வெள்ளி, 26 ஜனவரி, 2018

வீரமணி : சங்கர மடங்கள் மீது போராட்டம் நடத்தப்படும் ,.. விஜெந்திரர் மன்னிப்பு கேட்காவிடில்

மின்னம்பலம் :விஜயேந்திரர் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கரமடங்கள் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
தினமணி நாளிதழ் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து பேசியது சர்ச்சைக்குள்ளாகவே, பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவித்திருந்தார்.
ஹெச்.ராஜா தந்தை ஹரிஹரன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த 23 ஆம் தேதி ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்ற நிலையில், விஜயேந்திரர் மட்டும் அமர்ந்திருந்தார். இது தமிழக மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த சங்கராச்சாரி விஜயேந்திரர் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கரமடங்கள் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி இன்று(ஜனவரி 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்மொழியை சங்கராச்சாரியார் அவமதித்து விட்டார் என்ற கோபம் கொந்தளித்து நின்ற நேரத்தில் காஞ்சி சங்கர மடத்திலிருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான செய்தி அறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கெல்லாம் எழுந்து நிற்பது, சங்கர மடத்தின் சம்பிரதாயம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததானது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததாகி விட்டது. அதே நேரத்தில் சரஸ்வதி வந்தனா பாடியிருந்தால் இதே சங்கராச்சாரியார் இப்படி நடந்து கொள்வாரா?
தமிழை நீஷப் பாஷை என்றும், சமஸ்கிருதத்தை தேவபாஷை என்றும் கருதுவது சங்கர மடத்தின் வாழையடி வாழை மனப்போக்காகும். அந்தத் துவேஷம் தான் இங்கு பிரதிபலித்துள்ளது.உலகில் 10 கோடி மக்களுக்கு மேல் பேசப்படும் செம்மொழியான தமிழை ஒரு பொது இடத்திலேயே ஆளுநர் முன்னிலையில் அவமதித்தது என்பது மிகப் பெரிய குற்றமாகும்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய கீதம் பாடப்பட்ட பொழுது சங்கராச்சாரியார் எழுந்து நின்றது ஏன்? அந்த நேரத்தில் தியானம் கலைந்து விட்டதா என்றும் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக