திங்கள், 15 ஜனவரி, 2018

காணும் பொங்கல் : கடலில் குளிக்கத்தடை!

காணும் பொங்கல் : கடலில் குளிக்கத்தடை!மின்னம்பலம் :காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினாவில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள் கொண்டாட்டமாக நாளை (ஜனவரி 16) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் குடும்பத்துடனும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் பூங்கா, பொருட்காட்சி உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்வார்கள். சென்னை மக்கள் காணும் பொங்கலை கொண்டாட நாளை கடற்கரை பகுதிகளில் குவிவார்கள். அதன்படி, அண்ணா நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை மக்கள் திரண்டிருப்பார்கள். காணும் பொங்கல் அன்று உற்சாக மிகுதியில் சிலர் கடலுக்குள் சென்று குளிக்க முயற்சி செய்வார்கள்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் கல்லுக்குட்டை முதல் கலங்கரை விளக்கம் வரை சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிகளுக்காக 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 15 ஆயிரம் போலீஸார் குவிக்கப்படுகிறார்கள். மேலும், 10 கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி பாம்பு பண்ணை, மாமல்லபுரம் கடற்கரை போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் பாதுகாப்பிற்காக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர், மீனவ நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரம் கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக 300 மீட்டர் தூரத்துக்கு சவுக்கு கம்பால் தடுப்பு கட்டப்பட்டுள்ளது. பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போகும் குழந்தைகளை மீட்டு ஒப்படைப்பதற்காக உழைப்பாளர் சிலைக்கு பின்பகுதியில் 2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மெரினாவில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் வகையில் கைகுழந்தைகளின் கையில் வளையம் கட்டப்படும். அந்த வளையத்தில் பெற்றோரின் செல்பேசி எண், அண்ணா சதுக்கம், மெரினா காவல் நிலையம் செல்பேசி எண், அவற்றின் போலீஸ் காவல் ஆய்வாளர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு, காணும் பொங்கலின் போது வண்டலூர் பூங்கா மூடப்பட்டிருந்ததால், பெரும்பாலான மக்கள் மெரினாவிலும், பெசண்ட் நகர் கடற்கரையிலும் குவிந்தனர். கூட்டத்தில் பல குழந்தைகள் காணாமல் போயினர். அதைத் தொடர்ந்து, காணாமல் போன 151 குழந்தைகளைக் கையில் கட்டப்பட்ட வளையத்தின் மூலம் போலீஸார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக