திங்கள், 15 ஜனவரி, 2018

தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!

மின்னம்பலம :உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் மூத்த நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் நீதிபதிகள் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த 12ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மறைமுகமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் அவர்கள், “உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியில்லை. இதே நிலைமை நீடித்தால், இந்திய நாட்டில் ஜனநாயகம் இருக்காது” என்றும் குறிப்பிட்டிருந்தனர். உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்தது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தலைமை நீதிபதிக்கும் நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைச் சமரசம் செய்துவைக்க இந்திய பார் கவுன்சில் சார்பில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நீதிபதி அரவிந்த் பாப்டேவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, மாலை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை ஒருமணி நேரம் வரை நீடித்தது. மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விகாஸ் சிங்கும், தலைமை நீதிபதியைச் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் மற்றும் முன்னாள் நீதிபதிகள் சந்துரு, ஏ.பி.ஷா, சுரேஷ் ஆகியோர் தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்குவது என்பது நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும். வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குத்தான் உள்ளது என்பதற்காக தலைமை நீதிபதி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜூனியர் நீதிபதிகளுக்கு மட்டும் முக்கிய வழக்குகளை ஒதுக்கக் கூடாது. புதிய விதிமுறைகளை வகுக்கும் வரை மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒதுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக