செவ்வாய், 9 ஜனவரி, 2018

சபா கச்சேரிகள் மட்டுமே ’சங்கீதம்’ என்பதை தகர்த்தெறிந்த கானா விழா

Govi Lenin  : சென்னையை பாரம்பரிய இசை நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள நிலையில், மார்கழி சீசன் சபா கச்சேரிகள் மட்டுமே ’சங்கீதம்’ என நிறுவப்பட்டதை தகர்த்தெறியும் முயற்சிகளில் ஒன்றுதான் இயக்குநர் பா.ரஞ்சித் முன்னெடுத்த Casteless Collective கானா விழா. இத்தகைய இசையரங்குகள் இன்றைய தேவை. டி.எம்.கிருஷ்ணா போன்ற சபா பாடகர்களும் மீனவர்கள் வாழும் பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவது பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத மாற்றம்.
அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே, இதுபோன்ற சபா கச்சேரிகளுக்கு சவாலாகத்தான் தமிழிசையை முன்னெடுத்தார் பெரியார். தமிழிசை சங்கங்களை பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் ஆதரித்தனர். அந்த ஊக்கத்தின் விளைவுதான், இன்றும்கூட ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழிசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. பா.ம.க.வின் பொங்கு தமிழ் அறக்கட்டளை மேற்கொள்வதும் இத்தகையப் பணிகள்தான். முன்பு, மாணவர் நகலகம் அருணாசலம், தந்தை பெரியார் தமிழிசை மன்றம் மூலமாக ‘மார்கழி சபா’க்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் தமிழிசை நிகழ்ச்சிகளை நடத்தினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் இத்தகைய இசை நிகழ்வுகளில் கவனம் செலுத்துகின்றன.
இசை என்பது கலை என்பதைக் கடந்து, அது எளிய மக்களின் கருவி என்பதையும் அதிகாரத்தைப் பணிய வைக்கும் ஆயுதம் என்பதையும் ம.க.இ.க. போன்ற அமைப்புகள் கடந்த கால் நூற்றாண்டு காலமாக உணர்த்தி வருகின்றன.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா நேரத்தில், ”தமிழில் பாடு.. இல்லையேல் .ஒடு..” எனப் பறை முழக்கி, குரல் எழுப்பிய தோழர்களின் தொடர்ச்சியாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவன், தமிழிசையை ஆயுதமாக ஏந்தி ஆள்வோரை நடுங்க வைக்கிறார்.
பண்பாட்டுத் தளத்தில் மிகப் பெரும் மாற்றத்தை உருவாக்கிய திராவிட அரசியல் கட்சிகளில் கலை-இலக்கிய அணிகள் இருக்கின்றன. ஆனால், கட்சி விழா மேடைகளில் ‘போற்றி’ப் பாடுகின்ற முக்கிய பணியில் அவை இருப்பதால், பண்பாட்டு மாற்றத்திற்கான ‘சில்லறை’ வேலைகளை மேற்கொள்வதில்லை.
தி.பி.2048 மார்கழி 25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக