்த்த கூடியவராக நிகழ்த்த தெரிந்தவராக தோழர் பா. ரஞ்சித் களத்திற்கு வந்திருக்கிறார்.
paradigm shift என்பதிற்கு உதாரணமாக “கபாலி” என்ற பெயரை சொல்லலாம். தமிழ் சினிமா வரலாறு முழுவதும் ரௌடியாக அடியாளாக சித்தரிக்க பட்ட ஒரு பெயரை வெறும் 20 நொடி கபாலி டீசரில் அந்த பெயரின் தன்மையையே மாற்றி அமைத்தவர்தான் ரஞ்சித். இன்று எவரேனும் ஒரு ரவுடி கதாபாத்திரத்திற்கு கபாலி என்று பெயர் வைத்தால் எந்த பார்வையாளனின் மனமும் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது, உள்வாங்காது. அது போன்ற ஒரு paradigm shift ஐ casteless collective இசை நிகழ்ச்சியின் மூலம்  இதுவரை இசை குறித்தும் நிகழ்த்து கலைகள் குறித்தும் இங்கு நிலவும் பார்ப்பனிய மேட்டிமைத்தனத்தை உடைத்தெறிந்து இருக்கிறார்.
sway with me என்ற பாடலை frank Sinatra சிகார் புகைத்து கொண்டு, விஸ்கி குடித்து கொண்டு மிக இயல்பாக பாடும் இந்த வீடீயோவை நான் அடிக்கடி பார்ப்பது உண்டு. பார்க்கும் பொழுதெல்லாம் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு, கை விரல்களை காதுக்கு அடியில் அமுத்திக்கொண்டு, இன்னொரு கையில் காற்றில் இல்லாத கயிறை பிடித்து தொங்குவதை போல பாவனை செய்து பாடும் நம் ஊர் சாஸ்திரிய இசை பாடகர்களின் முகமும், பாடிமுடித்த குழந்தைகளிடம் இன்னும் நன்னா சாஸ்திரிய சங்கீதம் படிங்கோ அடுத்த முறை பார்க்கலாம் என்று துரத்தி விடும் இசை நிகழ்ச்சி நடுவர்களின் முகமும் மின்னல் போல வெட்டி மறையும். பாடல் என்பது எல்லோரும் பாடுவதற்காகத்தானே? ஒரு குறிப்பிட்ட இசையை பயின்றவர்கள் மட்டுமே பாட கூடியவை உண்மையில் பாடல்களா தானா?
இசையை பன்னெடுங்காலம் தொழிலாக தங்களது அடையாளமாக தங்களது பெயராக கொண்டுள்ள இந்த மண்ணின் பூர்வகுடிகளின் இசை இங்கு புறக்கணிக்கப்பட்டு, எளிய மக்களின் இசையாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சூழலில் அந்த இசையை நவீன மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை நெடுங்காலமாய் இங்கு இருந்தது. அதி உன்னதமான இசை மேதமைகளை தமிழக தலித்துக்கள் தங்களிடையே உருவாக்கி இருந்தாலும் இந்த மண்ணின் இசையை நவீன மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய பணியை முன்னெடுக்கும் அவசியம், தொடர்ந்து அமெரிக்க கருப்பின வரலாற்றை மேற்கோளிடும் ரஞ்சித்திற்கு தோன்றியது மகிழ்ச்சி.
கானா எந்த பெயரில்,எந்த இடத்தில,யாருக்காக, எதை பற்றி, யாரால், என்ன அணிந்து, என்ன மாதிரியான மேடையில், யாரோடு இசைக்க படவேண்டும் என்று மிக நுட்பமாக யோசித்து நிகழ்த்து கலைகளை காணும் பார்வையாளனுக்கு கிடைக்கும் எல்லா வகையான கிளர்ச்சியையும், உத்வேகத்தையும் தரும் வடிவில் நிகழ்த்த பட்டு பெரும் வெற்றியையும், பாராட்டுகளையும் பெற்ற casteless collective என்ற நிகழ்ச்சியை வழங்கிய நீலம் அமைப்பும்,ரஞ்சித்தும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். மேடையில் கானா பாடல் ஒலிக்க ஆண் பெண்கள் அனைவரும் இணைந்து ஆட தலித்திய அரசியல் கருத்துக்கள் ஒலிக்கும் போதும், அம்பேத்கரின் பெயர் ஒலிக்கும் போதும் பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தது எனக்கு உண்மையில் நெகிழ்ச்சியில் கண் கலங்க வைத்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் கலைவடிவங்களை ஒடுக்கப்பட்ட மக்களே மீண்டும் கண்டடைந்த அற்புத தருணம் அது. அதே போல இந்த மண்ணின் இசை எவ்வளவு inclusivenessசோடும் , நவீனத்தை எவ்வளவு இலகுவாக உள்வாங்கும் தன்மையோடும் இருக்கிறது என்பதை எல்லோருக்கும் உணர்த்திய தருணமாகவும் அது அமைந்தது.கானா இசையை புறம் தள்ள முடியாதா, ஊதாசீனப்படுத்த முடியாதா ஒரு உன்னத கலக இசையாக இந்த நிகழ்ச்சி நிறுவியிருக்கிறது. இது நிச்சயமாக ஒரு paradigm shift. இந்த நிகழ்ச்சியை இந்த நிகழ்த்து கலையை அடுத்த கட்டத்திற்கும், வெவ்வேறு ஊர்களுக்கும் எடுத்து செல்லும் ஆளுமையும் திறமையும் ரஞ்சித்துக்கு நிச்சயம் உண்டு. அதை நீலம் அமைப்பு நிச்சயம் செய்ய வேண்டும்.
சென்னையின் இசை அடையாளம் என்பது சங்கீத வித்வா சபை என்பது மாறி கானா இசை என்று மாறும் ஒரு காலம் வரும்.
ஜானி வந்துடாம்பா….
ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர். 
முகப்புப் படம் நன்றி: நீலம் பண்பாட்டு மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக