திங்கள், 8 ஜனவரி, 2018

தமிழிசை தமிழக பாஜக தலைவர் பதவியை விட்டு விலகினார்....இன்னும் உறுதியாகவில்லை

தமிழிசை ராஜினாமா?மின்னம்பலம் : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாகத் தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனைத் தோற்கடித்து தினகரன் வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் நோட்டாவைவிட (2,373 வாக்குகள்) குறைவான வாக்குகளைப் (1,417 வாக்குகள்) பெற்று தோல்வியைத் தழுவினார். இது பல்வேறு தரப்பிலும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், இதற்கு விளக்கம் அளித்த தமிழிசை, ‘நோட்டா வாக்குகள் பாஜகவுக்கு மட்டும் எதிரானது கிடையாது. அனைத்துக் கட்சியினருக்கும் எதிரானது’ என்று விளக்கம் அளித்திருந்தார்.

இடைத்தேர்தலுக்கு முன்பாகவே தேசியத் தலைமைக்கு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நமக்குச் சாதகமான முடிவுகளைப் பெற்றுத் தராது. எனவே, இடைத்தேர்தலில் நாம் போட்டியிடுவது வீணானது” என்று தெரிவித்திருந்தாராம் தமிழிசை. இருந்தாலும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி என்பதால் போட்டியிட்டே ஆக வேண்டும் என்ற பாஜகவின் மற்ற கோஷ்டி தலைவர்கள் நெருக்கடி அளித்தனர். இதையடுத்து வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிக்கப்பட்டார். ஆனால், இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தேர்தல் தோல்விக்கு தமிழிசைதான் காரணம் என்ற ரீதியில் எதிர்க் கோஷ்டியினர் டெல்லி தலைமையிடம் புகார் கூறியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து தேசியத் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் தமிழிசையிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த வலைதளப் பதிவர் கல்யாண ராமன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “டாக்டர் தமிழிசை அவர்கள் 27ஆம் தேதியே ராஜினாமா செய்துவிட்டதாக வரும் தகவல்கள் உண்மை என்றால் அவருக்கு எனது பாராட்டுகள்...” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ஒரு சிறிய மாற்றுத் தகவல். “டாக்டர் தமிழிசை அவர்கள் ராஜினாமா செய்த தேதியை 28 என மாற்றிப் படிக்கவும்... ராஜினாமா உறுதி செய்யப்பட்ட தகவல்...” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக