ஞாயிறு, 28 ஜனவரி, 2018

பத்ம விருதுகள் ...பார்ப்பனீயத்தின் நமக்கு வாய்த்த அடிமை அங்கீகாரம்தான் அது!

தமிழ் மறவன் விருதுகள் வெற்றி பெறுவதில்லை! ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே தங்களின் வாழ்வில் போராட அணியமாகும் கலை, இலக்கியவாதிகளே வரலாற்றில் நிலைப்பார்கள், மாறாக, தங்களின் சுகவாழ்வைப் பற்றியே சிந்திக்கவும், ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராகவும், தான் உண்டு தன் தொழிலுண்டு என வாழும் கலை,இலக்கியத் துறையில் வாழும் சுயநலவாதிகளை வரலாறு குறித்துக் கொள்வதேயில்லை. இப்படிப்பட்ட திறமையாளர்களால் அவர்களின் குடுபத்தினரைத் தவிர எவருக்கும் பயனில்லை எனும்போது அந்த சுயநல கலை,இலக்கியலாளர்களுக்கு தரும் விருதுகளா நம் சுயமரியாதையை மீட்கும்?
இல்லவேயில்லை! மாறாக; பார்ப்பனீய அடிமைகளாக தொடர்வதற்கான அங்கீகாரம் தருவதே விருதுகளின் உள்ளீடு! ஆம் ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சனையாய் பெற்ற அயோக்கிய துரோணாச்சார்யன் பெயரில் விருதுகள் வழங்குதலும், இனத்துரோகி விபீஷணன் பெயரில் விருது வழங்குதலும் ஆரியத்திற்க்கு பெருமை தரலாம். அவ்விருதுகளை கைநீட்டிப் பெறுவதோ தனமானத்திற்க்கும், இனமானத்திற்க்கும் பெரும் இழுக்கு.
“நமது இலக்கியம், மொழி, சட்டம், அரசு எல்லாமே சாதி காப்பாற்றுபவை. இதுகாறும் வந்த சீர்திருத்தவாதிகள் எல்லாரும் இந்த அடித்தளத்தை அப்படியே வைத்துவிட்டு மேற்தளத்தில் இருந்த ஓட்டை உடைசல்களை மட்டுமே பூசிக் கொண்டிருந்தனர்.


 நான் மட்டுமே அடித்தளத்தையே தகர்க்க வேண்டுமென்கிறேன். எனவே தான் எல்லோராலும் நல்லது எனக் கூறப்பட்டவற்றை நான் கெட்டது என்கிறேன். எல்லோரும் கெட்டது என்பதை நல்லது என்கிறேன். எல்லோரும் உண்டு என்பதை நான் இல்லை என்பேன். எல்லோரும் இல்லை என்பதை நான் உண்டு என்பேன்.....” என்றார் தந்தை பெரியார். அவரால் முழங்கப்பெற்ற வாசகங்கள் எல்லாவற்றையும் "மறுத்தல்" என்பதற்கான ஒரு வரையறையாகவே அமைந்தது. அதுவே இம்மண்ணில் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை முழக்கமாய் அமைந்தது.
தற்போது அவரால் சமூகநீதியின் உரிமைகளை கிடைக்கப் பெற்றோர் அனைத்தையும் மறுக்காவிடிலும் விருதுகளின் மீதான போலிபற்றுகளைக் கூட விட்டுத்தர தயாரில்லை என்பது உண்மையில் வேதனையான செய்திதான்.
ஆம் தோழர்களே! தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த இசைஞானி, ஆரியர்களின் மிக உயர்ந்த விருதான பத்மவிபூஷன் எனும் விருதைப் பெறுகிறார்.
தன் உடன்பிறந்த அண்ணன் "நல்யாழின் நரம்புதனைத் தடவி நிறை இசை செவி அமிழ்து தரும் மாபெரும் புலவன்" இராவணனை பார்ப்பனர்களுக்கு காட்டிக் கொடுத்த விபீஷணன் பெயரில் இவருக்கு விருது வழங்குவது மிகப்பொருத்தமான செயலாகவே பார்க்கலாம்.
தன் அண்ணன் இராவணனை வீழ்த்த இராமனுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து, இராவணனை வீழ்த்தி இலங்கை ஆட்சியை விருதாக வாங்கிக் கொண்டான் விபீஷணன்.
மக்கள் பாவலர் வரதராஜன் இளையராஜாவின் உடன்பிறந்த அண்ணன். தன் வாழ்நாள் முழுக்க உழைக்கும் மக்களுக்காக தன்னை ஈந்த பண்பாளர். இளையராஜாவிற்கு ஆசானாய், தாயாய், தந்தையாய் இருந்த வழிகாட்டி, கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றவர். பிற்காலத்தில் தி.மு.கழக மேடைகளில் இந்தி திணிப்பிற்க்கு எதிராய் முழங்கியவர். அப்படிப்பட்ட போராளி பாவலர் வரதராஜனிடம் இசைக்கலை பயணத்தை துவங்கி இன்று பார்ப்பனீயத்தின் காலடியில் தன் இசையை மண்டியிட்டு விருது பெற்ற இளையராஜாவிற்க்கு இவ்விருது பொருத்தமானதே!
இளயராஜாவின் செயல் "விபீஷணன்" செயலுக்கு ஒப்பானதன்றோ!
ஒன்றை இங்கே அழுத்தமாக நினைவில் வையுங்கள். இவரின் இசை மூலமாக தமிழுக்கோ, தமிழருக்கோ, மானுட சமூகத்திற்கோ எந்நாளும் கிஞ்சித்தும் பயனடைந்ததே இல்லை. மாறாக இவரின் இசை இவரை மட்டுமே வளர்தெடுத்தது என்பதே உண்மை.
சமூக இழிவுகளை கண்டிக்கிற புரட்சிக்காரன், பெரியார் திரைப்படங்களில் இசையமைக்க மறுத்து தன்னை ஓர் தேர்ந்த விபீஷணனாக காட்டிக் கொண்டவர் இளையராஜா.
"கலை,இலக்கியம் யாவும் மக்களுக்கானதே" என்றார் மாவோ.
“கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள் ; அவர்கள் கலை இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்!” என்றார் மாவோ.. அதன் பொருள் என்னவெனில் தங்களின் கலைத்திறன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்ட பலர் தான் வந்தபாதையை அல்லது கீழே பார்ப்பதை மறுப்பதையும், தன்னையும் மேட்டுக் குடிகளாக மாற்றிக் கொள்கிற போக்கையும் கண்டிக்கிறார். இந்தக் கண்டிப்பு இளையராஜாவிற்க்கு மெத்தப் பொருந்துமன்றோ!
புரட்சிகர இலக்கியமும், இசையும் கலையும் உண்மை வாழ்வினின்று வகை வகையான பாத்திரங்களைப் படைக்கின்றன; வரலாற்றை முன்னோக்கி உந்தித்தள்ள மக்களுக்கு உதவுகின்றன எனும் சூழலில் கலையும்,இசையும் மேட்டுக்குடி பார்ப்பன கர்நாடக இசையின் அங்கமாக்கி அம்பாளின் தொண்டராய் மாறும் இளையாராஜா போன்ற பக்திப் பழங்களால் ஆரியத்தின் மனம் குளிரத்தானே செய்யும்!
ஒரு நாளேட்டில் தலித் இளையராஜா எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டமைக்காக பொங்கிய நம் தோழமைகள் ஒன்றை உணர வேண்டும்.
இவர்களைப் போன்ற மேட்டுக்குடிகள் தங்களுக்காக போராடிய அம்பேத்கரையும், பெரியாரையும் நினைத்துப் பார்க்கக் கூட விரும்புவதில்லை. குறிப்பாக, படித்தவர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்ற அம்பேத்கரையோ, நகரங்களில் வாழும் படித்த தலித்துகளில் ஒரு பிரிவினரே தனது போராட்டங்களால் நன்மை அடைந்துள்ளனர் என்பதை உணர்ந்து தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் கண்ணீர் வடித்த அம்பேத்கரையோ, தன்னால் கிராமப்புறங்களில் வாழும் தலித்துகளுக்கு ஏதும் செய்ய முடியாமல் போனதே என்று வருந்திய அம்பேத்கரையோ அவர்கள் மறக்கவே விரும்புகின்றனர்.
இப்படிப்பட்வர்களுக்காக ஒருக்கால் இவர்களின் இரசிகர்கள் என்றாவது பயன்படலாமென சுயசாதிப் பற்றை மட்டுமே சீண்டிப் பயன்படுத்துகிற களவானிகளாய் இருப்பவர்களால் தமிழ்ச் சமூகத்திற்க்கு பயனேது?
முற்போக்கின்பால் இயல்பாய் வளர்ச்சி அடைகிற சமூகத்தை ஆன்மீக அரசியல் மூலம் பிற்போக்கு பார்ப்பனீயத்தின்பால் இழுத்துச் செல்லும் கடமையாற்றுகிற இளையராஜாவினாலும், அவரின் விருதுகளாலும் தமிழ்ச் சமூகத்திற்க்கு பெரும் இழிவும், ஆபத்தும்தான் வந்து சேரும்.
- மு.தமிழ் மறவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக