ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஸ்டாலின் : ஒரு படையே இருக்குறாங்க. சீக்கிரம் பார்ப்பீங்க.... முழுப்பேட்டி

தமிழ் இந்து செய்தித்தாளில் வெளியான திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் முக்கியப்பேட்டி. கட்டாயம் படித்துப்பகிரவும்!
****
திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை பாஜக நகர்த்திவரும் நிலையில், தமிழகத்தில் வரலாற்று நெருக்கடி காலகட்டம் ஒன்றில் இருக்கிறது திமுக. தனிப்பட்ட கனவுகள், கட்சிக்குள்ளான மாற்றங்கள், உருவாகிவரும் அரசியல் சவால்கள், அவர் மீதான விமர்சனங்கள் என்று எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்தார்.
திரும்பிப் பார்க்கையில் இந்த 50 ஆண்டு அரசியல் வாழ்வில் எதை முக்கியமானது என்று சொல்வீர்கள்?
அரசியல் குடும்பத்துலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த 50 வருஷங்களைத் தனிச்சு பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனா, தனியா ஒரு தொடக்கம்னு வரையறுக்கணும்னா, கோபாலபுரம் சண்முகம் அண்ணன் சலூன்ல உருவாக்கின ‘இளைஞர் திமுக’ மன்றமும் 1967 செப்டம்பர் 15 அன்னைக்கு நடத்தின அண்ணா பிறந்த நாள் கூட்டமும்தான் தொடக்கம். அங்கிருந்து பார்த்தா கட்சி கூடவே உயரங்கள்லேயும் பள்ளங்கள்லேயும் மாத்தி மாத்தி பயணிக்கிறதாவே என் வாழ்க்கையும் இருந்திருக்கு. கொஞ்ச காலம் முன்னாடி இதே கேள்வியைக் கேட்டிருந்தீங்கன்னா, நெருக்கடிநிலைக் காலகட்டத்தை முக்கியமானதா சொல்லியிருப்பேன். அப்போதான் கல்யாணம் ஆகிருந்துச்சு. ஒரு புது வாழ்க்கையில நுழைஞ்சிருந்தோம். கைது நடந்துச்சு. துர்கா மிரண்டுட்டாங்க. சிறைக்குள்ள எப்பவும் ஒழிச்சுக்கட்டப்படலாம்கிற நிலைமை. ஒவ்வொரு நாளும் அடிச்சு நொறுக்கப்படுற கட்சித் தோழர்களோட மரண ஓலம் அறையில கேட்டுக்கிட்டே இருக்கும். வெளியே திமுகவை நிர்மூலமாக்குற முயற்சிகள். எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடிக்கிட்டிருந்தார் தலைவர்.
மறக்கவே முடியாத நாட்கள். ஆனா, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிடுச்சு, தலைவர் உடல் நலம் குறைஞ்சு வீட்டோட முடங்கின பிறகான இந்த ஒரு வருஷம். களத்துல எவ்வளவு சுமையையும் சுமந்துடலாம். முடிவு எடுக்குறது எவ்வளவு பெரிய சுமைன்னும் கிட்டத்தட்ட ஐம்பது வருஷம் இந்தச் சுமையை அவர் சுமந்திருக்கிறது எவ்வளவு பெரிய வலிங்கிறதும் இப்போதான் புரியுது!
முடிவெடுப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறீர்களா?
கோடி பேரைக் கொண்ட இயக்கம் இது. எந்த முடிவையும் எடுக்கும்போது எட்டு கோடி மக்களைக் கணக்குல எடுத்துக்கணும். தேர்தல் அரசியலுக்கு வந்து ஓட்டுக்காக சமூக சீர்திருத்தம் பேசுற இயக்கம் இல்லை இது; சமூக சீர்திருத்தத்துக்காகத் தேர்தல் அரசியலுக்கு வந்த இயக்கம். இந்த இரண்டுக்குமான இடைவெளி நிச்சயமா பெரிய சவால். எல்லோரையும் கலந்து, ஒவ்வொரு முடிவையும் நாலு முறை பரிசீலிச்சுட்டுதான் எடுக்குறேன். தப்பாயிடக்கூடாதுங்கிற எண்ணம்தான் பெரிய நெருக்கடி!
இந்த ஓராண்டில் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட ஒன்று, ‘கருணாநிதி நல்ல உடல்நிலையில் இருந்திருந்தால் இந்தந்த விஷயங்களில் எப்படி முடிவெடுத்திருப்பார்?’ என்பது! முடிவெடுப்பதில் உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு தெரிகிறது…
பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்த பாதைதான் இன்னைய திமுகவோட பாதை. மூணு பேரோட லட்சியங்களும் வேறுபட்டதில்லை. ஆனா, அணுகுமுறைகள் வேறுபடும். ஆளுமை சம்பந்தமான விஷயம் மட்டும் இல்லை அது. எதிர்கொள்ற காலகட்டம், உடனிருக்குற ஆட்கள், சூழல் எல்லாம் சேர்ந்து தீர்மானிக்குறது. தலைவரோடான ஒப்பீட்டை எப்பவும் நான் விரும்பினதில்லை. அவரோட உயரம் வேறு. நீங்க சமகாலத் தலைவர்களோட என் செயல்பாட்டை ஒப்பிடுங்கன்னு கேட்டுக்குவேன். விமர்சனங்களைத் திறந்த மனதோடதான் அணுகுறேன். ஆனா, நீங்க சொல்ற விமர்சனங்கள் வேற வகை. அதுக்குப் பின்னாடி சூட்சமமான திட்டங்கள் உண்டு. என் காதுக்கும் அதெல்லாம் வராம இல்லை. ‘கலைஞர் நல்லா இருந்திருந்தா இந்நேரம் இந்த ஆட்சியைக் கலைச்சிருப்பார்!’ அப்படிங்கிறதும் அதுல ஒண்ணு. குறுக்கு வழியில ஆட்சிக்கு வர்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. தலைவரும்கூட அப்படி எந்தக் கட்சியையும் உடைச்சு என்னைக்கும் ஆட்சிக்கு வந்ததில்லை. உள்ளபடி அவரோட ஆட்சிதான் இரண்டு முறை கலைக்கப்பட்டிருக்கு. இந்த பினாமி ஆட்சியை மக்கள் மூலமாத்தான் தூக்கியெறியணும்னு நான் நெனைக்கிறேன்.
சித்தாந்தத்தை அணுகுவதிலும் மாற்றம் இருக்கிறதா? ஏன் இதைக் கேட்கிறேன் என்றால், நாட்டின் மையச் சரடுகளில் ஒன்றான மதச்சார்பின்மையை அணுகும் பார்வைகளே இன்று மோடியின் காலத்தில் மாறுகின்றன. ராகுல் காந்தி கோயில் கோயிலாக ஏறி இறங்குவதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். பெரியார் ‘கடவுள் இல்லை’ என்றார். அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். இருவருமே மதச்சார்பின்மையின் பாதுகாவலர்கள்கள்தான்; ஆனால், அணுகுமுறைகள் வேறாக இருந்தன. உங்கள் அப்பா பெரியார் பாதையைத் தேர்ந்தெடுத்தார். உங்கள் பாதை அண்ணா பாதையா, பெரியார் பாதையா?
என் பாதை அண்ணா பாதை. அதேசமயம், அண்ணாவோட பாதையே பெரியார் பாதையோட நீட்சிதான்கிறதைச் சுட்டிக்காட்ட விரும்புறேன். நாத்திகராக இருந்த பெரியார்தான் ஆன்மிக உரிமைகள் எல்லா சமுகங்களுக்கும் கிடைக்கணும்னு இங்கே இறுதி வரைக்கும் போராடினார். என்னோட மனைவி கோயிலுக்குப் போற படங்களைப் போட்டு என்னை விமர்சிக்கிறாங்க. கல்யாணம் ஆன நாள்லேர்ந்து இது நடக்குது. ஒருநாளும் நான் தடுத்தது இல்லை. அது அவங்க நம்பிக்கை. விருப்பம். ஒரு பெண் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கங்கிறதுக்காகவே அவங்களோட விருப்பங்களைக் கைவிடணும்கிறது அடக்குமுறை. நான் அதைச் செய்ய மாட்டேன். எங்கம்மா சாமி கும்பிடுவாங்க. தலைவர் தடையா இருந்தது இல்லை. குன்றக்குடி அடிகளாரைப் பார்க்கப் போனப்போ திருநீறு பூசிக்கிட்டிருக்கார் பெரியார்; அடிகளார் நம்பிக்கையைக் குலைக்கக் கூடாதுங்கிறதுக்காக! தனிப்பட்ட மத உணர்வுகளை மதிக்கிறது; வழிபாட்டு உரிமையில சம உரிமையை நிலைநாட்டுறது, மதவாத அரசியலை எதிர்த்து உறுதியா நிக்குறது… திமுகவோட இந்தப் பாதையில் மாற்றம் இருக்காது.
ஆனால், உங்கள் உறுதிப்பாட்டின் மீது வெளியே ஒரு சந்தேகம் இருக்கிறது. உதாரணமாக பாஜகவுடனான உறவு. தினகரன் சொன்னதுபோலகூட இதுவரை ‘எந்தக் காலத்திலும் பாஜக கூட்டணி இல்லை’ என்று திட்டவட்டமாக நீங்கள் அறிவிக்கவில்லை…
பல முறை சொல்லிருக்கேன். ஒரு முறை தவறு செஞ்சுட்டோம், இனி எந்தக் காலத்திலும் பாஜக கூட்டணி கிடையாது. ஆனா, தினகரனோட என்னை ஒப்பிடாதீங்க. பாஜக ஒப்புக்கிட்டா கூட்டணிக்குப் போயிருக்கக் கூடியவர்தான் அவர். அவங்க இவரை ஏத்துக்கலை. சுத்தி வழக்குகள் அழுத்துதுங்கிறதால இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கார். நான் மதவாத அரசியலைத் தொடர்ந்து எதிர்த்துக்கிட்டிருக்கேன்.
உங்கள் பார்வையில் இன்றைய திமுகவின் பெரிய பலம் என்ன, பலவீனம் என்ன?
திமுகவின் பெரிய பலம், அதன் தொண்டர்கள் – மிக வலுவான கட்சியோட கட்டமைப்பு. பலவீனம், மூணு தளங்கள்ல இயங்குற அந்தக் கட்டமைப்பின் தளங்களுக்கு இடையில இருக்குற இடைவெளி. மேலே தலைமைக் கழகத்துக்கும் மாவட்ட கழகத்துக்கும் இடையில ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கு. ஆனா, மாவட்டக் கழகத்துக்கும் கீழ்நிலை நிர்வாகிகளுக்கும் இடையில ஒரு இடைவெளி இருக்குறதை உணர முடியுது. அதைக் குறைக்கணும். கட்சியோட அடித்தளமா இருக்குற கீழ்நிலை நிர்வாகிகள், தொண்டர்களோட குரல் கட்சியோட செயல்பாட்டுல அதிகம் எதிரொலிக்கணும். அவங்க எண்ணங்களுக்கு ஏற்ப கட்சியைப் பலப்படுத்தணும். இதுக்காகத்தான் ஒரு பயணத்தைத் தொடங்குறேன். மாநிலம் முழுக்க எல்லா நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அடுத்த ஒரு மாசம் முழுக்க சந்திக்கிறேன். மக்கள் விரும்புற மாற்றத்துக்குக் கட்சிக்காரங்களும் தயாராகணும்!
மக்கள் உங்களிடமிருந்து பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். முக்கியமாக திமுக தன்னுடைய தவறுகளிலிருந்தும் குறைகளிலிருந்தும் சீக்கிரம் வெளியே வர வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்…
ஒரு பெரிய இயக்கத்தில் நடக்குற எந்த ஜனநாயகபூர்வ மாற்றமும் மெல்லதான் நடக்கும். ஜெயலலிதா தன் மேல உள்ள தவறுகளை மறைக்க ஆட்களைக் கொத்துக்கொத்தா பதவியிலிருந்து தூக்குவாங்க. உடனே ‘அதிரடி நடவடிக்கை’ன்னு பத்திரிகைகள் எழுதும். ஆறு மாசம் கழிச்சு கமுக்கமா ஒவ்வொருத்தருக்கா பதவியைத் திரும்பக் கொடுப்பாங்க. அது இல்லை மாற்றம். இங்கே நிறைய நடந்துக்கிட்டிருக்கு. சின்ன விஷயங்கள்லகூட. துண்டு போர்த்துற கலாச்சாரத்துக்குப் பதிலா புத்தகங்கள் கொடுக்குறதைக் கொண்டுவந்திருக்கோம். ஆடம்பர வரவேற்பு வளைவுகளைத் தவிர்த்திருக்கோம். திமுகவுலேர்ந்து பிரிஞ்சதாலேயே பங்காளிச் சண்டை மாதிரி திமுக – அதிமுக இடையில ஒட்டுறவு இல்லாத கலாச்சாரம் இருந்துச்சு. ‘அவங்க எப்படி வேணும்னாலும் நடந்துகட்டும்; நாம ஆக்கபூர்வமா நடந்துக்குவோம்; மக்கள் நலன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்கள்லேயும் அதிமுகவோட கலந்துப்போம்’னு முடிவெடுத்தோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல தினகரன், மதுசூதனன் ரெண்டு பேரும் ஓட்டுக்குக் கட்டுகட்டாப் பணம் கொடுத்தப்போ திமுக உறுதியா அந்தத் தப்பைச் செய்யுறதில்லைனு நின்னுச்சு. தவறு செய்யாத மனிதர்கள்னு யார் இருக்கா? இயக்கங்களுக்கும் அது பொருந்தும். திமுக தன்னோட தவறுகளிலிருந்து வெளியே வந்துட்டுருக்கு. அதை முழுசா மீட்டெடுக்கத்தான் மெனக்கெட்டுக்கிட்டு இருக்கேன். இனி பழைய தவறுகள் திரும்ப நடக்காதுன்னு சொல்வேன்!
ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியை உங்களுடைய தோல்வி என்றும் சொல்லலாமா?
ஆர்.கே.நகரில் திமுக களமிறக்கின மருதுகணேஷ் சாதாரண குடும்பப் பின்னணியில வந்தவர். மக்கள்கிட்ட ஓடி ஓடி வேலை செஞ்சவர். மக்களோட அபிமானம் இருந்தும் அவர் தோற்கக் காரணம் பணம். மருதுகணேஷோட தோல்வின்னு அதை முடிச்சுட முடியாது. நம்ம தேர்தல் அமைப்போட தோல்வி அது. ஜனநாயகத்தோட தோல்வி. அது என் தோல்வின்னும் சொன்னீங்கன்னா ஏத்துக்குறேன்!
தலை தூக்கிவரும் சாதியம் மதவியத்தை எதிர்கொள்ள திமுக என்ன செயல்திட்டத்தை வைத்திருக்கிறது?
சாதி, மதத்தைத் தாண்டி சக மனுஷனை நேசிக்கிறதுங்குறதைக் கட்சி எல்லைகளைத் தாண்டி தமிழ்நாட்டுக்குப் பெரியாரும் அண்ணாவும் கற்பிச்சுட்டு போயிருக்காங்க. ‘தமிழ், தமிழர்’ங்கிற உணர்வுதான் சாதி, மத எல்லைகளைத் தாண்டி நம்மளை ஒன்றிணைக்குற உயிர் நரம்பு. தமிழை வெச்சு சாதி - மத வெறியாட்டத்தை அடிச்சுத் துரத்துவோம்.
ஆனால், தமிழ்த் தேசியம் பேசுபவர்களும்கூட இப்போது ‘தமிழ்ச் சாதிகள்’ என்று பேசும் காலம் உருவாகியிருக்கிறது…
திமுகவுக்கும் அவங்களுக்கும் இங்கேதான் வித்தியாசம் வருது. திராவிட இயக்கம்ங்கிறது பிராமணரல்லாதோர் இயக்கமா தொடங்கப்பட்டாலும் பிராமணர்கள் உள்பட எல்லாச் சமூகங்களையும் தமிழுக்குக் கீழ உள்ளடக்கின இயக்கமா திமுகவை உருமாத்திக் கட்டமைச்சார் அண்ணா. தமிழ்ங்கிறது எல்லோரையும் ஒன்றிணைக்கணும்; யாரையும் வெளித்தள்ளக் கூடாது.
திராவிடக் கட்சிகளைத் தங்கள் பாதுகாவலர்களாகக் கருதும் தலித்துகள், இஸ்லாமியர்கள் இரு சமூகத்தினரிடத்திலுமே இளைய தலைமுறையினரிடம் ஒரு விலகலைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் இங்கே இல்லை என்று நினைக்கிறார்கள். சமூகநீதி அரசியல் பேசும் திமுக இதற்கு என்ன தீர்வை வைத்திருக்கிறது?
நாட்டிலேயே ஜனநாயகப்படி உட்கட்சித் தேர்தலை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்குற கட்சி திமுக. ஆனா, அதிலேயும் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவங்க பாதிக்கப்பட்டப்போதான் கட்சி பதவிகள்லேயும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார் தலைவர். ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் அடுத்த நிலையில் மூன்று துணைச் செயலாளர் பதவிகளை உருவாக்கினோம். மூணுல ஒண்ணு பெண்களுக்கானது, ஒண்ணு பட்டியல் இனத்தவருக்கானது, ஒண்ணு பொது. இப்படி ஒன்றியம், வட்டம், கிளைக் கழகம் வரைக்கும் ஒதுக்கீடு உண்டு. இந்தியாவுல வேறு எந்தக் கட்சியிலேயும் இப்படிக் கிடையாது. அடுத்து, சிறுபான்மையினர் அணி, ஆதிதிராவிடர் குழுக்கள் இப்படின்னு மட்டும் இல்லாமல் தொழில்வாரியாகூட அணிகளை உண்டாக்கினோம். இதெல்லாம் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது அதிகரிக்கணும்கிற அக்கறையோட வெளிப்பாடுதான். ஆனா, அது முழுமை பெறலைங்கும்போது, இதையெல்லாம் தாண்டியும் கீழே தொடர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்குங்கிறது புரியுது. அதை முடுக்கிவிடற வேலையிலதான் இப்போ இறங்கியிருக்கோம்.
இன்றைய திமுகவின் பெரிய பலகீனங்களில் ஒன்று, உங்களுக்கு அடுத்த நிலையில் வலுவான அடுத்த தலைமுறைத் தலைவர்கள் வரிசை என்று ஒன்று வெளியே தெரியவில்லை என்பது. இருக்கிறார்களா? இருந்தால், அவர்களை எப்போது, எப்படி வெளியே கொண்டுவரப்போகிறீர்கள்?
ஒரு படையே இருக்குறாங்க. சீக்கிரம் பார்ப்பீங்க.
அதிமுக அரசுக்கு எதிரான அதிருப்தி அப்பட்டமாகப் பொதுவெளியில் தெரிகிறது. இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கான உண்மை இன்னும் அந்த அதிருப்தி அலை திமுகவுக்கான ஆதரவு அலையாக மாறவில்லை என்பது. அப்படி மாற்ற என்ன செய்யப்போகிறீர்கள்?
தேர்தல் நெருங்குறப்போதான் அப்படி மாறும். நான் உங்களுக்கு 1996 தேர்தலை ஞாபகப்படுத்துறேன். இப்ப மாதிரியே அப்பவும் அதிமுக ஆட்சி மேல கடுமையான அதிருப்தி இருந்துச்சு. ஆனா, தேர்தல் அறிவிக்கப்படுற வரைக்கும் திமுகவுக்கான ஆதரவா அது வெளியே தெரியவே இல்லை. பின்னாடி எல்லாம் தலைகீழா மாறுனுச்சு. முந்தின தேர்தல்ல 164 இடங்கள்ல ஜெயிச்ச அதிமுக வெறும் 4 இடத்துக்குத் தள்ளப்பட்டுச்சு. மக்களோட உணர்வு எப்பவும் நீறுபூத்த நெருப்பாதான் இருக்கும். தமிழ்நாட்டுக்கு இன்னைய அதிமுக இழைக்கிற துரோகங்களைப் பார்த்து மக்கள் கொந்தளிச்சுட்டு இருக்காங்க. நான் தேர்தலைக் கணக்கு வெச்சு எதையும் செய்யணும்னு நெனைக்கலை. மக்களுக்கு நாம செய்யுறதைச் சரியா செஞ்சா தேர்தல் வெற்றிகள் தானா வரும்.
இன்றைய அதிமுக அரசின் பெரிய வீழ்ச்சி என்று எதைக் கருதுகிறீர்கள்?
பதவிக்காகத் தமிழ்நாட்டு உரிமைகளைப் பறிகொடுத்துக்கிட்டே இருக்குறது. எல்லா விமர்சனங்களையும் தாண்டி ஒரு பெண்ணாக எல்லாச் சவால்களையும் எதிர்த்துத் துணிஞ்சு நின்னவங்கங்கிற மரியாதை ஜெயலலிதா மேல எப்பவும் உண்டு. அரசியல்ல அவங்க மேல அப்படி இருந்த மரியாதை, தமிழ்நாட்டோட உரிமைகளைப் பாதுகாக்குறதுல அவங்க காட்டின உறுதி. நீட் தேர்வு, உதய் திட்டம், ஜிஎஸ்டி எதையும் அவங்க ஏத்துக்கலையே? பதவிக்காக இவங்க எல்லாத்தையும் அடமானம் வெச்சிட்டுல்ல நிக்கிறாங்க?
ஆனால், இவ்வளவு பலகீனப்பட்டும் அதிமுகவிலிருந்து யாரும் திமுக பக்கம் வரவில்லையே, என்ன காரணம்?
ஆனமட்டும் சுருட்டிடணும்கிற ஒரே எண்ணம்தான். அப்புறம் வெறும் பணத்துக்காக அரசியல்ல நீடிக்கிற யாரையும் நாங்க இங்கே எதிர்பார்க்கவும் இல்லை.
அதிமுகவின் எதிர்காலத் தலைமை யார் கையில் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அது அதிமுகவோட உட்கட்சி விவகாரம். வேணாம்னு நெனைக்கிறேன்.
சரி, அடுத்த தேர்தலில் நீங்கள் எதிர்கொள்ளக் கூடிய பெரிய எதிரி யாராக இருப்பார் என்று நினைக்கிறீர்கள்?
மதவியம், பணநாயகம்!
ரஜினி - கமல் இருவரின் அரசியல் அறிவிப்புகளையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இரண்டு பேருமே தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர்கள். சினிமா இல்லை அரசியல். களத்துக்கு வரும்போது பார்க்கலாம்.
ஆன்மிக அரசியல் எனும் பதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆன்மிகத்தை நிறுவனமாக்க முற்படுறப்போதான் மதம் பிறக்குது. நிறுவனப்படுத்தப்பட்ட மதம் ஆட்சியதிகாரத்தைத் தன் கையில வெச்சிக்கிட்டு மக்களை வதைக்கிறப்போதான் மதச்சார்பின்மைங்கிற தத்துவம் பிறக்குது. ஆன்மிகத்தைத் தனியாகவும் அரசியலைத் தனியாகவும் பார்க்க அது நமக்கு கத்து தருது. ரஜினி மறுபடி தலைகீழாக்கப் பார்க்கிறார். நாட்டுக்கு அது நல்லது இல்லை!
எதிர்க்கட்சிகளே கூடாது என்று முன்னகரும் பாஜகவை எப்படி எதிர்கொள்ளப்போகிறது திமுக?
எதிர்க்கட்சின்னு ஒண்ணே இருக்கக் கூடாதுன்னு பாஜக நினைக்குது. காங்கிரஸோட மாநிலக் கட்சிகளையும் அது பெரிய எதிரியா பார்க்குது. மாநிலக் கட்சிகளை அப்படியெல்லாம் அழிச்சுட முடியாது. திமுக, அதிமுகவையே எடுத்துக்குவோம். எப்படி ஐம்பது வருஷமா தேசிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி இந்த இரு கட்சிகளும் நிற்குது? தமிழ்நாட்டு மக்களோட குரல் அதுல அடங்கியிருக்கு. மக்களோட தேவையை நிறைவேத்தாம அவங்களோட குரலை அமுக்கிட முடியாது. மாநில சுயாட்சிக்காக அறுபது வருஷமா திமுக குரல் கொடுத்துக்கிட்டு இருக்கு. இன்னும் அது நாடு தழுவின தேசிய விவாதம் ஆகலை. பாஜகவோட இந்த அகங்காரமும் சதி வேலைகளும் அதை தேசிய விவாதம் ஆக்கும். ‘கூட்டாட்சி முறையை ஓரரசு முறையாக்கும் முயற்சிக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பின் ஈட்டிமுனையாக திமுக செயல்படும்’னு சொன்னார் அண்ணா. அதுக்கான நேரம் இப்போ உருவாகியிருக்குன்னு நெனைக்கிறேன்.
இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்… ஆனால், டெல்லியில் திமுகவின் குரலையே கேட்க முடியவில்லையே?
டெல்லியில இன்னைக்கு திமுகவோட பலம் என்ன? மக்களவையில ஒரு இடம்கூட கிடையாது. மாநிலங்களவையில நாலு பேர். கொஞ்சம் பொறுங்க... பாருங்க!
சித்தாந்தரீதியாக திமுக ஒரு சரிவைக் கண்டிருக்கிறது; அதன் விளைவே தேர்தல் அரசியலில் அது அடைந்துவரும் பின்னடைவு என்பதை திமுகவின் சித்தாந்திகளே ஒப்புக்கொள்கிறார்கள். இதை எப்படிச் சீரமைக்கப்போகிறீர்கள்?
தேர்தல் முடிவுகளையும் சித்தாந்த சரிவையும் ஒப்பிடுறது சரியான ஒப்பீடா எனக்குப் படலை. ஏன்னா ‘எங்களுக்கு எந்தச் சித்தாந்தமும் இல்லை’னு சொல்ற ஆம்ஆத்மி கட்சியும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்காங்க. தமிழ்நாட்டை எடுத்துக்குவோம். அதிமுகவோட சித்தாந்த பலம் என்ன? சித்தாந்தரீதியா திமுக தன்னைப் பலப்படுத்திக்க வேண்டியிருக்கு; எதிர்வர்ற காலத்துக்குத் தயாராக வேண்டியிருக்கு. ஒப்புக்குறேன். ஆனா, தேர்தலோட அதை ஒப்பிட வேண்டியதில்லை. ரொம்ப சீக்கிரம் தமிழக மக்கள் விருப்பப்படி திமுக நிமிர்ந்து நிற்கும்!
-சமஸ்,தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
நன்றி: தமிழ் இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக